ராஜாராம் ரெட்டிக்கு ஆரம்பத்தில் இருந்தே மகேந்திரனைப் பிடித்ததில்லை. எப்போதுமே அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது, அவனுடைய பொழுது போக்காக இருந்ததுதான் காரணம். கம்ப்யூட்டரில் அவனுக்கு இருந்த அசாத்திய அறிவு ஆபிசில் பலரையும் அவன் உதவியை நாட வைத்தது என்றாலும் ராஜாராம் ரெட்டி அவனை எதற்கும் அண்டியதில்லை. அவருக்குத் தெரிந்து அவனிடம் அதிகமாய் நட்பு பாராட்டாத இன்னொரு நபர் டைரக்டர் மஹாவீர் ஜெயின். அரசியல் சிபாரிசில் வந்தவன் என்பதால் அவர் அவனிடம் அவசியமானதற்கு மட்டும் பேச்சு வார்த்தை வைத்திருந்தார். ஆச்சார்யா ஒருவர் தான் ஆபிசிலேயே அவனிடம் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார். ரெட்டிக்குத் தன்னைப் பிடிக்காது என்று தெரிந்திருந்தும் இன்று ஏனோ மகேந்திரன் மதிய சாப்பாட்டு வேளையில் அவரருகே வந்து சாப்பிட உட்கார்ந்தான்.
அவன் உட்கார்ந்த பிறகு எழுந்து போவது அநாகரீகம் என்பதால் ராஜாராம் ரெட்டி எழுந்து போகவில்லை. அதே சமயம், அவனிடம் பேசவும் முயற்சிக்கவில்லை.
ஆனால் அவனே வலியப் பேசினான். “சார். ஆனந்த் இப்போது எந்த கேஸ் பார்க்கிறார்?”
“வந்ததே ஆச்சார்யா கொலை கேஸிற்குத் தானே”
“அதில்தான் கொலையாளி கிடைத்து விட்டானே. கேஸ் முடிந்த பிறகும் இங்கே ஏன் இருக்கிறான்? வேறு புதிய கேஸ் கொடுத்திருக்கிறார்களா?”
“எனக்குத் தெரிந்து இல்லை. ரகசியமாக ஜெயின் கொடுத்திருந்தால் அது எனக்குத் தெரியாது”
“ஜெயின் சார் உங்களிடம் பெரும்பாலும் எல்லாவற்றையும் சொல்வாரே அதனால் தான் கேட்டேன். அந்த ஆனந்தும், அவரும் ரகசியமாக ஏதோ அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள். ஒரு வேளை ஆச்சார்யா கொலைக் கேஸில் நமக்குத் தெரியாத விஷயங்கள் இன்னும் இருக்கிறதோ?”
“நான் என்னிடம் அவர்களாகச் சொன்னால் ஒழிய எதையும் கேட்பதில்லை”
அவர் எழுந்து விட்டார். அவன் அவரை சந்தேகத்துடன் பார்த்தான்.
********
அக்ஷய் சஹானா வீட்டில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள டெலிபோன் பூத்தில் இருந்து பெங்களூருக்குப் போன் செய்தான். அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆச்சார்யா மனைவிக்கு அவனைத் தெரியுமா, தெரிந்தால் எந்த அளவிற்குத் தெரியும், அவனுடைய பழைய வாழ்க்கை பற்றி முழுவதுமே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகள் அவனுள் இருந்து குழப்பின. அறிமுகப்படுத்திக் கொள்ள பெயர் கூடத் தெரியாதவன், என்ன சொல்லி எதை அறிந்து கொள்ள முடியும்? போன் மணி பல முறை அடித்த பின்தான் எடுத்தார்கள்.
“ஹலோ” ஒரு பெண்மணியின் களைப்பான குரல் கேட்டது.
“ஹலோ” என்றான்.
ஒரு கணம் லலிதாவிற்கு வார்த்தைகள் வரவில்லை. இந்தக் குரல் அவனுடையது. ஆனந்த் வந்து போனதில் இருந்து அவன் தாயைப் பற்றிச் சொன்னது அவள் மனதில் இருந்து கொண்டே இருந்தது. எப்போதாவது அவன் பேசக் கிடைத்தால் நல்லது என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போனது. இப்போது அவனே போன் செய்கிறான்…..
அக்ஷய் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பேசினான். “ஆச்சார்யா சார் இறந்தது எனக்கு தாமதமாகத் தான் தெரிய வந்தது. தெரிந்த பிறகு உங்கள் மகள் போன் நம்பர் கிடைக்கவும் இரண்டு நாளாகி விட்டது. அவர் மரணம் எதிர்பாராதது…..”
கணவனின் மரணத்தைப் பற்றிய பேச்சு வந்ததும் அவள் முகத்தில் சோகம் படர்ந்தது. “பரவாயில்லை. அவர் எப்போதும் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார். சில சமயங்களில் எங்களுக்குப் பிறக்காத மகனாய் உங்களை நினைக்கிறாரோ என்று கூட எனக்குத் தோன்றும். அந்த அளவிற்கு அவர் உங்களை நேசித்தார்….”
இப்போது அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அப்படியானால் அவனை ஆச்சார்யாவிற்கும் அவர் மனைவிக்கும் நன்றாகத் தெரியும்…. அவனைப் பற்றித் தெரிந்த ஒரு நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.!
லலிதா தொடர்ந்தாள். “நாம் இருவரும் போனில் மட்டுமே பேசி இருக்கிறோம் என்றாலும் நேரில் பார்க்க நான் நிறைய முறை நினைத்ததுண்டு…. உங்கள் அண்ணன் மூன்று நாள் முன்னால் வந்திருந்தார்….”
