அமானுஷ்யன் – 47

அக்‌ஷய் இப்போது கல்லூரி மாணவன் போல ஸ்டைலான டிரஸ்ஸில் இருந்தான். கையில் ஒரு வளையல், ஒரு காதில் மட்டும் சின்ன ரிங், எதற்கும் கவலைப்படாத நடையில் அவன் சென்னையில் உள்ள ஆனந்தின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். இது வரை யாரும் அவனைப் பின்தொடரவில்லை. அந்த வீட்டின் முன்னும் யாரும் வேவு பார்ப்பது போலத் தெரியவில்லை.

அழைப்பு மணி அடித்துக் காத்திருந்தான். சாரதா கதவைத் திறந்தாள். “யார் வேண்டும்?”

ஒரு நடைப்பிணம் போல் மீளாத சோகத்தில் ஒடிசலாக இருந்த தன் தாயைப் பார்க்கையில் அவன் மனம் ஆழத்தில் என்னவோ செய்தது. “சாரதாங்கிறது”

“நான்தான். நீங்கள்?”

“என்னைக் கடவுள் அனுப்பினார். அந்தம்மா செய்கிற விரதங்கள், பிரார்த்தனைகள் எல்லாம் தாங்கவில்லை. அந்தம்மா எனக்கு ஓய்வே கொடுக்காமல் சும்மா கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். போய் எல்லாவற்றையும் கொஞ்சம் நிறுத்தச் சொல்லு என்று சொல்லி அனுப்பினார்.”

சாரதாவிற்கும் நகைச்சுவை உணர்விற்கும் என்றுமே எந்த விதத்திலுமே சிறிய சம்பந்தம் கூட இருந்ததில்லை. அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தபடி நின்றாள். ஏதாவது சத்தமாய் சுலோகம் சொல்லி அக்கம் பக்கத்தாரைத் தொந்திரவு செய்து விட்டோமோ. இந்த இளைஞன் புதிதாக அருகில் குடி வந்து இருக்கிறானோ?

மன்னிப்பு கேட்கும் தொனியில் சொன்னாள். “நான் சத்தமாய் சுலோகம் சொன்னது தொந்திரவாய் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் காலேஜில் படித்து வருபவர் போல இருக்கிறது. படிக்கும் போது தொந்திரவு செய்து விட்டேன் என்று நினைக்கிறேன். இனி அந்த மாதிரி ஆகாது.”

பெற்றவளின் வெகுளித்தனம் பார்த்து அக்‌ஷயின் கண்கள் கலங்கின. அம்மா நீ எந்த உலகில் இருக்கிறாய்? என்று மனதில் கேட்டுக் கொண்ட அவன் தன்னை சமாளித்துக் கொண்டு குறும்பாகச் சொன்னான். “அதெல்லாம் ஒன்றுமில்லை. கடவுள் அனுப்பினார் என்றால் ஏன் நம்ப மாட்டேன்கிறீர்கள். அவர் அனுப்பிதான் நான் வந்தேன்”

சாரதாவிற்கு அவன் பைத்தியமோ என்கிற சந்தேகம் லேசாக வந்தது. தெருவில் தெரிந்தவர்கள் யாராவது நடமாடுகிறார்களா என்று பார்த்தாள்.

அக்‌ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். “இப்பவும் கடவுள் வருஷக் கணக்கில் பிரார்த்தனை செய்தாய் என்று உன் காணாமல் போன மகனை உன்னிடம் அனுப்பி வைத்தால் அவனை உன்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லையே சாரதா? என்று கேட்கிறார்’”

சாரதா அப்படியே சிலையாக சமைந்து நின்றாள். அவளுடைய உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. அவளால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. ஆனாலும் எதிரே இருப்பவன் இளைய மகன்தான் என்று பெற்ற வயிறு அடையாளம் காட்டியது. கணவரின் சாயல் அவன் முகத்தில் சிறிது இருப்பது மூளைக்கு எட்டியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிய அவள் ஆகாயத்தை நோக்கி கை கூப்பினாள். எத்தனை ஜென்மம் இனி தவமிருந்து அவள் கடவுள் காட்டிய கருணைக்கு நன்றி சொல்வாள்?

பின் தன் சுய நிலைக்கு வந்தவளுக்கு இது கனவா இல்லை நனவுதானா என்ற சந்தேகம் வந்தது. எதிரே நின்ற மகனை லேசாகத் தொட்டுப் பார்த்தாள். அவன் கன்னத்தைத் தொட்டாள். மெள்ள கையைத் தொட்டாள். அவன் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள். ஏதோ சொல்ல வாயைத் திறந்தாள். வார்த்தைகள் வரவில்லை. தாயின் பாசம் மிகுந்த ஸ்பரிசம் அவனை சிலிர்க்க வைத்தது.

அக்‌ஷய் மிக சுவாதீனமாக வீட்டினுள் நுழைந்து கதவைத் தாளிட்டான். அம்மாவைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய்த் தானே அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான். அம்மாவையே குறும்பாகப் பார்த்துக் கேட்டான். “அது சரி யாரோ ஒருத்தன் வந்து உங்கள் மகன் என்று சொன்னால் நம்பி விடுவீர்களா? மகன் சிபிஐ ஆபிசராய் இருந்தும் உங்களுக்கு ஜாக்கிரதையாய் இருக்கத் தெரியவில்லையே?”

சாரதா திடீரென்று பேசும் சக்தியைப் பெற்றாள். “பெற்றவளுக்குத் தெரியும் அவள் குழந்தை யாரென்று” என்று சொன்னவள், அவனைக் குனிய வைத்து அவன் சட்டைக் காலரைப் பின்னுக்கு இழுத்து அவன் முதுகில் இருந்த நாக மச்சத்தைத் தடவினாள்.

