அமானுஷ்யன் – 82

கடுமையான வலியை சிறிது நேரமே அனுபவித்திருந்தாலும் மகேந்திரன் முகத்தில் பிரேத களை பரவியிருந்தது. மறுபடியும் வலி போய் விட்டது என்பதை நம்ப முடியாதவனாக அவன் தலையை ஒரு முறை அசைத்துப் பார்த்தான். பின் தன் கழுத்தைத் தடவிய படி அக்‌ஷயைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே கேட்டான். “நீ… நீங்கள் தான் ஆச்சார்யாவின் ஹீரோவா?”

அக்‌ஷய் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “உனக்கு என்னைத் தெரியாதா?”

“ஆச்சார்யா உங்களைப் பற்றி சொல்லித் தான் தெரியும்”

“என்ன சொன்னார்?”

“வாயு வேகம், மனோ வேகம் என்று சொல்வார்களே, அந்த வேகத்தில் அலட்டிக் கொள்ளாமல் இயங்க முடிந்த ஒரு அபூர்வமான மனிதன், கண் இமைக்கும் நேரத்தில் ஆக்கிரமிக்க முடிந்த ஒரு சூப்பர்மேன் என்றெல்லாம் சொன்னார். அப்போதெல்லாம் நான் நம்பவில்லை… ஆனால் இப்போது நம்புகிறேன்…”சொல்லும் போது அவன் கை தானாக அவன் கழுத்தை மறுபடியும் தடவிக் கொண்டது.

அக்‌ஷய் கேட்டான். “இதையெல்லாம் எப்போது சொன்னார்?”

“அவர் நன்றாக என்னிடம் பேசுவார். கம்ப்யூட்டரில் பல சந்தேகங்கள் கேட்பார். சில வேலைகளை கம்ப்யூட்டர் செய்யும் விதம் பார்த்து ஆச்சரியப்படுவார். குழந்தை போல் சந்தோஷப்படுவார். அப்படி ஒரு சமயத்தில் தான் உன்னைப் பற்றி… சாரி உங்களைப் பற்றி சொன்னார்.”

“ஒருமையிலேயே கூப்பிடு பரவாயில்லை. என்ன சொன்னார்?”

“இந்த மாதிரி பல அற்புதங்கள் செய்யக்கூடிய ஒரு இளைஞனை அவருக்குத் தெரியும் என்றும் அவனை மாதிரி அவர் இது வரை இன்னொருவனைப் பார்த்தது இல்லை என்றும் சொன்னார். சில சமயம் உன்னை ஒரு மனிதனாகவே அவரால் நினைக்க முடியவில்லை என்று சொன்னார். அமானுஷ்யன் என்று உன்னை சிலர் கூப்பிடுவதாகச் சொன்னார். உன்னைப் பற்றி பேசும் போது அடைந்த பெருமிதத்தைப் பார்க்கையில் சொந்த மகனைப் பற்றி பேசிய தந்தையைப் போல எனக்குத் தோன்றியது…..”

அக்‌ஷயிற்கு மனதை என்னவோ செய்தது. அவனை மகனாக யாரெல்லாம் நினைத்தார்களோ அவர்களுக்கெல்லாம் தீமையே விளைந்திருக்கிறது. எப்படிப் பட்ட ராசி அவனுக்கு இருக்கிறது என்று நினைத்த போது கஷ்டமாக இருந்தது. ஆனால் ஒரு கணத்தில் எல்லா உணர்ச்சிகளையும் அப்புறப்படுத்தி விட்டு கேட்டான். “இதையெல்லாம் எப்போது சொன்னார்?”

“ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு முறை சொன்னார். அதற்கப்புறம் அவர் உன்னைப் பற்றி பேசவில்லை.”

“சரி சொல். ஆச்சார்யாவை யார் கொன்றார்கள்?” கேட்டபடியே மகேந்திரனின் தோளில் கை வைத்தான். அவன் முகத்தில் சலனமே இருக்கவில்லை என்றாலும் ஏதோ ஒருவிதத்தில் அந்த சலனமின்மை மகேந்திரனைப் பயமுறுத்தியது. தோளில் இருந்த கை கழுத்தைத் தொட அவனுக்கு மைக்ரோ வினாடிகள் போதும். மகேந்திரனுக்கு வியர்த்தது. “சத்தியமாய் சொல்கிறேன். அவரை யார் கொன்றார்கள் என்று எனக்குத் தெரியாது”

அக்‌ஷய் கேட்டான். “உனக்கு அப்போது கழுத்து சுளுக்கியது மிகவும் பிடித்து இருக்கிறதா? இன்னொரு தடவை லேசாகத் தட்டி விடட்டுமா?”

