மறு நாள் காலை அக்ஷய் வீட்டு முன் ஒரு கும்பலே கூடி நின்றது. அதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். சில வயதானவர்களும் வந்திருந்தார்கள். அக்ஷயைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் சொன்ன போது பீம்சிங் பயந்து போனான். “இது என்ன புதுத் தலைவலி” என்று திகைத்தவன் அக்ஷயை அழைத்து வந்தான்.
அக்ஷயைக் கண்டவுடன் அத்தனை பேரும் சாஷ்டாங்கமாக வாசலிலேயே விழுந்து நமஸ்கரித்தார்கள். அக்ஷயின் கைத் திறத்தால் ஆஸ்பத்திரியில் ஐசியூவில் கிடக்கும் ஆட்களின் குடும்பமும், உறவினர்களும் தான் அவர்கள் என்று புரிய அக்ஷயிற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. இப்ராஹிம் சேட்டின் மகனை மன்னித்துக் காப்பாற்றியது போலவே தங்கள் வீட்டு நபரையும் மன்னித்து காப்பற்ற வேண்டும் என்று கண்ணீருடன் அவர்கள் வேண்டினார்கள்.
அக்ஷய் அவர்களைக் குணப்படுத்துவதாக வாக்களித்து அப்படியே செய்தான். குணமானவர்கள் இயல்பாக நடந்து வந்த போது அந்த குடும்பத்தினர் பட்ட மகிழ்ச்சி அளவில்லாதது. பலரும் அவன் காலில் விழுந்து வணங்கினார்கள். குணமானவர்கள் நேரடியாக அவன் பெற்றோரைக் கொல்ல துணை போனதற்கு மன்னிப்பு கேட்டார்கள். அவனைத் தெய்வம் என்று சிலர் சொன்னார்கள். சிலர் அவன் புகைப்படம் கேட்டார்கள்… அக்ஷயிற்கு ஏனோ முடிவில் ஒருவித சலிப்பே மிஞ்சியது. மும்பையில் அந்த வீட்டில் பெற்றோர் நினைவு அவனைப் பாடாய் படுத்தியது. அவன் இப்ராஹிம் சேட் திருப்பித் தந்த செல்வத்தை எல்லாம் தான தர்மம் செய்து விட்டு இமயமலையில் உள்ள ஒரு புத்த மடாலயத்திற்கு சென்றான்…..
**********
படித்து முடித்த அக்ஷயை ஆனந்த் ஆர்வத்துடன் பார்த்தான். அக்ஷய் முகத்தில் லேசாக சோகம் படர்ந்திருந்தது. அவனுடைய வளர்ப்புப் பெற்றோர் நினைவு தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று அனுமானித்த ஆனந்த் மெல்ல கேட்டான். “உனக்கு இப்போது எல்லாம் நினைவுக்கு வருகிறதா?”
அக்ஷய் உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ஆனந்தை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தபடி சொன்னான். “…..அந்த புத்த மடாலயத்தில் தான் முதல் முதலாய் ஆச்சார்யாவை சந்தித்தேன்….”
***********
ஆச்சார்யாவிற்கு புத்த மதத்தின் மீது இருந்த ஈடுபாடு அலாதியானது. இந்துக் கோயில்களுக்குப் போவதை விட அதிகமாக அவர் புத்த மடாலயங்களுக்குச் செல்வதை மிகவும் விரும்புவார். அப்படிச் சென்று அங்கு தியானம் செய்யும் போது அதிகமாக அமைதி கிடைப்பதாக அவர் நம்பினார். வேலைப் பளுவை அவ்வப்போது அவர் இறக்கி வைத்து விட்டு இமயமலைச்சாரலில் உள்ள புத்த மடாலயங்களுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு முறை சென்ற போது தான் அக்ஷயை அவர் பார்த்தார். அவன் தியானத்தில் மணிக்கணக்கில் உடலை சிறிதும் அசைக்காமல் உட்கார்ந்திருந்த விதம் அவரை ஆச்சரியப் படுத்தியது. அங்கு இருந்த ஒரு புத்த துறவியிடம் தன் ஆச்சரியத்தை அவர் வெளிப்படுத்தினார். அந்தப் புத்த துறவி புன்முறுவலுடன் சொன்னார். “அது ஒன்று மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ ஆசசரியப்படும்படியான விஷயங்கள் அவனிடம் இருக்கின்றன.”
