அக்ஷய் கண்களுக்கு நெடுஞ்சாலை தென்பட்ட போது ஆட்கள் சாலை முழுவதும் வழி மறித்து நிற்பதைப் பார்த்தான். அனைவர் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. இப்படியே நேராகப் போய் நெடுஞ்சாலையைச் சென்றடைவது தற்கொலைக்கு சமானம் என்பது புரிந்தது. பின்னால் திரும்பிப் போகலாம் என்றாலோ சலீம் இருக்கிறான். அத்தனை பேர்களை சமாளிப்பதை விட சலீம் ஒருவனை சமாளிப்பது ஓரளவு சுலபம் என்றாலும் அவன் திறமைகளை அக்ஷய் பரிசோதிக்க விரும்பவில்லை. பாதையின் இரு பக்கங்களிலும் தனியார் நிலங்கள் முள்வேலிக்குள் பத்திரமாக இருந்தன. அங்கே நிறைய மரங்களும், செடிகளும் இருந்தன.
அக்ஷய் சிறிதும் யோசிக்காமல் இடது புறம் இருந்த முள்வேலியை அனாயாசமாகத் தாண்டி உள்ளே குதித்து ஓடினான். உயரமாக இருந்த முள்வேலியை இப்படிக் கடந்து மரங்களுக்குள் மறைவான் என்று எதிர்பாராத சலீம் ஒரு கணம் திகைத்தான். அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.
முன்னாலும் பின்னாலும் ஆபத்து இருக்கையில் யாரானாலும் பக்கவாட்டில் தானே பாய்வார்கள், இந்த முள்வேலி எல்லாம் இவனுக்கு ஒரு பெரிய விஷயமா, ஏன் இதை முன்கூட்டியே யூகித்து வைக்கவில்லை என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான் சலீம். எல்லாம் அந்த கிழட்டு பிக்குவிடம் வாயைக் கொடுத்ததால் வந்த வினை என்று தோன்றவும் செய்தது.
ஆனால் அதையெல்லாம் யோசிக்க நேரமில்லை, அமானுஷ்யனைக் கொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று தனக்குள் அவன் சொல்லிக் கொண்டான். ஏனென்றால் அந்த வினாடியை அவன் சாதகமாகப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வான் என்பதில் சந்தேகமேயில்லை.
வந்த போது சலீம் அந்த இடத்தை நன்றாகப் பார்த்து மனதிற்குள் பதிவு செய்திருக்கிறான். அது அவன் தொழிலின் காரணமாகத் தானாக அவனுள் ஊறிப் போயிருந்த ஒரு பழக்கம். தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது சுற்று வட்டாரம் அத்தனையும் மிக முக்கியம். எந்த இடத்தில் என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது, யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ மூளை அப்படியே பதித்துக் கொண்டு விடும். ஏனென்றால் எதிர்பாராதது ஏதாவது ஒன்று நடந்து ஒரு திட்டத்தில் சிறிய மாற்றம் செய்ய நேரிட்டால் கூட இதில் முன்பு முக்கியமாகத் தோன்றாத ஏதாவது ஒரு விவரம் மிக முக்கியமானதாக மாறி விடலாம்.
அப்படி மூளையில் பதித்த விவரப்படி அந்த முள் வேலிக்குள் இருக்கும் இடத்தின் பரப்பு ஏறத்தாழ ஆறேழு ஏக்கர்கள் இருக்கக் கூடும். மரங்களும் காட்டுச் செடிகளும் நிறைந்த அந்த இடத்தின் மற்ற மூன்று பக்கமும் என்ன இருக்கின்றன என்று சலீம் யோசித்தான். அதைத் தாண்டினால் அந்தப் பக்கம் ஒரு பெரிய வணிக வளாகம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு முக்கால் பாகம் கட்டிட வேலை முடிந்திருக்கிறது. பின் பக்கம் ஒரு பெரிய குளம் இருக்கிறது. புத்தவிஹாரத்தின் முன் காத்திருந்த போது அதை அவன் கவனித்திருந்தான். முன் பக்கம் நெடுஞ்சாலை. கிட்டத்தட்ட 200 அடிகள் நெடுஞ்சாலைப் பகுதிப் பக்கம். நெடுஞ்சாலையிலும் நான்கு பக்கங்களிலும் உயரமான முள்வேலி இருந்தது.