அவள் கைகள் எதிர்பாராமல் பலமாகத் தன்னைக் குனிய வைத்ததைப் பார்த்த அக்‌ஷய் கேட்டான். “பார்க்க ஒடிசலாக இருந்தாலும் பலசாலியாக இருக்கிறீர்களே. உங்களுக்கு கராத்தே குங்க்ஃபூ கூடத் தெரிந்திருந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை போல இருக்கிறதே”

மகனின் குறும்பான பேச்சைக் கேட்டு முதல் முறையாக சாரதா வாய் விட்டுச் சிரித்தாள். சிரித்தவள் அப்படியே அழ ஆரம்பித்தாள். பூஜையறையிலிருந்த கடவுள்கள் படங்களைப் பார்த்து கைகூப்பி நமஸ்கரித்தபடி தலை குனிந்து அழுதாள்.

“போச்சுடா. சாமி சொன்னதில் தப்பே இல்லை. ஐந்து நிமிஷம் கூட அவரை நீங்கள் ஃப்ரீயாக இருக்க விட மாட்டேன்கிறீர்கள்” என்ற மகனை இழுத்துத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவன் தலையைக் கோதியபடி சாரதா தன் அழுகையைத் தொடர்ந்தாள். அவள் அழுகை நிற்க வெகு நேரமாயிற்று. அவன் கண்களும் கலங்க அவனும் அதற்கு மேல் பேசாமல் அவள் மடியிலேயே சிறிது நேரம் படுத்திருந்தான்.

பின் சுதாரித்துக் கொண்ட சாரதா “உன் அண்ணனுக்குப் போன் செய்து சொன்னால் சந்தோஷப்படுவான். முதலில் போன் செய்ய வேண்டும்”

“அவனைப் பார்த்து விட்டுத்தான் வருகிறேன். அவனைப் பார்த்ததில் இருந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றிருந்தேன். உங்களுக்கேன் இந்த ஓரவஞ்சனை?”

“என்ன ஓரவஞ்சனை” அவள் முகத்தில் நிஜமாகவே ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்ற சந்தேகம் இருந்தது.

அக்‌ஷய் சிரித்தபடியே சொன்னான். “அவனை மட்டும் அவ்வளவு அழகாய் பெற்று விட்டு என்னை ஏன் அழகில்லாமல் பெற்று விட்டீர்கள்?”

“உனக்கு அழகில்லை என்று யார் சொன்னது? சிரிக்கிறப்ப நீ மன்மதன் மாதிரி இருக்கிறாய்”

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்ற அக்‌ஷயை எழுப்பி உட்கார வைத்து விட்டு சாரதா மூத்த மகனுக்குப் போன் செய்ய விரைந்தாள்.

“ஹலோ ஆனந்த் தம்பி கிடைச்சுட்டான். உன்னை முதலில் பார்த்து விட்டுத்தான் இங்கு வந்தேன் என்றான். இவ்வளவு நாள் எங்கே இருந்தான் என்ன ஏது என்று ஒன்றும் கேட்கவில்லை. இனிமேல்தான் கேட்கணும். ஆனா ரொம்பவும் குறும்பு. வந்து கொஞ்ச நேரத்திலேயே என்னை சும்மா கிண்டல் செய்ய ஆரம்பிச்சுட்டான்.”

சந்தோஷமும் சிரிப்பும் கொப்புளிக்கத் தாய் பேசியதை வாழ்க்கையில் முதல் முறையாக ஆனந்த் கேட்டான். அவள் பேசப் பேச அவன் கண்களிலும் கண்ணீர் தழும்பியது. பின் அக்‌ஷயும் அவனிடம் பேசினான். “ஐந்து நிமிஷம் அம்மா மடியில் என்னைப் படுக்க வைத்துக் கொண்டதோடு சரி. மகனே சாப்பிட்டாயா. காபி டீயாவது வேண்டுமா என்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் கிளம்பி விடலாமா என்று இருக்கிறேன்.”

அம்மா குரல் கேட்டது. “எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இவன் காபி டீ கேட்கிறான். இருடா செய்து தருகிறேன். என்ன வேண்டும் உனக்கு?”

போன் பேசி விட்டு வைத்தபின் ஆனந்தும் அழுதான். யோசிக்கையில் இத்தனை வருடங்கள் தாயுடனேயே இருந்தும் அவனால் சாதிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் அவன் தம்பியால் சாதிக்கப்பட்டு விட்டன என்பதை உணராமல் இருக்க முடியவில்லை. தாயிடம் கிண்டல், தாய் மடியில் படுத்தல், திட்டுதல், திட்டு வாங்கிக் கொள்ளுதல் போன்ற மகனுக்குரிய உரிமைகள் எதுவும் அவனுக்கு இது வரை கிடைத்ததில்லை. சென்று அரை மணி நேரத்திற்குள் தம்பி அதைத் சாதித்துப் பெற்று விட்டான் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் சிந்தனைகளை போன் அலறிக் கலைத்தது.

“ஹலோ”

சிபிஐ டைரக்டரின் குரல் கேட்டது. “ஆனந்த் நான் மஹாவீர் பேசுகிறேன்.”

“சொல்லுங்கள் சார்”

“சில நாட்களுக்கு முன் டெல்லி புறநகர் பகுதியில் வெடிகுண்டு வைத்த தீவிரவாதி என்று ஒருவனை விளம்பரப்படுத்தினார்களே ஞாபகம் இருக்கிறதா?”

ஆனந்திற்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. “இருக்கிறது சொல்லுங்கள் சார்”

“அவனைப் பற்றி ஒரு முக்கியத் தகவல் கிடைத்திருக்கிறது. நேரில் வர முடியுமா?”

ஆனந்தின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்றது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top