அமானுஷ்யன் – 117

கேசவதாஸ் அவசர அவசரமாக ஜம்முவிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் அமானுஷ்யன் கேஸைக் கவனித்துக் கொண்டு இருந்த அந்த உயர் அதிகாரியின் போன் வந்தது.

“சார். பிரதமர் அலுவலகத்தில் உங்களைக் கூப்பிட்டு என்ன சொன்னார்கள்?”

மிகுந்த எதிர்பார்ப்போடும், படபடப்போடும் வந்த கேள்விக்கு கேசவதாஸ் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. அவருக்குள் கோபம் குமுறிக் கொண்டு வந்தது. மந்திரியோடு சேர்ந்து கொண்டு இது வரை என்னென்னவோ செய்து வந்த அந்த அதிகாரிக்கு அதை கேசவதாஸிடம் சொல்ல வேண்டும் என்று இது வரை தோன்றாததும், ஆனால் அதே நேரத்தில் அவரிடம் இருந்து செய்திகள் கறக்க மட்டும் அதீத ஆர்வம் இருப்பதும் அவர் பொறுமையை சோதித்தது.

அவரிடம் பதில் எதிர்பார்த்து வராததால் அந்த அதிகாரி மெல்ல சொன்னார். “மந்திரி வீரேந்திரநாத் தான் என்னைக் கேட்டு போன் செய்யச் சொன்னார்”

“இப்போது அவர் எங்கே இருக்கிறார்”

“ஜம்முவில்…”

“நான் அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டிய அளவு நிலைமை முற்றி விட்டது. நான் உடனடியாக ஜம்மு கிளம்புகிறேன். நேரில் வந்து சொல்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்”

இந்த பதிலை அந்த அதிகாரி எதிர்பாராதது போல இருந்தது. அவர் தயங்கினார். கேசவதாஸ் வேறொன்றும் பேசாமல் இணைப்பைத் துண்டித்தார்.

**********

மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான, சுமார் 20 ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவசர அவசரமாக அவர்களை ஒரு ரகசிய சந்திப்புக்கு அழைத்தார் ‘வெடிகுண்டு’ இலாகா தலைவர்.

அவர்களிடம் ஆனந்த் தந்த இடங்களின் பட்டியலைத் தந்தார். “இந்த பகுதிகளில் இன்னும் சில மணி நேரங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்ற நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது. அந்தத் தகவல் யார் மூலமாகவாவது நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எச்சரிக்கையாகி விடுவோம் என்ற பயத்தில் தான் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்ற வதந்திகளை தேச விரோதிகள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டிரண்டு பேர்களை ஒவ்வொரு இடத்திற்கு தலைவர்களாக நியமிக்கிறேன். நீங்கள் உங்களுக்கு தேவைப்பட்ட ஆட்கள், நாய்கள், கருவிகள் எடுத்துக் கொண்டு உடனடியாகக் கிளம்புங்கள்..”

அவர்களில் ஒருவர் கேட்டார். “இந்தப் பகுதிகளில் வெடிக்கப் போகும் குறிப்பிட்ட இடங்கள் பற்றி ஏதாவது துப்பு கிடைத்திருக்கிறதா?”

“இல்லை. ஆனால் நீங்களே தீவிரவாதிகளின் நிலையில் நின்று பாருங்கள். நீங்கள் இந்தப் பகுதிகளில் வெடிகுண்டு வைப்பதாக இருந்தால் எந்தெந்த இடங்களில் எப்படி வைப்பீர்கள் என்று யோசியுங்கள். எந்தெந்த இடங்களில் அதிக சேதம் வரலாம் என்றும் யோசியுங்கள். இதிலெல்லாம் பதில் கிடைக்கலாம்… இது நம் நாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆசிர்வாதத்துடன் நடக்க இருப்பதாக சொல்லப்படுவதால் கவனமாக இருங்கள். முடிந்த அளவு ரகசியமாக இயங்குங்கள். நாம் கண்டு பிடித்து விட்டோம் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இன்னும் பத்து குழுவை வேறு சில இடங்களுக்கும் அனுப்புகிறேன். அவர்கள் வெடிகுண்டு வைத்த இடங்களில் மட்டுமல்லாமல் வேறு இடங்களிலும் நாம் தேடுவது, எல்லாமே வழக்கமான தேடல் என்பது போன்ற அபிப்பிராயத்தை அவர்களிடம் ஏற்படுத்தும். சரி சீக்கிரம் கிளம்புங்கள் ….”

