அமானுஷ்யன் – 98

சலீம் டெல்லிக்கு வந்து மூன்று நாட்கள் ஆகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டலில் தான் தங்கி இருந்தான். இந்த மூன்று நாட்களிலும் அவன் ஓட்டல் அறையை விட்டு வெளியே போனது ஒரு சில மணி நேரங்கள் தான். அறைக்குள் இருந்த நேரங்களில் அமானுஷ்யனின் ஃபைலை முழுமையாகப் படித்தான். நிறைய மனிதர்கள் அமானுஷ்யனுடன் பழகிய தங்கள் அனுபவங்கள் பற்றி சொன்னதை எல்லாம் விரிவாகப் படித்தான். சிலவற்றை திரும்பத் திரும்ப படித்தான். அவனுடைய லாப் டாப்பில் அவன் நிறைய வீடியோக்கள் பார்த்தான். எல்லாமே அமானுஷ்யன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள். அமானுஷ்யனின் நடை, உடை, பாவனையை கூர்ந்து கவனித்தான். அமானுஷ்யனை மையமாகக் கொண்ட நிகழ்வுகளை பல முறை பார்த்தான். இந்த மூன்று நாளில் அவன் அமானுஷ்யன் என்றழைக்கப்பட்ட மனிதனைப் பற்றி பரிபூரணமாக அறிந்திருந்தான். எல்லாம் அறிந்த போது அவனுக்கு அமானுஷ்யன் மேல் ஒரு தனி மரியாதை பிறந்திருந்தது. ஒரு கலைஞனுக்கு இன்னொரு கலைஞன் மேல் பிறக்கும் மரியாதையைப் போன்றது அது. இன்னும் சொல்லப்போனால் தன்னை விட சிறந்தவன் என்று அறியும் போது வரும் மரியாதை அது.

சலீம் முதல் முதலில் ஒரு கொலை செய்த போது அவனுக்கு வயது 18. இன்று அவனுக்கு வயது 31. 18 வயதிலிருந்து 25 வயது வரை அவன் செய்த கொலைகள் 22. எல்லாக் கொலைகளும் அவன் பணத்திற்காக செய்தது தான். ஆனால் அவன் ஒன்றில் கூட இது வரை பிடிபட்டதில்லை. அது அவன் செல்வாக்கை அதிகப்படுத்தி அவன் வாங்கும் தொகையையும் பல மடங்காக்கியது. அதன் பின் அவன் மிக முக்கிய பிரபல ஆட்களை லட்சக்கணக்கான டாலர்கள் வாங்கி கொல்வதற்கு மட்டுமே சம்மதித்தான். 25 வயதிற்கு மேல் 31 வயது வரை செய்த கொலைகள் நான்கு தான். நான்கில் ஒருவன் ஒரு ஐரோப்பிய கோடீசுவரன், இன்னொருவன் சிறிய ஆப்பிரிக்க நாடு ஒன்றின் சர்வாதிகாரி, ஒருத்தி பிரபல பாப் பாடகி, கடைசியாக கொன்றது ஒரு மபியா தலைவனை. ஒரு கொலை முடிந்து அடுத்த பெரிய தொகைக்கான வேலை வரும் வரை ஆடம்பரமாக மது, மங்கை, உல்லாசப்பயணம் என்று கழிப்பான்.

ஆனால் வேலையை எடுத்துக் கொண்டு முடிக்கும் வரை அவன் வித்தியாசமான மனிதனாகி விடுவான். மது, மங்கை, மனதைத் திருப்பும் வேறு எந்த ஒரு தூண்டிலும் அவனை திசை திருப்ப முடியாது. அவன் முழு கவனமும் அந்த வேலையில் தான் இருக்கும். அவன் செய்யும் வேலையை மிகவும் கச்சிதமாகச் செய்து முடிப்பான். பின் கிடைத்த தொகையை அடுத்த வேலை வரும் வரை கவலை இல்லாமல் செலவழித்து வாழ்க்கையை அனுபவிப்பான்.