ஆச்சார்யாவிற்கு அவர் சொன்னது புதிராக இருந்தது. “உதாரணத்திற்கு சிலதை சொல்லுங்களேன்”
“ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அவன் காற்று மாதிரி வேகமாகப் போவான். கண்ணை மூடித் திறப்பதற்குள் வேறு இடத்தில் இருப்பான்….”
“அது எப்படி?”
“சீனாவிலும் திபெத்திலும் சில வருடங்கள் இருந்து என்னென்னவோ கற்றுக் கொண்டு வந்திருக்கிறான். மனித உடம்பின் சூட்சுமங்கள் அவனுக்கு அத்துப்படி. லேசாகத் தொட்டோ, தட்டியோ பல பேரை அப்படியே செயல் இழக்கச் செய்து விடுவான்….. இன்னும் எத்தனையோ…”
ஆச்சார்யா அன்று அக்ஷய் தியானத்தில் இருந்து கண்விழிக்கும் வரை காத்திருந்தார். பின் வலிய சென்று அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் சிபிஐயின் டெபுடி டைரக்டர் என்ற விவரம் அவனைச் சிறிதும் பாதித்ததாகத் தெரியவில்லை. வெறுமனே தலையாட்டினான். அவனுடைய வெறுமையான மனநிலை யாரிடமும் நட்பு பாராட்டி பேசுவதில் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. ஆச்சார்யாவால் அன்று அவனுடைய மௌனத்தைக் கலைக்க முடியவில்லை.
அவர் அந்த மடத்து புத்த பிக்குகளிடம் அவனைப் பற்றி மேலும் விசாரித்த போது அவன் அங்கேயே சில காலம் தங்குவான் என்பது தெரிந்தது. மீண்டும் மறு வாரம் வந்தார். அக்ஷயிடம் பேசினார். அக்ஷய் தந்தி வாசகங்களாக பதில் சொன்னான். ஆனாலும் சளைக்காமல் மறு வாரமும் அவனிடம் பேச வந்தார். அவன் பொறுமை இழந்து கேட்டான். “ஏன் என்னை சும்மா தொந்திரவு செய்கிறீர்கள்?”
ஆச்சார்யாவிற்கு அறைந்தது போல இருந்தது. அவர் அவனிடம் கேட்டார். “நீ உன் அப்பாவிடம் கூட இப்படித் தான் பேசுவாயா?”. ஏன் அப்படிக் கேட்டார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் அந்தக் கேள்வி அவனை நிறையவே அசைத்தது என்பது மட்டும் புரிந்தது. சலனமே இல்லாமல் இருந்த அவன் முகத்தில் லேசாக ஒரு சோகம் படர்ந்தது. “என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டான்.
“எனக்கு உன்னிடம் பேச வேண்டும்”
“எதற்கு?”
“காற்று மாதிரி வேகமாக நகரக்கூடியவன், தொட்டாலே ஒரு மனிதனை செயல் இழக்க வைக்கக் கூடியவன் என்றெல்லாம் கேட்ட பிறகு அந்த சக்தி படைத்த மனிதனைப் பற்றி தெரிந்து கொள்ளா விட்டால் என் தலை வெடித்து விடும்”
“முதலில் உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காகத் தானே இது போன்ற இடங்களுக்கு வருகிறீர்கள்”
“நம்மை விட அடுத்தவர் அதிக சுவாரசியமான ஆளாய் இருந்தால் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தானே ஆர்வம் கூடுகிறது”
அவன் சிரித்து விட்டான். அவர் பேசும் விதத்தில் ஏதோ ஒன்று அவனுக்கு நாகராஜனை நினைவுபடுத்தியது. முதல் முறையாக சிநேகத்துடன் சொன்னான். “சரி கேளுங்கள். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?”
“உன்னுடைய இது மாதிரியான அபூர்வ சக்திகளுக்கெல்லாம் யார் குரு?”
“இமயமலையில் ஒரு குகையில் நான் சந்தித்த சித்தர், சீனாவில் ஷாவலின் கோயிலில் ஒரு வயதான குரு, திபெத்தில் ஒரு லாமா…இப்படி சில பேர்”
“இதை எல்லாம் கற்றுக் கொள்வது சுலபமா?”