அவர்கள் வேகமாக நகர்ந்தார்கள். வெடிகுண்டு தலைவர் அவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டார். எத்தனை குண்டுகள் கிடைக்கும், எத்தனை குண்டுகள் வெடிக்கும் என்று தெரியவில்லை! அவர் மனைவியின் அண்ணன் மகள் திருமணத்திற்கு இன்று இரவு கிளம்புவதாக இருந்ந்தது. இனி போக முடிவது கஷ்டம் தான். மனைவியின் கோபமும் ஒரு வெடிகுண்டு வெடிப்பாகத் தான் இருக்கப் போகிறது.

**********

நிலைமை முற்றி விட்டது என்றும், நேரடியாகச் சொல்ல வேண்டிய விஷயம் என்றும் தெரிவித்து விட்டு கேசவதாஸ் ஜம்முவிற்கு கிளம்பியதைக் கேள்விப்பட்ட வீரேந்திரநாத்திற்கு வயிற்றைக் கலக்கியது. உடனடியாக ராஜாராம் ரெட்டிக்குப் போன் செய்து தகவலைச் சொல்லி விட்டு கேட்டார். “என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

ராஜாராம் ரெட்டி சொன்னார். “நான் பிரதமர் அலுவலகத்தில் எனக்கு இருக்கும் வேண்டப்பட்டவர்களை விசாரித்தேன். கேசவதாஸோடு, உளவுத்துறை தலைவரையும், வெடிகுண்டு துப்பு துலக்கும் இலாகா தலைவரையும் பிரதமர் அழைத்திருக்கிறார் என்று சொன்னார்கள். அவர்கள் அல்லாமல் வேறு யாரோ மூன்று பேர் வந்ததாகச் சொன்னார்கள். யார் அந்த மூன்று பேர் என்பது தெரியவில்லை. அந்த மூன்று பேரை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்கிறார்கள்”

“திடீரென்று அந்த சந்திப்புக்கு என்ன காரணம்? பிரதமர் அப்பாயின்மெண்டை மாற்றுகிற அளவு யார் இடையே போனார்கள்”

“சதுர்வேதி என்கிறார்கள்”

வீரேந்திரநாத்திற்கு குழப்பமாக இருந்தது. “சதிர்வேதி எப்படி இதில் சம்பந்தப்படுகிறார்?”. அதை வாய் விட்டே சொன்னார்.

ராஜாராம் ரெட்டி சொன்னார். “எனக்கும் குழப்பமாகத் தான் இருக்கிறது. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் கேசவதாஸ் நேரில் வருகிறாரல்லவா? அவரிடம் பேசும் போது எல்லாமே தெரிந்து விடும். அதைப் பற்றிய கவலை விடுங்கள். அந்த அமானுஷ்யன் கதையை முடிப்பதில் மட்டும் இப்போது கவனம் கொடுங்கள். போதும்.”

வீரேந்திரநாத் அங்கலாய்த்தார். “அந்த சைத்தான் செத்துத் தொலைய மாட்டேன்கிறானே, நான் என்ன செய்வேன்!”