மகேந்திரன் அழாத குறையாகச் சொன்னான். “சத்தியமாக சொல்கிறேன். எனக்கு அவர் கொலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது?”

அக்‌ஷய் திடீரென்று கேட்டான். “உனக்கு என் அம்மாவைத் தெரியுமா?”

“உன்னைப் பற்றியே தெரியாது என்கிறேன். பின் எப்படி உன் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியும்?” மகேந்திரன் குரலில் உண்மையான எரிச்சல் தெரிந்தது.

“சரி நீ ஆச்சார்யாவை யார் கொன்றிருப்பார்கள் என்று சந்தேகப்படுகிறாய்?”

மகேந்திரன் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தான். அக்‌ஷய் தொடர்ந்து சொன்னான். “உன்னைப் போல் அடுத்தவர்கள் விஷயத்தில் அதிக ஆர்வம் இருப்பவர்களுக்கு சுற்றியும் நடப்பது கண்டிப்பாக நன்றாகவே தெரிந்திருக்கும். சந்தேகப்படுகிற மாதிரி இருந்தால் நீங்கள் நன்றாக துருவவும் செய்வீர்கள். உங்கள் ஆபிசில் உள்ள யாரோ ஒருவர் உதவியுடன் தான் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது யாராக இருக்கும்?”

மகேந்திரன் எச்சிலை மென்று விழுங்கினான். அக்‌ஷயின் கை அவனது தோளை லேசாக இறுக்கியது. மகேந்திரன் இனி தாமதிப்பது ஆபத்து என்று உணர்ந்து அவசர அவசரமாகச் சொன்னான். “எனக்கு… எனக்கு…. ரெட்டி மேல் தான் சந்தேகம்….”

அக்‌ஷய் திகைத்துப் போனான். ஆனந்த் ராஜாராம் ரெட்டி பற்றி அவனிடம் ஏற்கெனவே சொல்லி இருந்தான். அவர் நேர்மைக்குப் பெயரெடுத்தவர் என்றும் ஒரு மந்திரியை சிறிதும் பயப்படாமல் ஒரு வழக்கில் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தினார் என்பதை ஆனந்த் தெரிவித்திருந்தான். அந்த வழக்கில் சில்லறை ஓட்டைகளைப் பெரிதாக்கி வக்கீல்களின் சாமர்த்தியத்தால் அந்த மந்திரி தப்பித்து நீதிமன்ற வளாகத்திலேயே அந்த மந்திரியின் அடியாட்கள் ராஜாராம் ரெட்டியை ஏளனம் செய்து கொண்டாடினார்கள் என்றும் அவமானப்பட்டுப் போன ராஜாராம் ரெட்டி பல நாட்கள் சிபிஐ அலுவலகத்திற்கு வராமலேயே வீட்டில் அடைபட்டுக் கிடந்தார் என்றும் ஜெயின் தான் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார் என்றும் தற்போது ரெட்டி தன் வேலையில் பெரிய அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்றும் ஆனந்த் கூறி இருந்தான்.

தான் தப்பிப்பதற்காக அப்படிப்பட்ட உத்தமரைக் குற்றம் சாட்டுகிறானே இவன் என்ற கோபம் அக்‌ஷயிற்கு வந்தது. அவன் முகபாவனையில் இருந்தே அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன் அவசர அவசரமாகச் சொன்னான். “தயவு செய்து நான் சொல்வதை நம்புங்கள். ஒரு காலத்தில் அந்த ஆள் உத்தமன் தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் அந்த ஆள் அப்படி இல்லை. அந்த ஆள் நடவடிக்கை எல்லாம் சந்தேகமாகவே இருக்கிறது….அடிக்கடி யாருடனோ ரகசியமாய் பேசுகிறார்…. ஆச்சார்யா கொலையிலும் அவருக்கு ஏதோ பங்கு இருப்பது போல தெரிகிறது”

அக்‌ஷய் அவனை சந்தேகத்துடன் கேட்டான். “எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?”

