ஜம்மு விமானநிலையத்தில் வந்திறங்கிய கேசவதாஸ் உடனடியாக வீரேந்திர நாத்திடம் போனில் பேசவில்லை. மாறாக அமானுஷ்யன் விவகாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தங்கள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்குப் போன் செய்தார்.
“ஹலோ நான் கேசவதாஸ் பேசுகிறேன்”
அந்த சப் இன்ஸ்பெக்டர் கேசவதாஸ் போனை எதிர்பார்க்கவில்லை. சற்று தடுமாறி விட்டு சொன்னார். “..சொல்லுங்கள் சார்”
“அமானுஷ்யன் செத்து விட்டானா இல்லையா?”
அமானுஷ்யன் விஷயத்தில் இது வரை கேசவதாஸ் நேரடியாக தலையிடாதவர் ஆனதால் சப் இன்ஸ்பெக்டர் மறுபடி தடுமாறியது போல் தெரிந்தது. “இல்லை சார்”
“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? இப்போதைய நிலவரம் என்ன?”
“நான்…நான்… இப்போது அவன் இருக்கும் இடத்திற்குத் தான் போய்க் கொண்டிருக்கிறேன் சார்…”
“எந்த இடம்? விவரமாகச் சொல்லுங்கள்…”
சப் இன்ஸ்பெக்டருக்கு என்ன சொல்வது என்று ஒரு கணம் புரியவில்லை. வீரேந்திரநாத்தின் விசுவாசியான அவர் ஆரம்பத்தில் இருந்தே அமானுஷ்யன் பற்றிய முழு விவரங்களை மற்ற உயர் அதிகாரிகள் கேசவதாஸிடம் சொல்லாமல் இருந்ததை அறிவார்.
கேசவதாஸ் எரிச்சலுடன் சொன்னார். “நான் இப்போது ஜம்முவில் தான் இருக்கிறேன். நிலைமை நம் கட்டுப்பாட்டை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. நம் தலை மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் சொல்லுங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்”
கேசவதாஸ் ஜம்மு வந்திருக்கிறார் என்பதும், இப்போது அமானுஷ்யன் விவகாரத்தை நேரடியாக கவனிக்க ஆரம்பித்து விட்டார் என்பதும் புரிந்த பிறகு அந்த சப் இன்ஸ்பெக்டர் அதற்கு மேல் தயக்கம் காட்டவில்லை. தற்போது தான் அமானுஷ்யன் இருக்கும் இடம் சலீம் மூலம் தெரிய வந்தது எனவும், அவன் சொன்ன இடத்தில் நிற்க அவரும் வேறு சிலரும் போய்க் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தவன், நிற்கப் போகும் இடத்தின் இடக்குறிப்பையும் தெரிவித்தான்.
“சரி. முக்கியமான தகவல் ஏதாவது கிடைத்தால் உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள். மந்திரி எங்கே இருக்கிறார்?’
“மந்திரி கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறார். அவன் பிணமானவுடன் உடனடியாக முதலில் அவருக்குத் தான் தெரிவிக்க வேண்டுமாம். சொல்லியிருக்கிறார்”
“சரி நான் அவரிடம் சிறிது பேச வேண்டி இருக்கிறது. பேசுகிறேன்… சொன்னதை மறக்காதீர்கள். எந்த முக்கியத் தகவலானாலும் உடனடியாகத் தெரிவியுங்கள்..”
அடுத்ததாக கேசவதாஸ் மந்திரி வீரேந்திரநாத்திற்குப் போன் செய்தார்.
கேசவதாஸ் குரலைக் கேட்டவுடன் பரபரப்புடன் வீரேந்திரநாத் கேட்டார். “பிரதமர் உங்களை அழைத்துப் பேசினார் என்றார்களே, என்ன சொன்னார்?”
“போனில் சொல்ல முடியாத விஷயம் அது. நான் நேரில் வந்தே சொல்கிறேன். அதற்குள் அமானுஷ்யன் கதை முடிந்தால் தான் நல்லது.”
“அவனைப் பற்றி பிரதமர் எப்படி அறிந்தார்?”
“அது தான் சொன்னேனே, போனில் அதைப் பற்றி பேச வேண்டாம். சிறிது நேரத்தில் நேரிலேயே வந்து சொல்கிறேன்…” என்றவர் மறுபேச்சு பேசாமல் இணைப்பைத் துண்டித்தார்.
வீரேந்திரநாத்திற்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது. திரும்பவும் கேசவதாஸிற்கே போன் செய்து பேசலாமா என்று யோசித்தவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு ராஜாராம் ரெட்டிக்குப் போன் செய்து நடந்ததைச் சொன்னார்.