********

சலீமிடம் பிக்கு பணிவாகச் சொன்னார். “அமானுஷ்யன் என்ற பெயர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அக்‌ஷய் எனது மாணவன். அவனுடைய நண்பன் என்று சொல்கிறீர்கள். பின் ஏன் வெளியே காத்து நிற்கிறீர்கள். தாராளமாக உள்ளே வரலாமே…..”

அந்த வயதான பிக்குவின் வணக்கமும், பணிவும் சலீமிற்கு கிண்டல் செய்வது போல இருந்தது. அவன் முதலிலேயே எரிச்சலான மனநிலையில் இருந்தான். காரணம் அவனுக்கு சற்று முன் வரை தலிபான் தலைவனிடமிருந்து தொடர்ந்து வந்த செல்போன் அழைப்புகள் தான். எப்போதுமே வேலையாக இருக்கும் சமயத்தில் அவன் போனில் பேசுவதை வைத்துக் கொள்வதில்லை. அது அவன் வேலையைப் பாதிக்க அவன் அனுமதிப்பதில்லை. அமானுஷ்யன் உள்ளே சென்றிருந்த நேரத்தில் விடாமல் அந்த தலிபான் தலைவன் போன் செய்த போது அவனுக்கு ஆத்திரமாக வந்தது. போனில் பேசும் சமயத்தில் அமானுஷ்யன் வெளியே வந்து காற்றாய் பறந்து விட்டால் என்ன செய்வது என்று அவன் பயந்தான். அதனால் செல்போனை எடுத்து அவன் பேச மறுத்தான்.

அவன் செல் போனில் பேசாததை அடுத்து தலிபான் தலைவன் எஸ் எம் எஸ் தகவல் அனுப்பினான். “தயவு செய்து பேசு. அவசரம்”.

சலீம் அமானுஷ்யன் வெளியே வராததால், பார்வையை புத்த விஹார வாசலில் நிலைக்க விட்டபடி தலிபான் தலைவனிடம் பேசினான். ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்தான்.

“நீங்கள் என்னைத் தொந்திரவு செய்கிறீர்கள். ஒரு வினாடி நான் அவனைத் தவற விட்டாலும் அவனைத் திரும்பப் பிடிப்பது முடியாத காரியம். அப்படி என்ன தலை போகிற அவசரம்”

தலிபான் தலைவன் அவசர அவசரமாகக் கெஞ்சும் தொனியில் பேசினான். “சலீம். கோபப்படாதே. நீ ஏன் போனை எடுத்துப் பேசவில்லை என்பது எனக்குத் தெரியும். நீ பயப்படுவதும் நியாயமே. அவன் சிறிது அசந்தாலும் காற்றாய் பறந்து விடுவான் என்பது தெரியும். அதனால் தான் உனக்கு போன் செய்தேன். நீ எங்கே இருக்கிறாய் என்பதைச் சொல். உனக்கு உதவிக்கு நான் ஆட்கள் அனுப்புகிறேன்…”

சலீமிற்கு அவன் உதவிக்கு ஆட்கள் அனுப்புவதாகச் சொன்னது அவமானப் படுத்துவது போல் இருந்தது. “நான் இது வரை எந்த வேலையிலும் அடுத்தவர் உதவியைப் பெற்று கூட்டாக வேலை செய்ததில்லை. அதற்கு அவசியம் நேர்ந்ததில்லை…”

“ஆனால் நீ அமானுஷ்யன் மாதிரி ஒரு ஆளை இதுவரை கையாண்டதும் இல்லை”

சலீம் கோபத்துடன் கேட்டான். “ஏன் அவனை நான் தனியாகக் கையாள்வேன் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