இத்தனை தகவல்களையும் ஒருசில வினாடிகளில் கவனத்தில் எடுத்துக் கொண்ட சலீம், அமானுஷ்யன் இனி இந்த மூன்று பக்கங்களில் எந்தப் பக்கம் போவான் என்று யோசித்தான். அவன் தண்ணீருக்குள் மறையும் சக்தி படைத்தவனாக இருந்தாலும் கூட பின்பக்கம் குளத்தில் குதிக்க வாய்ப்புகள் குறைவு. நெடுஞ்சாலைப் பக்கம் போக அங்கு காத்திருக்கும் எதிரிகள் அவனுக்கு அனுகூலமாக இல்லை. அவனுக்கு அனுகூலமாக இருக்கும் ஒரே பக்கம் வணிகவளாகம் கட்டிக் கொண்டிருக்கும் பக்கம் தான். அங்கு தான் போக வாய்ப்புகள் அதிகம்.
உடனடியாக சலீம் முன்பு பேசியவனுக்கே போன் செய்தான். “அவன் பக்கத்தில் இருக்கும் முள்வேலிக்குள் குதித்ததைப் பார்த்தீர்களா?”
“ஆமாம். எங்கள் ஆட்களில் மூன்று பேர் உள்ளே குதித்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேருக்கு முள் நன்றாக கீறி விட்டது. ஆனாலும் அவர்கள் அவனை விட மாட்டார்கள். நாங்களும் உள்ளே குதிக்கவா?”
சலீம் தன் கோபத்தை அடக்கிக் கொள்ள கஷ்டப்பட்டான். “நான் தான் யாரும் நான் சொல்லாத எதையும் செய்ய வேண்டாம் என்று சொன்னேனே. இனி நான் சொல்லாமல் ஒரு சின்ன அசைவு கூட செய்யக் கூடாது. யாரும் உள்ளே குதிக்க வேண்டாம். அவன் நிரந்தரமாக இந்த இடத்திலேயே தங்கி விடப் போவதில்லை. அவன் திரும்பி வெளியே தான் வரப் போகிறான். அதனால் வேலிக்கு வெளியே நெடுஞ்சாலைப் பகுதியிலும், அந்தப் பக்கம் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் பக்கத்திலும் நில்லுங்கள். சீக்கிரம் போங்கள். தாமதம் செய்யாதீர்கள். தாமதித்தால் அவன் தப்பித்து விடுவான். அவனை நான் பின் தொடர்கிறேன்.”
“சார்…”
“என்ன?”
“ஜாக்கிரதையாக இருங்கள். அவன் நிஜமாகவே சைத்தான். அவன் உங்களை நெருங்க விட்டால் நீங்கள் உள்ளேயே கோமாவில் போக வைத்து விடுவான்…”
சலீம் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. பேசாமல் இணைப்பைத் துண்டித்தான். கதை பேச இது நேரமல்ல. இப்படி ஒரு அச்சுறுத்தல் இன்று இரண்டாம் முறையாக வருகிறது. முதலில் சொன்னது அந்த கிழட்டு பிக்கு. சலீமும் முள்வேலியைத் தாண்டி உள்ளே குதித்தான். அப்போது அமானுஷ்யன் தென்படவில்லை. மறைந்திருந்தான். போன் பேசிக் கொண்டிருந்த போதே அவன் நிறைய அடிகள் கடந்திருப்பான் என்பதை அவன் ஊகித்தான். ஆனாலும் சலீம் கவலைப்படவில்லை. அமானுஷ்யன் சுற்றி வளைத்துச் சென்று காலத்தை வீணாக்க மாட்டான் என்பதால் நேராக வேகமாக எதிர்பக்கத்திற்கு சலீமும் முன்னேறினான்.
வலது பக்கத்திலிருந்து தடதடவென்ற சத்தம் கேட்டது. உள்ளே குதித்த அந்த மூன்று முட்டாள்கள் வரும் சத்தம் என்று சலீம் நினைத்துக் கொண்டான். அதில் ஒருவன் வழுக்கி விழுந்த சத்தமும் கேட்டது. கீழே விழுந்திருந்த சருகுகள் சமீபத்தில் பெய்திருந்த மழையில் அழுகி வழுக்க வைப்பதாக இருந்தது. சலீம் வழுக்காமல் நகர நிறையவே கஷ்டப்பட்டான். சிறிது சென்ற போது தூரத்தில் அமானுஷ்யன் அனாயாசமாக நடந்து செல்வது தெரிந்தது. அவன் நடக்கும் போது வழியில் இருந்த செடி கொடிகளை விலக்கி விடுவதில் கூட ஒரு நளினம் இருந்தது. வழியில் உள்ள குழந்தைகளை அப்புறப்படுத்துவது போன்ற ஒரு மென்மையான விலக்கல் அது.