அவனை உலகத்தின் ஒரு பயங்கர தீவிரவாத இயக்கம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் தொடர்பு கொண்டு அமானுஷ்யனைத் தீர்த்துக் கட்ட முடியுமா என்று கேட்ட போது அவனுக்கு அது அவமானப்படுத்தியது போல இருந்தது. உலகப் பெரும் புள்ளிகளைக் கொன்ற அவனை பெரிதாக யாருக்குமே தெரியாத ஒரு மனிதனைக் கொல்லச் சொல்வது கேவலப்படுத்துவது போல இருந்தது. ஆனால் அந்த இயக்கத் தலைவனே கூப்பிட்டு இதைக் கேட்ட போது அவன் சொன்னான். “உங்கள் இயக்கத்திலேயே எத்தனையோ சாமர்த்தியமான ஆட்கள் இருக்கிறார்களே”

“இவன் அதிசாமர்த்தியமானவன்”

“மனித வெடிகுண்டுகள் உங்களிடம் சர்வ சகஜமாக இருப்பார்களே. அவர்களை விட்டு அவனை அழித்து விடலாமே. அவன் ஒன்றும் பாதுகாப்புடன் இருக்கும் பிரபல ஆள் அல்லவே”

“நெருங்க முடிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். அப்படியே நெருங்க முடிந்தாலும் யாரும் எதையும் செய்வதற்கு முன் அவன் எதாவது செய்து விடுவான்”

இந்த வார்த்தைகள் வேறு யாராவது ஆளிடம் இருந்து வந்திருந்தால் அவன் கண்டிப்பாக அந்த நபரின் கையாலாகாத்தனம் என்று நினைத்திருப்பான். ஆனால் அங்கு அப்படி அவனால் நினைக்க முடியவில்லை.

தன் கூலித் தொகையைச் சொல்லி அவர்களைப் பின்வாங்க வைக்கப் பார்த்தான். தொகையை சொன்னவுடன் அந்த இயக்கத் தலைவனின் புருவங்கள் உயர்ந்தாலும் மறுப்பு சொல்லாமல் ஒத்துக் கொண்டான். ஆனால் அவன் சொன்னான். “உண்மையில் அவனைக் கொல்ல நாங்கள் வேறு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் கீழ் சிபிஐ, போலீஸ் எல்லாம் இந்த வேலையில் இறங்கி இருக்கிறது…”

“அப்புறம் என்ன?”

“ஒருவேளை அவர்களால் முடியா விட்டால் நீ எங்களுக்கு அந்த வேலையை முடித்துக் கொடுக்க முடியுமா?”

“முடியாது என்று சொல்வதைக் கேவலமாக நினைப்பவன் நான். இன்னும் ஒரு வாரம் நான் டெல்லியில் தான் இருப்பேன். அவர்களால் முடியா விட்டால் என்னிடம் சொல்லுங்கள். பார்த்துக் கொள்கிறேன்.”

“நான் எதற்கும் அவனைப் பற்றிய எல்லா விவரங்களையும் உனக்கு அனுப்பி வைக்கிறேன். அதைப் படித்துப் பார்த்து நீ தயாராக இரு. தேவைப்பட்டால் உன்னிடம் சொல்கிறோம். எங்கள் இயக்கத்தின் முக்கியமான ஆள் உன்னை தொடர்பு கொள்வான். நீ தயார் நிலையில் இருப்பதற்காக மட்டுமே நாங்கள் உனக்கு நீ கேட்ட தொகையில் 10 சதவீதம் தருகிறோம்”

பணத்தையும் விட உன்னால் முடியுமா என்று கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கும் அந்த அமானுஷ்யன் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே சலீம் சம்மதித்தான். மறுநாளே அவன் தங்கியிருந்த அறைக்கு வந்து ஒரு ஆள் பெரிய பெட்டியைத் தந்து விட்டுப் போனான்.

அந்தப் பெட்டியில் இருந்தவை எல்லாமே அமானுஷ்யன் பற்றி தான். ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் அமானுஷ்யனைப் பற்றித் தெரியத் தெரிய அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு பெரிய காகிதத்தில் அமானுஷ்யனின் + மற்றும் – குறியிட்டு எழுதியவன் + குறியின் கீழ் நிறைய எழுத வேண்டி இருந்தது. – குறியில் இரண்டே இரண்டு தான் எழுதினான். 1) உண்மையிலேயே நல்லவன் 2) வலுவான மனசாட்சி இருப்பவன். சலீம் அகராதியில் இந்த இரண்டுமே இந்தக் காலத்தில் பெரிய குறைபாடுகள் தான்.