“ஐயையோ அப்படியெல்லாம் இல்லை. உன் திறமையில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. எங்கள் ஆட்கள், போலீஸ் ஆட்கள் எல்லாம் சேர்ந்தும் கூட அவனை சரியாகப் பின் தொடர முடியவில்லை. ஆனால் நீ ஒருவன் தான் அவனை இது வரை சரியாக பின் தொடர்ந்துள்ளாய். அதுவே பெரிய விஷயம். ஆனால் ஒருவேளை அவனை உன்னால் கொல்ல முடியாமல் போனால் நாங்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் வீணாகி விடும். போன தடவையே அவனைப் பின் தொடர்ந்து சென்று ஒரு மலையுச்சியில் அவன் அதிகம் நகர முடியாத இடத்தில் பல பேர் சேர்ந்து சுட்டு கூட ஒரே ஒரு குண்டு தான் அவன் உடம்பில் பட்டிருக்கிறது. அப்படியும் அவன் உயிர் பிழைத்து விட்டான். அதனால் நாங்கள் இந்த தடவை சிறிய தவறு கூட செய்ய விரும்பவில்லை…:

” என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?”

“இப்போது அவன் எங்கே இருக்கிறான்?”

“ஒரு புத்த விஹாரத்திற்குள் போயிருக்கிறான். நான் வெளியே நிற்கிறேன்”

“அந்த புத்த விஹாரம் எங்கே இருக்கிறது என்று சொன்னால் நல்ல திறமை வாய்ந்த எங்கள் ஆட்களையும் போலீஸ்காரர்களையும் உதவிக்கு அனுப்பி வைக்கிறோம். எப்படி அவனைக் கொல்வது என்பதை நீயே தீர்மானி. ஆனால் உனக்கு எல்லா விதங்களிலும் அவர்கள் உதவுவார்கள். நீ சொல்கிறபடி கேட்பார்கள். தயவு செய்து மறுத்து விடாதே. பேசியபடி முழு பணத்தையும் தந்து விடுகிறோம். உன் சுயமரியாதையைக் குறைப்பதாக நீ நினைத்து விடாதே. சிறிய இடம் கிடைத்தாலும் அவன் நழுவி விடுவான். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. அதனால் தான் சொல்கிறேன்”

ராஜாராம் ரெட்டியின் ஆலோசனைப்படி மந்திரி தெரிவித்ததை அப்படியே தலிபான் தலைவன் ஒப்பித்தான். அவனுக்கும் என்ன காரணம் கொண்டும் அமானுஷ்யனைத் தப்ப விடக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. அதனால் தான் அவன் கெஞ்சிக் கேட்கும் தொனியில் சொன்னான்.

அவன் தனியொருவனாக இருந்து அமானுஷ்யனைக் கொல்ல முடியாது என்று அவர்கள் தீர்மானித்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போதே சலீமின் ரத்தம் கொதித்தது. ஆனால் அதே நேரத்தில் அவர்களின் அவசரமும், பயமும் அவனுக்கு விளங்காமலில்லை.

சலீம் சிறிது யோசித்து விட்டு சொன்னான். “சில நேரங்களில் அதிக ஆட்கள் நிறைய பலம். ஆனால் சில நேரங்களில் அதிக ஆட்கள் அதிக இடைஞ்சல்.”

“உனக்கு இடைஞ்சல் தராதபடி அவர்கள் நிற்கச் சொன்ன இடத்தில் நிற்பார்கள். செய்யச் சொன்னதை செய்வார்கள். அவன் பலர் பார்வையில் இருப்பது நல்லது தானே”

“அப்படியானால் நான் சொல்லும் இடத்தில் வந்து நிற்கச் சொல்லுங்கள். அதில் இருந்து ஒரு அடி முன் வந்தாலும் இந்த வேலையிலிருந்து விலகிக் கொள்வேன்.”

“தயவு செய்து அப்படி சொல்லாதே. நீ சொல்கிற இடத்திலேயே நிற்பார்கள். ஒரு அடி அதிகமாக முன் வைக்க மாட்டார்கள். சரியா? எங்கே அவர்கள் நிற்க வேண்டும். சொல்”

சலீம் புத்த விஹாரத்திற்குத் திரும்பும் இடத்தில் பிரதான சாலையில் ஆட்களை நிற்கச் சொன்னான். அவர்களில் முக்கியமான ஆட்கள் இருவரின் செல் போன் எண்களை எஸ் எம் எஸ்ஸில் அனுப்பச் சொன்னான்.