அதைக் கவனித்த போது சலீமிற்கு அவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவன் அந்த செடி கொடிகளைக் கூட நேசித்தது போல் இருந்தது. எதனுடனும் அவனுக்கு எதிர்ப்பு இல்லை, எதுவும் அவனுக்குத் தடை இல்லை என்பது போல் இருந்தது. அவன் அசைவுகளில் கூட ஒரு சின்ன தேவையற்ற அசைவு கூட இல்லை. அப்படிக் கூட அவன் தன் சக்தியை வீணாக்காமல் இருப்பதால் தான் அவன் களைப்பே இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றியது. சலீம் அந்த சருகுகளில் வழுக்காமல் வேகமாக நடக்கப் பழகிக் கொண்டான். விரைந்து நெருங்கி வரும் அவனை அக்ஷய் திரும்பிப் பார்த்தான்.
எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மாதிரி உடனுக்குடன் மாறிக் கொள்ளவும், பழகிக் கொள்ளவும் முடிந்த அவனை அக்ஷயும் மனதிற்குள் மெச்சினான். தூரத்தில் வேறு சிலர் வரும் காலடி ஓசையும் கேட்டது. ஆனால் அவர்களை அக்ஷய் பெரிதாக நினைக்கவில்லை. அவர்கள் கண்டிப்பாக அவனை நெருங்கி வரப் போவதில்லை. அக்ஷய் அந்தப் பக்கத்து முள்வேலியை நெருங்கினான். அதைத் தாண்டிக் குதித்தான்.
அவன் தாண்டிக் குதித்ததை சற்று தூரத்தில் சலீமின் கட்டளைப்படி துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்த ஆட்கள் பார்த்து ஓடோடி வந்தார்கள். அக்ஷய் அவ்வளவு சீக்கிரம் அவர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. முழுவதுமாகக் கட்டி முடிந்திருக்காத, வேலையாட்களும் யாருமில்லாத அந்த காலி வணிக வளாகத்திற்குள் வேகமாக நுழைந்தான்.
சலீம் தன் சர்வ பலத்தையும் சேர்த்து, தன் முழு மனதையும் தன் வேலையிலேயே ஒருமுகப்படுத்தி விரைவில் அந்த முள் வேலியைத் தாண்டி குதிக்கவும் போலீஸ் மற்றும் தலிபான் ஆட்கள் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. முன்பு அவனுடன் போனில் பேசியவன் ஓடி வந்து சொன்னான். “சார், அவன் உள்ளே போயிருக்கிறான்”
சலீம் மனதிற்குள் சபதம் செய்தான். “அமானுஷ்யன் உன் மரணம் இந்தக் கட்டிடத்தில் தான் நிகழப் போகிறது”. பிறகு தன்னிடம் தகவல் சொன்னவனிடம் சொன்னான். “யாரும் உள்ளே வர வேண்டாம். வெளியே அவன் வந்தால் முன்பே சொன்னபடி சேர்ந்து சுடுங்கள். இந்தக் கட்டிடத்தை சூழ்ந்து நின்று கொள்ளுங்கள். அவன் வாசல் வழியாகத் தான் வருவான் என்பதில்லை. அவன் மேலேயிருந்து குதிக்கவும் செய்யலாம். எல்லோரும் மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் கவனத்தை சிறிது கூட சிதற விடாதீர்கள். நாம் அவன் பிணத்தைப் பார்க்காமல் இங்கிருந்து நகரப் போவதில்லை என்று உறுதியாக இருங்கள்”
சொல்லி விட்டு சலீமும் உள்ளே நுழைந்தான். அவன் சொன்னபடி அவர்கள் அந்த கட்டிடத்தை சூழ்ந்து நின்று கொண்டார்கள். அதற்குள் இன்னொரு ஜீப் நிறைய போலீசார் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் சென்று சலீம் சொன்னதை அவனிடம் பேசியவன் தெரிவித்தான். அவர்களுக்கும் அமானுஷ்யன் விஷயத்தில் சலீமின் ஆலோசனைப்படி நடப்பதே நல்லது என்று மேலிடத்தில் சொல்லி அனுப்பப்பட்டதால் அவர்களும் சுற்றி நின்ற கூட்டத்தில் இணைந்தார்கள். எல்லோரும் ஒழுங்கான இடைவெளியில் நின்று கொண்டு அமானுஷ்யன் வெளியே எப்படி வந்தாலும் தீர்த்துக் கட்டி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றார்கள்.