“அதைத் தவிர உலகில் வேறு எதுவுமே முக்கியமல்ல என்று எல்லாவற்றையும் மறந்து விட்டு கற்றுக் கொள்ளும் போது எல்லாமே சுலபம். நமக்கு பல விஷயங்களுடன் அதுவும் ஒன்று என்கிற போது அது கற்றுக் கொள்ள முடியாத கலை”
அவன் பதில் அவரை யோசிக்க வைத்தது. அதைக் கற்றுக் கொள்வது தன்னால் என்றைக்கும் முடியாத காரியம் என்று அந்தக் கணத்தில் முடிவு செய்து விட்டார்.
“இதையெல்லாம் கற்றுக் கொள்ள உனக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது”
“சித்தரிடம் இரண்டு வருடம், சாவலின் கோயில் குருவிடம் மூன்று வருடம், திபெத்திய லாமாவிடம் இரண்டு வருடம்…..”
ஆச்சார்யா மலைத்துப் போனார். “நீ சுலபம் என்று சொன்னதைக் கேட்ட போது எல்லாம் சேர்ந்து ஓரிரண்டு வருடங்களில் கற்று விட்டாய் என்று நினைத்தேன்..”
அவன் பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.
அவர் கேட்டார். “இத்தனை சக்திகள் கற்ற நீ இங்கே என்ன செய்கிறாய்?”
“இத்தனை சக்திகளும் மனதில் அமைதியைத் தரவில்லை. அதனால் அமைதியைத் தேடி இங்கே வந்திருக்கிறேன்…”
“இத்தனை சின்ன வயதில் என்ன உனக்கு பிரச்னை? ஏதாவது காதல் தோல்வியா?”
அவன் புன்னகைத்தான். இல்லையென்று தலையசைத்தான்.
“பிறகு என்ன?” அவர் விடவில்லை.
அவர் நாகராஜனை ஏதோ விதத்தில் நினைவுபடுத்தியதாலோ என்னவோ அவன் மனம் விட்டு அவரிடம் தன் கதையைச் சொன்னான்…..
அவன் தன் தாய் தந்தை இறந்த விதத்தைச் சொன்ன போது கண்கலங்கினான். அப்போது அவரும் கண்கலங்கினார். அவன் எல்லாம் சொல்லி முடித்த போது ஒரு பிரமிப்பு அவரிடம் தங்கியது.
அவன் சொன்னான். “அப்பா அம்மாவைக் கொன்றவர்களை எல்லாம் பழி வாங்கினால் தான் மனம் நிம்மதி அடையும் என்று அப்போது தோன்றியது. அவர்களை எல்லாம் செயலிழக்க வைத்த போதும் அந்த கோபம் அடங்கவில்லை. ஆனால் சாய்ரா பானு அம்மா காலில் விழ வந்த போதும், அமானுல்லாவும், இஸ்மாயிலும் செத்த போதும் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை…..”
ஆச்சார்யாவிற்கு அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“என் அப்பா, அம்மா இறந்ததற்கும் நான் தான் காரணம். அவர்களை கொல்ல திட்டம் போட்ட இரண்டு பேர் இறக்கவும் நான் தான் காரணம். இந்த நிஜங்கள் மனதில் பாரமாக இருக்கும் போது அமைதி எங்கே சார் வரும்?”
“ஆனால் நீ மீதி எல்லாரையும் மறுபடி காப்பாற்றி இருக்கிறாய். அதுவே பெரிய விஷயம்….”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
அந்த நாளிற்குப் பின் அவரும் அவனும் நெருக்கமாகி விட்டார்கள். அவனுக்கு அவர் நாகராஜனை நினைவுபடுத்தினார் என்றால் அவருக்கும் அவன் ஒரு மகன் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தினான். அவருக்கு ஒரு மகன் இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்திருந்தாரோ அப்படி எல்லாம் அவன் இருந்தான். அவர்கள் நட்பு சில நாட்களிலேயே ஆழப்பட்டு விட்டது.
ஒரு நாள் ஒரு வித்தியாசமான, ஆபத்தான கோரிக்கையுடன் அவனிடம் அவர் வந்தார்.
(தொடரும்)