தலிபான் தலைவன் சம்மதித்தான். அவனிடம் சலீம் பேசி முடித்த அடுத்த நிமிடம் தான் வயதான புத்த பிக்கு புத்த விஹாரத்திலிருந்து வெளியே வந்தார். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வேலையைக் கூட்டாகச் செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது அவனுக்கு அவமானமாக இருந்த அந்த நேரத்தில் வந்த புத்த பிக்கு அவனைப் பிரார்த்தனை செய்ய வந்தவனை வரவேற்பது போல வரவேற்றது அவன் கோபத்தை அதிகப்படுத்தியது.

அவன் அந்த முதிய பிக்குவிடம் சொன்னான். “அவன் வெளியே வராவிட்டால் மட்டுமே நான் உள்ளே வர வேண்டி இருக்கும். அவன் வெளியே வருவானா?”

“வர வேண்டிய நேரத்தில் வருவான்”

அந்த பதில் அவன் கோபத்தை மேலும் கிளப்பியது. அவர் சொல்லும் போது முகபாவத்தில் கிண்டல் தெரியா விட்டாலும் அவன் அவர் கிண்டலை உணர்ந்தான்.

“வர வேண்டிய நேரம் எது?”

“அதை அவன் மட்டும் தான் அறிவான்”

சலீம் துப்பாக்கியை எடுத்து அவர் முகத்தருகே நீட்டினான். “எகத்தாளம் பேசினால் தலை சுக்குநூறாக சிதறி விடும் ஜாக்கிரதை”

அந்த முதிய பிக்குவை அந்த துப்பாக்கி எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. “என்னைக் கொல்வது உனக்கு பெருமை சேர்க்கும் என்றால் அதை நீ தாராளமாய் செய்யலாம்”

பிக்குவின் வார்த்தைகள் ஊசியாய் குத்தின. உலகப் பிரபலங்கள், சக்தி வாய்ந்தவர்கள், நெருங்க முடியாதவர்கள் என்றெல்லாம் அறியப்பட்டவர்களைக் கொன்ற அவனுக்கு அந்த நிராதரவான கிழட்டு பிக்குவைக் கொல்வது பெருமையா? இந்தக் கிழவரிடம் பேச ஆரம்பித்ததே தவறு என்பதை சலீம் உணர்ந்தான்.

“முதலில் அவனை வெளியே அனுப்புங்கள். இல்லா விட்டால் உங்கள் புத்தர் கோயிலுக்குள் பிணம் விழும்”

“அவனை நண்பர் என்று சொல்கிறீர்கள், துப்பாக்கியோடு வந்திருக்கிறீர்கள், பிணம் விழும் என்கிறீர்கள். எல்லாமே முரணாக இருக்கிறதே”

“சரி நண்பன் அல்ல. அவன் என் எதிரி”

“ஆனால் அவன் உங்களை நண்பனாகவே நினைத்திருக்க வேண்டும். அவன் உங்களை எதிரியாக நினைத்திருந்தால் நீங்கள் எப்போதோ எங்கேயோ கோமாவில் படுத்துக் கிடந்திருப்பீர்கள்”

சலீம் கோபத்தின் உச்சத்திற்கே போனான். அமானுஷ்யன் கருணையால் தான் அவன் இப்போது நின்று பேசிக் கொண்டிருக்கிறான் என்று சொன்ன பிக்குவை உடனடியாக சுட்டு விட்டு புத்த விஹாரத்திற்குள் நுழைந்தால் என்ன என்று நினைத்தான்.

அப்போது தான் அமானுஷ்யன் அந்த புத்த விஹாரத்தை விட்டு வெளியே வந்தான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top