அந்தக் கட்டிடம் நான்கு மாடிக் கட்டிடம். அமானுஷ்யன் உள்ளே நுழைந்தவன் இப்போது எந்த மாடியில் இருக்கிறான் என்பது சலீமிற்குத் தெரியவில்லை. அவன் கவனமாக மெல்ல நடந்தான். கண்களையும், காதுகளைத் தீட்டிக் கொண்டான். இப்போது ஒவ்வொரு சப்தமும் முக்கியம். அதனால் தான் வெளியே நின்ற தடியர்களை அவன் உள்ளே வர அனுமதிக்கவில்லை. கேட்கும் சத்தம் அமானுஷ்யனுடையது தானா, இல்லை அவர்களில் ஒருவனுடையதா என்று குழம்ப அவன் விரும்பவில்லை.
இரண்டாம் மாடியில் ஏதோ ஒரு தகர டப்பா உருளும் சத்தம் கேட்டது. அது அமானுஷ்யன் வேலை என்பது புரிந்தது. ஆனால் அமானுஷ்யன் எந்த அவசரத்திலும் எந்த பொருளையும் தெரியாமல் இடறி விடுவான் என்பதை அவன் நம்பத் தயாரில்லை. சிறிது ஏமாந்தாலும் அமானுஷ்யன் தன்னை ஆக்கிரமித்து கோமா நிலைக்கு உள்ளாக்கி விடலாம் என்பதை அறிந்திருந்த அவன் உடனடியாக இரண்டாம் மாடிக்கு ஓட முயற்சிக்கவில்லை. ஆனால் இரண்டாம் மாடியில் உள்ள தகர டப்பா ஒன்றை உருட்டுகிற அளவு அருகில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் அமானுஷ்யன் நடக்காமல் எங்கேயோ நின்று கொண்டிருக்கிறான் என்பதை நடக்கும் சத்தமின்மையை வைத்து சலீம் கண்டுபிடித்தான்.
இந்த இரண்டு நாட்களில் சலீம் அமானுஷ்யனைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருந்தான். முக்கியமாக அமானுஷ்யன் நடையின் வேகம், ஓடும் வேகம், ஆகியவற்றைப் பற்றி துல்லியமாக அறிந்து வைத்திருந்தான். ஓடும் போது அது அதிவேகமாக இருந்தாலும் அது ஒரு துல்லியமான, பயிற்சி செய்து பழகிய சீரான வேகமாக இருந்தது. நடக்கும் போதும் அதே போல ஒரு சீரான வேகமாக இருந்தது. இந்த சீரான வேகத்தில் செல்பவனை துப்பாக்கியால் கொல்வது சலீமிற்கு மிக எளிதான விஷயம். அவன் கொன்ற பிரபலங்களில் இருவர் வண்டியில் சென்று கொண்டிருந்த போது தான் அவன் கொன்றிருக்கிறான்.
மோப்ப நாய் போல முழுக் கவனத்தையும் குவித்து மெல்ல நிதானமாக நகர்ந்தான் சலீம். அமானுஷ்யன் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வந்து விட்டால் கண்டிப்பாக அவன் கண்டுபிடித்து விடுவான். அந்த அளவு அவனுக்கு அமானுஷ்யன் ஆழ்மன நிலையில் நெருங்கி விட்டிருந்தான்….
அந்த நேரத்தில் கேசவதாஸ் அந்த கட்டிடத்தின் வெளியே வந்து சேர்ந்தார். சற்று முன் அந்த சப் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்த போது அவர்கள் இருக்கும் இடத்தை அந்த சப் இன்ஸ்பெக்டர் சொன்னார். அவரைக் கண்டதும் ஓடி வந்த சப் இன்ஸ்பெக்டர் நிலவரத்தைச் சொன்னார். சலீம் உள்ளே போய் இருக்கிறான் என்றும் அவன் யாரையும் உள்ளே வர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான் என்றும் சொன்னார்.