“அந்த ஆள் புதிர் போட்டுப் பேசுவது எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கிறது. நேரில் வந்து பேச அப்படி என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்”
ராஜாராம் ரெட்டி அமைதியாகச் சொன்னார். “அவரிடம் இது வரை அமானுஷ்யன் பற்றி அரைகுறையாய் நீங்கள் சொல்லி இருப்பதற்கு முடிந்த வரை உங்களிடமும் அப்படியே சொல்லி வெறுப்பேற்ற நினைப்பது போல தெரிகிறது. அப்படியே இருக்கட்டும் விடுங்கள். சில நிமிஷங்களில் நேரில் வந்து சொல்லத் தானே போகிறார். முக்கியமாய் இங்கே டில்லியில் எங்கேயாவது வெடிகுண்டு வெடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டது போலத் தான் தெரிகிறது.”
“ஐயையோ”
“ஆனால் அந்த இடம் எது என்று அவர்களாக அனுமானித்து தேட ஆரம்பித்து இருக்கிறார்கள். வெடிகுண்டு வைக்கப் போகிற இடங்களை மட்டுமல்லாமல் வேறு இடங்களையும் பொத்தாம் பொதுவாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பயப்பட வேண்டியதில்லை. வெடிகுண்டு வெடிக்கப் போகிற இடங்களில் ஓரிரு இடங்களை அவர்கள் கண்டுபிடிக்கவும் செய்யலாம். இதைச் சொல்லத் தான் கேசவதாஸ் நேரில் அங்கே வந்ததாகத் தெரிகிறது. அவன் அங்கே சாகாமல் தப்பித்தால் நாளை தனக்கும் பிரச்சினை என்பதால் உங்களைப் போலவே அவரும் நேரடியாக அவன் முடிவை உறுதி செய்ய வந்தது போல் இருக்கிறது. அமானுஷ்யன் இருக்கும் இடத்திற்கு நம் ஆட்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதனால் எல்லாம் சீக்கிரமே முடிவுக்கு வந்து விடும். கவலைப்படாதீர்கள்.”
“ஏதோ உங்களிடம் பேசும் போது கவலைப்பட அவசியமே இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் சிறிது நேரத்திலேயே பழையபடி கவலை, பயம் வந்து விடுகிறது.”
“எப்போது சலீம் கூடுதலாய் நம் ஆட்களையும் உதவிக்குப் போக ஒத்துக் கொண்டானோ, அப்போதிருந்தே நான் கவலைப்படுவதை விட்டு விட்டேன். அவன் குணாதிசயத்திற்கு அப்படி செய்ய சம்மதிப்பது கஷ்டம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அவனும் அமானுஷ்யன் விஷயத்தில் ஏமாந்து விட வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டான் என்று தான் தோன்றுகிறது. அதனால் அமானுஷ்யன் எப்படி பறந்தாலும் இத்தனை பேரை ஒருசேர சமாளிக்க முடியாது கவலைப்படாதீர்கள்”
ஒரு வழியாக மந்திரியை சமாதானப்படுத்தி விட்டு செல் போனைக் கீழே வைத்த ராஜாராம் ரெட்டி வெறும் பேச்சுக்காக மட்டும் அப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே அதை நம்பினார். காரணம் நல்லவராக இருந்த போது அவரைக் காப்பாற்றாத விதி அவர் கெட்டவராக மாற ஆரம்பித்த பிறகு அவருக்கு சாதகமாகத் தான் இருந்திருக்கிறது. பணம் சம்பாதித்ததிலும் அளவில்லை. சொத்துக்கள் சேர்த்ததிலும் அளவில்லை. உட்கார்ந்து சாப்பிட்டாலும் அவர் தன் குடும்பத்தோடு ராஜ வாழ்க்கை வாழ முடியும்.
விதி சாதகமாக இருப்பதற்கு அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய நிரூபணம் ஆச்சார்யா ஜெயினிற்குத் தெரிவிக்கும் முன் விரேந்திரநாத்தின் திட்டங்களை ரெட்டிக்குத் தெரிவித்தது தான். ராஜாராம் ரெட்டி மாறி விட்டிருப்பதை அறியாமல் இருந்த ஆச்சார்யா ஆபிசில் இருந்து ரெட்டி கிளம்பிக் கொண்டிருந்த போது அவசரமாக வந்து ரகசியமாய் அமானுஷ்யன் அனுப்பி இருக்கும் ஆதாரபூர்வமான தகவலைச் சொன்ன போது ராஜாராம் ரெட்டி அதிர்ந்து போனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் முழுவதுமாகக் கேட்டுக் கொண்டார்.
“இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே வேதனையாக இருக்கிறது” என்று பொய்யாய் ரெட்டி வருந்தினார்.
“தர்மம் தாமதமாக ஆனாலும் ஜெயிக்காமல் போகாது ரெட்டி. இப்படிப்பட்ட மனிதர்கள் இதற்கெல்லாம் தண்டனை பெறாமல் போக மாட்டார்கள். அதனால் தானே அக்ஷய் ஆதாரபூர்வமான அத்தாட்சியை அனுப்ப முடிந்தது.”
“உண்மை. இனி என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?”
“ஜெயின் சாரிடம் சொல்லலாம் என்றால் அவர் சீக்கிரமே இன்று போய் விட்டார். நாளை காலையில் எல்லா ஆதாரங்களையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என்றிருக்கிறேன்”
“சார், அது வரையில் இதைப் பற்றி வேறு யாருக்கும் சொல்லாதீர்கள். இந்தக் காலத்தில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பதை நாம் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை”
“உண்மை தான் ரெட்டி சார். நான் வேறு யாரிடமும் வாய் திறக்கப் போவதில்லை” என்றார் ஆச்சார்யா.
வெளியே வந்த ரெட்டி அவசர அவசரமாக வீரேந்திரநாத்திற்குப் போன் செய்து நடந்ததை அப்போதே தெரிவித்தார். இருவரும் சேர்ந்து ஜெயினிடம் அந்த ஆதாரங்கள் செல்லும் முன் ஆச்சார்யாவைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
ராஜாராம் ரெட்டி ஆச்சார்யாவிற்குப் போன் செய்தார். ஆச்சார்யா சேகரித்திருக்கும் தகவல்களுக்குக் கூடுதலாக இன்னொரு தகவல் அப்போது தான் கிடைத்ததாகவும் உடனடியாக வீட்டுக்கு வந்து அதனைத் தருவதாகவும் சொன்னார். நம்பிய ஆச்சார்யா உடனடியாக வீட்டுக்கு வரச் சொன்னார். கொலையாளி ஒருவனைக் கூட்டிக் கொண்டு ஆச்சார்யா வீட்டுக்குச் சென்றார் ராஜாராம் ரெட்டி. காவலுக்கு இருந்த போலீஸ் கான்ஸ்டபிளிற்கு ரெட்டியை நன்றாகத் தெரிந்திருந்ததால் தனக்கோ ஆச்சார்யாவிற்கோ எந்த ஆபத்தும் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தக் கான்ஸ்டபிளை முதலிலும், வீட்டிற்குள்ளே போன பின் ஆச்சார்யாவை பின்பும் கொல்வது ரெட்டிக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.
அதிகப்பிரசங்கித்தனமாக ஆச்சார்யா ஜெயினிற்கு போன் செய்து நாட்டையே அதிர வைக்கும் சில தகவல்களை ஆதாரபூர்வமாக ஒப்படைக்கிறேன் என்று ராஜாராம் ரெட்டி போவதற்கு முன் சொல்லாமல் இருந்திருந்தால் ஜெயினிற்கு எந்த சந்தேகமும் வந்திருக்காது. ஆனந்தை வரவழைத்திருக்கவும் மாட்டார். ஆனாலும் பரவாயில்லை பெரிதாக எந்த ஆபத்தும் ரெட்டிக்கு வந்து விடவில்லை.
தர்மம் தாமதமாகவாவது வெல்லும் என்று நம்பிய ஆச்சார்யா தர்மத்தைப் போலவே உடனடியாக இறந்து விட்டதை இப்போது எண்ணிய போதும் ரெட்டிக்கு வேடிக்கையாக இருந்தது. “முட்டாள்”.
அக்ஷய் மறைவில் நின்று கொண்டு சலீமிடம் முதிய பிக்கு பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர் அவனிடம் கோபப்படும்படி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பது சலீம் துப்பாக்கியை எடுத்து அவர் முகத்தருகே நீட்டிய போதே தெரிந்தது. சிறிது நேரத்தில் அவன் சுட்டே விடலாமா என்று கூட யோசித்ததும் புரிந்தது. மனித மனத்தின் செயல்பாடுகளை அறிந்த ஞானியான அவர் தன் சீடனுக்காக எடுத்துக் கொள்ளும் சிரமத்தைப் பார்த்த அக்ஷயிற்கு மனம் நெகிழ்ந்தது.