+ல் நிறைய எழுதிக் கொண்டே வந்தவன் கடைசியில் இரண்டு விஷயங்களுக்கு அடிக்கோடு இட்டான். ஒன்று மனக்கட்டுப்பாடு, இரண்டு கர்வம் துளியும் இல்லாமை. இரண்டும் மிகவும் கஷ்டமானவை என்பதை அவன் அறிவான். இந்த பட்டியலில் இல்லாத விஷயங்கள் இன்னும் இருப்பதாக அவனுக்குப் பட்டது. சீனத்திலும், திபெத்திலும், இமயமலையிலும் அவன் என்னவெல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறான் என்று அறிந்தவர் யாரும் இல்லை. மின்னல் வேகத்தில் இயங்குவான், தொட்டால் ஏதாவது நுண்ணிய நரம்பைத் தட்டி விட்டு தாங்க முடியாத வலியிலும், கோமாவிலும் விட்டு விடுவான் என்பதைத் தவிர வேறு பெரிதாக எதையும் யாரும் அவன் திறமைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கவில்லை.

கடைசி தகவலாக அவன் பழையதை எல்லாம் மறந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக எழுதி இருந்தார்கள். மலையின் மேல் இருந்து விழுந்ததால் அப்படி ஆகி இருக்க வேண்டும் என்றும் இல்லா விட்டால் அவனுக்குத் தெரிந்திருக்கும் விஷயங்களை வைத்து அவன் அவர்களை சுலபமாகக் காட்டிக் கொடுத்திருப்பான் என்று எழுதி இருந்தார்கள்.

அவனைப் பற்றி படித்ததையும் வீடியோவில் பார்த்ததையும் சலீம் யோசித்துக் கொண்டிருக்கையில் தான் அந்த போன் வந்தது. எந்த விதமான முன்னுரையும் இல்லாமல் தகவல் வந்தது அமானுஷ்யன் விவகாரத்தில் அவன் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று. அவனும் சுற்றி வளைக்காமல் சொன்னான் பேசிய தொகையில் 30 சதவீதம் அவனுடைய சுவிஸ் வங்கிக் கணக்கில் போட வேண்டும் என்று. ஒத்துக் கொண்டு அவன் பார்க்க வேண்டிய ஆள் பற்றி விவரம் கூறப்பட்டது.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவன் வங்கிக் கணக்கை இண்டர்நெட்டில் பார்த்த போது பணம் வரவாகி இருந்தது. உடனே சலீம் கிளம்பினான். அவன் பார்க்க வேண்டிய ஆள் பக்கத்து தெருவில் ஒரு லாட்ஜில் இருந்தான். பத்து நிமிடத்தில் அங்கு இருந்தான். அந்த சுத்தமில்லாத லாட்ஜில் சந்தித்த சலனமில்லாத மனிதன் அவனை உட்காரக் கூடச் சொல்லாமல் தற்போதைய நிலவரத்தைச் சொல்ல ஆரம்பித்தான். அந்த இடத்தையும் விவரித்தான்.

சலீமிற்கும் அங்கிருந்த அழுக்கு நாற்காலியில் உட்கார மனமிருக்கவில்லை. நின்று கொண்டே அவன் சொல்வதை கவனமாகக் கேட்டான். டிவியில் இன்னமும் கல்லூரியில் இருப்பது எம்.பி யாதவும், நடிகை காமினியுமா இல்லை தீவிரவாதி யாராவதா என்ற சர்ச்சை நடந்து கொண்டிருந்தது.

அந்த மனிதன் சலீமிடம் கேட்டான். “அவன் அங்கிருந்து தப்ப முடியும் என்று நினைக்கிறாயா?”

“அது அவன் கூட இருக்கும் ஆட்களைப் பொருத்தது. அவனைப் பற்றி முழு விவரம் தெரிந்த ஆட்களாய் இருந்தால் அவனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரிந்தவர்களாய் இருந்தால் அவனால் அங்கிருந்து தப்பிப்பது கஷ்டம். இல்லா விட்டால் அவன் ஏதாவது செய்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது”

சலீம் அமானுஷ்யனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று நினைத்தவனாய் அந்த மனிதன் சொன்னான். “உடன் இருப்பது போலீஸ் மற்றும் சிபிஐ ஆட்கள். அவர்கள் சாமர்த்தியசாலிகளாகத் தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இவனைப் பற்றி எந்த அளவு தகவல் தெரியும் என்பது தெரியவில்லை.”