கேசவதாஸிற்கு கோபம் வந்தது. “அவன் வாடகைக் கொலையாளி. அவன் அமானுஷ்யனைக் கொல்லா விட்டாலும் வரவிருக்கும் பணம் மட்டும் தான் நஷ்டம். ஆனால் நமக்கோ அவன் சாகா விட்டால் இருக்கிற எல்லாமே நஷ்டப்பட்டு விடும். பிரதமர் வரை அவன் விவகாரம் போய் விட்ட பிறகு அவனை விட்டு வைத்து கதை சொல்ல விட்டால் கேவலமாகி விடும் நம் நிலைமை.”
சப் இன்ஸ்பெக்டர் தடுக்கத் தடுக்க அதை இலட்சியம் செய்யாமல் கேசவதாஸும் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார்.
கேசவதாஸ் உள்ளே நுழைந்த போது மிக கவனமாக அதிக சத்தம் வராமல் பார்த்து நடந்த போதிலும் சலீம் இன்னொரு ஆள் நுழைவதை உணர்ந்தான். போலீஸ்காரனாகத் தான் இருக்க வேண்டும். இது போன்ற வேலையில் ஆட்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டால் வரும் பிரச்சினை இது தான். எவனாவது ஒருவன் சொல் பேச்சு கேட்க மாட்டான். அவனுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத் தான் செய்வான்.
ஆனால் ஒருவிதத்தில் கேசவதாஸ் உள்ளே நுழைந்தது நல்லதாகப் போயிற்று. பின்னால் வருவது ஒருவர் அல்ல இரண்டு பேர் என்பதை உணர்ந்ததால் இரண்டாம் மாடியில் இருந்த அமானுஷ்யன் நடக்க ஆரம்பித்தது தெரிந்தது. அதே சீரான வேகம். சலீம் விரைந்தான் அந்த சத்தத்தை நோக்கி.
அக்ஷய் மற்ற எதிரிகளை சமாளித்தது போல வருபவனை மின்னல் வேகத்தில் நெருங்கி கோமாவில் ஆழ்த்த முயலாததற்கு முக்கிய காரணம் அந்த தந்திரம் சலீம் போன்ற மிக அதிக கவனம் உள்ளவனிடம் பலிக்காது என்பதனால் தான். மேலும் சலீம் அவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொள்வதில் வல்லவனாகவும் இருப்பதை அக்ஷயால் அனுமானிக்க முடிந்தது. இரண்டாவதாக நுழைந்த ஆள் யார் என்று தெரியா விட்டாலும் நிதானமான காலடி ஓசையைப் பார்த்த போது அந்த ஆளும் லேசுப்பட்ட ஆள் அல்ல என்பது தெரிந்தது.
வெளியே எட்டிப்பார்த்தான். அந்தக் கட்டிடத்தை ஏராளமான பேர் சூழ்ந்து கொண்டு நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஓரளவு சாமர்த்தியமான ஆட்களாகவே தெரிந்தார்கள். சலீமின் காலடி ஓசை அவன் விரைந்து வருவதைத் தெரிவித்தது. அதே போலத்தான் இரண்டாவது காலடி ஓசையும். நான்காவது மாடிக்கு அக்ஷய் விரைந்தான்.
நான்காவது மாடி ஹாலில் வேகமாக அமானுஷ்யன் நடப்பதை அறிந்த போது சலீம் மூன்றாவது மாடியில் இருந்தான். காலடி ஓசையின் வேகத்திலிருந்தே மனக்கணக்கு போட்ட சலீம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் அமானுஷ்யனை துப்பாக்கியால் சுட முடிந்த தூரத்தை அடைய முடியும் என்பது மட்டுமல்லாமல் தன் தனித்திறமையால் குறிதவறாமல் சுடவும் முடியும் என்பதை உணர்ந்தான்.
அதே போல் நான்காவது மாடியை அடைந்த போது அக்ஷய் தூரத்தில் கண்ணில் பட்டான். அதிர்ஷ்டம் தன் பக்கம் கடைசியில் வந்து நின்றதை உணர்ந்த சலீம் தன் துப்பாக்கியை அமானுஷ்யனுக்கு, அவன் நகரும் வேகத்தைக் கணக்கிட்டு, குறி வைத்தான்.
அந்தக் கணத்தில் அக்ஷயும் அபாயத்தை முழுமையாக உணர்ந்தான்.
(தொடரும்)