“ஆச்சார்யா கொலை செய்யப்பட்ட நாள் ஆபிசில் இருந்தே நேரம் கழித்து தான் போனார். அன்று நானும் ஏதோ வேலையாய் ஆபிசில் இருந்தேன். ஆச்சார்யா அன்றைக்குப் பரபரப்பாக இருந்தார். போவதற்கு முன் கடைசியாக ராஜாராம் ரெட்டி அறைக்குப் போய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கென்னவோ அவர் ஏதோ ஒரு முக்கியமான கேஸ் பற்றிய தடயங்களை ரெட்டியிடம் சொல்லி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அவர் போய் சிறிது நேரம் கழித்து ரெட்டியும் அவசரமாகக் கிளம்பிப் போனார். ரெட்டி அப்படிப் போன விதம் எனக்கு சந்தேகத்தை வரவழைத்தது…..”

இறந்த அன்று ஆச்சார்யா கடைசியாக பரபரப்பாக ராஜாராம் ரெட்டியிடம் பேசி இருக்கிறார் என்ற தகவல் அக்‌ஷயை யோசிக்க வைத்தது. இவன் உண்மையைச் சொல்கிறானா இல்லை பொய் சொல்கிறானா?

*******

மஹாவீர் ஜெயின் ஆனந்த் பேசி விட்டுப் போன பிறகு முழுவதும் உறங்க முடியாமல் தவித்தார். ஆனந்தின் தற்போதைய நிலைக்கு ஒரு விதத்தில் அவரும் காரணம் என்று அவரது மனசாட்சி இடித்துரைத்தது. ஆச்சார்யா கொலைக்குத் துப்புத் துலக்க அவர் அவனை அழைத்து வராமல் இருந்திருந்தால் ஆனந்த் இந்த அளவு இதில் சிக்கி இருக்க மாட்டான், அவன் தாய் கடத்தப்பட்டிருக்க மாட்டாள், அக்‌ஷயைக் காப்பாற்ற சிரமம் இல்லாமல் அவன் ஏதாவது செய்திருப்பான் என்றெல்லாம் அவருக்குத் தோன்றியது.

அப்படி இருக்கையில் ஆனந்தின் தாயும் கடத்தப்பட்டு அவன் தம்பியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கையில் வெறுமனே கை கட்டி வேடிக்கை பார்ப்பது இந்தியாவின் மிகப்பெரிய துப்பறியும் நிறுவனத்தின் தலைவன் என்ற நிலையில் தனக்கு அழகல்ல என்று தோன்றியது.

‘இப்படி எல்லோரும் நடக்கும் தவறுகளைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றால் இந்த நாட்டை யாரால் தான் காப்பாற்ற முடியும்?’

ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள்ளே பலப்பட ஆரம்பித்தது. இல்லா விட்டால் அவரையே அவரால் மன்னிக்க முடியாது. ஆனால் என்ன செய்வது? எப்படி செய்வது? யோசித்துப் பார்க்கையில் இது விஷயத்தில் ராஜாராம் ரெட்டியின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்று அவருக்குத் தோன்றியது. மனிதர் அனுபவஸ்தர், நாணயமானவர், இந்த நேரத்தில் என்ன செய்ய முடியும் என்பதை அவருடன் கலந்தாலோசித்தால் ஏதாவது நல்ல முடிவு எடுக்க முடியும் என்று அவருக்குத் தோன்றியது.

அதிகாலை வரை பொறுத்திருந்து விட்டு ஜெயின் உடனடியாக ராஜாராம் ரெட்டிக்குப் போன் செய்தார். போனில் ரெட்டியின் குரலும் களைப்பாகக் கேட்டது. ஒரு வேளை அவரும் இரவெல்லாம் உறங்கவில்லையோ. “சார் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். ஆபிசிற்கு எத்தனை மணிக்கு வருகிறீர்கள்?”

ரெட்டி அவர் குரலைக் கேட்டு சந்தோஷப்பட்டது போலத் தோன்றியது. “எனக்கு உங்கள் வீட்டுப் பக்கம் ஒரு வேலை இருக்கிறது. நானே உங்களுக்குப் போன் செய்து விட்டு நீங்கள் வீட்டில் இருந்தால் அங்கே வருவதாய் இருந்தேன். நீங்களே போன் செய்து விட்டீர்கள். நான் காலை எட்டு மணிக்கு அங்கே வருகிறேன். அங்கேயே பேசலாம்”

அவரிடம் பேசி முடித்த ஜெயினிற்குத் தெம்பாக இருந்தது. அவரிடம் எல்லா உண்மையையும் சொல்லி, கலந்தாலோசித்து இந்த வழக்கு விஷயத்தில் ஏதாவது உறுதியான முடிவைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் ஜெயின். ஆனால் ரெட்டியைக் கூப்பிட்டு பெரிய ஆபத்தை வலிய வர வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஜெயின் உணரவில்லை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top