“எதிரியைப் பற்றி தெரியாமல் இருப்பவர்களை சாமர்த்தியசாலிகள் என்று சொல்வது பொருத்தமில்லை”

அந்த சமயத்தில் டிவியில் ராஜாராம் ரெட்டி சொல்வது கேட்டது. “…. இந்த இடத்தில் கூடிய கூட்டத்தை டிவியில் பார்த்து விட்டு தான் நானும் இங்கே வந்தேன். நீங்கள் எல்லாரும் சந்தேகப்படுவது போல எம்.பி யாதவோ, காமினியோ இங்கே இல்லை. எம்.பி யாதவ் தற்போது துபாயில் இருக்கிறார். நடிகை காமினி சிம்லாவில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். இப்போது தான் நான் அவர்களுடன் பேசினேன். சந்தேகம் இருந்தால் நீங்களும் இதை உறுதி செய்து கொள்ளலாம்….”

“அப்படியானால் கல்லூரிக்குள் இருப்பது தீவிரவாதி ஒருவனா இல்லை பலரா?” ஒரு பெண் நிருபர் கேட்டார்.

“தெரியவில்லை. பொதுவாய் தகவல் வந்திருக்கிறது. அது எந்த அளவு உண்மை என்றோ, இருந்தாலும் அது ஒருவனா இல்லை பலரா என்றோ தெரியாது”

“தீவிரவாதி இருக்கிறானா இல்லையா என்று அங்கே போய் பார்க்காமல் போலீஸ் பட்டாளம் இங்கே பாதையை மறைத்துக் கொண்டு நிற்பது எதற்கு?”

இன்னொரு நிருபர் கேட்டார்.

“சில போலீஸ்காரர்கள் அங்கே சோதித்துப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருவேளை அப்படி தீவிரவாதிகள் அங்கிருந்தால் அவர்களைக் கையும் களவுமாய் பிடிக்கவும் செய்வார்கள். நீங்கள் எல்லோரும் அங்கே சென்றால் அந்தக் கலாட்டாவில் தீவிரவாதிகள் தப்பிக்கவோ, உங்களில் யாரையாவது பிணயக்கைதியாகப் பிடித்துக் கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் போலீஸ்காரர்கள் உங்களை அனுமதிக்காமல் இருக்கிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்…”

ராஜாராம் ரெட்டி பொறுமையாக நிருபர்களை சமாளித்துக் கொண்டிருக்க மிஸ்டர் எக்ஸ் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டே பெருமூச்சு விட்டார்.

சலீம் டிவியில் அதைப் பார்த்துக் கொண்டே கேட்டான். “அவன் தான் கையில் கிடைத்தாயிற்றே. இன்னும் ஏன் அவனைக் கொல்லாமல் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்”

“அவனிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அவர்களுக்கும், எங்களுக்கும் நிறைய இருக்கிறது”

“அப்படியானால் அங்கேயே அவனை விசாரிக்கச் சொல்லுங்கள். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். அவனை வேறு எங்காவது கொண்டு போய் விசாரிக்கலாம் என்று நினைத்தால் அவன் அந்த போக்குவரத்து நேரத்தில் கண்டிப்பாக தப்பித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.” சலீம் உறுதியாகச் சொன்னான்.

சலீம் சொன்னது புத்திசாலித்தனமாகப் படவே உடனடியாக அவன் குறுந்தாடி மனிதனுக்குப் போன் செய்தான். “எங்கிருக்கிறாய்?”

“சம்பவ இடத்தில் தான். நீங்கள் சொன்னபடி நம் ஆட்களும் இருக்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் இருக்கிறோம்”

சலீம் சொன்னதை அவனிடம் சொல்லி விட்டுத் தொடர்ந்தான். “…மந்திரி மூலம் சொல்ல நமக்கு நேரம் போதாது. ரெட்டியிடம் ரகசியமாய் நேரடியாகவே சொல். நாமும் அவனை விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று சொல்”

பேசி விட்டு செல் போனை கட்டிலில் வீசிய அவன் அடுத்தது என்ன என்பது போல சலீமைப் பார்த்தான்.

“நான் அங்கே போகிறேன்”

“நீ அவன் அங்கிருந்து தப்பித்து விடுவான் என்று எதிர்பார்க்கிற மாதிரி தெரிகிறது. எதனால் அப்படி நினைக்கிறாய்?”

“அவனைப் பற்றித் தெரிந்ததனால் தான்”

சலீம் போய் விட்டான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top