வந்திருக்கிறவன் அபாயகரமானவன் என்பதையும் திறமையானவன் என்பதையும் பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட பிக்கு சலீமின் கோபத்தை அதிகமாகக் கிளறி விட்டதற்கு உண்மையான காரணம், கோபம் ஒரு மனிதனின் சிந்திக்கும் திறனை நன்றாகவே பாதித்து விடும் என்பதனால் தான். அதே போல் ஒருவனுடைய கோபம் அவன் சக்தியை உறிஞ்சி விடும் தன்மை வாய்ந்தது. எனவே மிகவும் இக்கட்டான நேரத்தில் – சிந்திக்கும் தன்மையும், சக்தியும் உச்சத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் – கோபப்படுத்துவது அந்த இரண்டையும் குறைத்து ஒருவனை பலவீனனாக ஆக்குகிறது. அப்படித்தான் பிக்கு அவனைப் பலவீனப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.
ஆனால் பின் தொடர்ந்து வந்தவன் முட்டாள் அல்ல என்பதால் என்ன நடக்கிறது என்பதை சீக்கிரமே புரிந்து கொள்ளக்கூடும் என்பதில் அக்ஷயிற்கு சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட நேரத்தில் சிறிதும் யோசிக்காமல் அவன் அவரைக் கொன்று விட்டு அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆரம்பிக்கலாம் என்றே அவன் நினைப்பான் என்று அக்ஷயிற்குத் தோன்றியது. முதியவரானாலும் பிக்கு லேசுப்பட்டவர் அல்ல என்பதால் அவ்வளவு சுலபமாக அவரை அவன் எதுவும் செய்து விட முடியாது என்றாலும் இந்த புனித புத்த விஹாரத்தின் முன் அசம்பாவிதம் எதுவும் நடப்பதை அக்ஷய் விரும்பவில்லை. எனவே மானசீகமாகத் தன் மேலிருந்த அன்பிற்காக குருவிற்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தான்.
அக்ஷயைப் பார்த்ததும் சலீம் தன் கவனத்தை முழுமையாக பிக்குவிடம் இருந்து விலக்கி அக்ஷய் பக்கமே திருப்பினான். அவன் துப்பாக்கி தயாராக குறி பார்க்க ஆரம்பித்தது. அக்ஷய் மின்னல் வேகத்தில் நெடுஞ்சாலையை நோக்கி ஓடினான். சலீம் தன் சகல பலத்தையும் திரட்டி அவன் பின்னே ஓடிய படி துப்பாக்கியால் சுடப்பார்த்தான். ஆனால் அனாயாசமாக ஓடிய அமானுஷ்யனைக் குறி பார்ப்பது சுலபமாக இல்லை. அந்தக் கிழட்டு பிக்குவிடம் கோபப்பட்டு பேசியே தன் சக்தியை சிறிது தொலைத்து விட்டோமோ என்று சலீமிற்குத் தோன்ற ஆரம்பித்தது. ஓடும் பாதை முடிவது நெடுஞ்சாலையில் தான் என்பதால் அமானுஷ்யனை எதிர்கொள்ள மற்றவர்களைத் தயார்ப்படுத்த சலீம் எண்ணினான். ஓடியபடியே செல்போனை எடுத்தவன் தலிபான் தலைவன் அனுப்பிய எண் ஒன்றிற்குப் போன் செய்தான்.
“இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் நெடுஞ்சாலைக்கு வந்து விடுவான். ஒன்றாக சேர்ந்து வழி மறித்து நில்லுங்கள். எல்லாரும் சேர்ந்து அவனைப் பார்த்து சகட்டு மேனிக்கு சுடுங்கள்….”
ஓடும் அக்ஷயையும், அவனைக் கொல்ல வந்தவனையும் பார்வையை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற பிக்கு புத்த விஹாரத்திற்குத் திரும்பினார்.
நெடுஞ்சாலையில் நின்றிருந்தவர்கள் சுமார் இருபது பேராவது இருப்பார்கள். பன்னிரெண்டு பேர்கள் போலீசார், எட்டு பேர்கள் தலிபான் ஆட்கள். சலீமிடம் போனில் பேசியவன் அவசரமாகக் கத்தினான். “அவன் இன்னும் ஒரு நிமிடத்தில் இங்கு வந்து விடுவானாம். நாம் சுட்டு அவன் உடம்பை சல்லடையாகத் துளைத்து விடவேண்டும். தயாராகுங்கள்….”
அரை நிமிடத்தில் அவர்கள் அனைவரும் சேர்ந்து சாலையினை மறித்தபடி நின்று எதிரே இருந்த பாதையில் வரும் அமானுஷ்யனுக்காக துப்பாக்கியுடன் காத்திருந்தார்கள்.
(தொடரும்)