அவனுக்கு ஒரு கணம் மெய்சிலிர்த்தது. அவனுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான்……
அவன் மௌனத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட லலிதா அவசர அவசரமாகச் சொன்னாள். “நான் ஒரு முட்டாள். உங்களுக்கு எப்படி அவரைத் தெரிந்திருக்கும்? நீங்கள் தான் மூன்று வயதிலேயே அவர்களை விட்டுப் பிரிந்து விட்டீர்களே….. உங்கள் அண்ணன் எல்லாவற்றையும் சொன்னார். உங்கள் நாக மச்சம் பற்றியும் சொன்னார். உங்களுக்காக உங்கள் அம்மா கும்பிடாத கடவுள் இல்லை, இருக்காத விரதம் இல்லை என்று சொன்னார். அப்போது நான் அவருக்குத் தைரியம் சொன்னேன் ”உங்கள் அம்மா பிரார்த்தனை வீண் போகாது உங்கள் தம்பி கண்டிப்பாய் கிடைப்பார்” என்றேன். மூன்றே நாளில் நீங்கள் போன் செய்கிறீர்கள். இது தான் தெய்வ சங்கல்பம் என்பது. இன்னொரு விஷயம். உங்கள் அண்ணா கூட சிபிஐயில் தான் வேலை செய்கிறார். நீங்கள் பேசக் கிடைத்தால் உடனடியாகச் சொல்லச் சொன்னார். உங்கள் போன் நம்பர் கொடுங்கள். நான் அவரை உங்களிடம் பேசச் சொல்கிறேன்”
அவள் பரபரப்புடன் சொன்னவற்றைக் கேட்டு அக்ஷயின் உற்சாகம் வடிந்து போனது. மின்னல் வேகத்தில் அவன் மனம் யோசித்து இதில் ஏதோ சூது இருப்பதாக முடிவு செய்தது. யாரோ சிபிஐயிலிருந்து அவனைத் தேடுகிறார்கள். அவர்கள் ஆச்சார்யாவைக் கொன்ற கூட்டத்தவர்களாகக் கூட இருக்கலாம். ஆச்சார்யா மனைவியை ஏமாற்ற அண்ணன் என்று சொல்லி இருக்கலாம். அம்மா செண்டிமெண்டை உபயோகித்திருக்கலாம். மூன்று வயதில் காணாமல் போய் விட்டான் என்று வசதியான பொய்யைச் சொல்லி இருக்கலாம். அப்போது தான் அவன் பேசக் கிடைத்தவுடன் அந்தம்மாள் தகவல் தெரிவிப்பாள் என்று நினைத்திருக்கலாம். இந்த சினிமாத் தனமான கற்பனைகள் நிஜ வாழ்க்கையில் இருக்க கண்டிப்பாகச் சாத்தியமில்லை.
”ஹலோ…” லலிதாவுக்கு மறுபக்கம் அவன் இருக்கிறானா இல்லையா என்ற சந்தேகம் வந்து விட்டது.
“அம்மா நீங்கள் எங்கள் அண்ணாவின் போன் நம்பர் கொடுங்கள். நானே பேசுகிறேன்”
லலிதாவிற்கு அதில் எதுவும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. “சரி. ஒரு நிமிஷம்….. உம். எழுதிக் கொள்ளுங்கள்….”
அக்ஷய் எழுதிக் கொண்டான்.
”ஹலோ. இன்னொரு முக்கியமான விஷயம். உங்கள் அண்ணா உங்கள் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார். ஜாக்கிரதையாக இருங்கள்”
“நன்றிம்மா. இன்னொரு நாள் சாவகாசமாகப் பேசுகிறேன்” என்று சொல்லி போன் இணைப்பைத் துண்டித்தான்.
அக்ஷயிற்கு சந்தேகமே இல்லை. அண்ணன் என்ற பெயரில் வந்திருப்பது எதிரியாகத் தான் இருக்க வேண்டும். லலிதா நம்பிக்கையைப் பெற அண்ணன் அம்மா செண்டிமெண்ட் என்றால் அவன் நம்பிக்கையைப் பெற அவன் உயிருக்கு ஆபத்து என்ற ரகசியத் தகவல் மாதிரி அந்த ஆள் சொல்லி இருக்கிறான். அப்போது தான் உடனடியாகப் போன் செய்வேன் என்று எதிர்பார்த்திருக்கிறான் முட்டாள்…..
*************
லலிதாவிற்கு ஒருவித சந்தோஷம் மனதில் நிறைந்திருந்தது. உடனடியாக ஆனந்திற்கும் போன் செய்தாள்.
“ஹலோ…ஆனந்த் நான் பெங்களூரில் இருந்து லலிதா பேசுகிறேன். உங்கள் தம்பி போன் செய்தார்…இப்போது தான்….உங்கள் செல்போன் நம்பரை அவரிடம் கொடுத்திருக்கிறேன். அவரே போன் செய்கிறேன் என்று சொன்னார்”
ஆனந்திற்கு லலிதாவுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. கண்களில் நீர் தேங்கியது. வார்த்தைகள் தொண்டையிலேயே தடுமாற நன்றி சொல்லி விட்டு தன் செல் போன் அடிக்கக் காத்திருந்தான்…. காத்திருந்தான்… காத்துக் கொண்டே இருந்தான்…. அவன் செல்போன் அடிக்கவேயில்லை. எடுத்து சார்ஜ் இருக்கிறதா டவர் இருக்கிறதா என்று பார்த்தான். எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ஒவ்வொரு கணமும் யுகமாய் நகர்ந்தது. ஆனால் அவன் தம்பி அவனை அழைக்கவேயில்லை…..
**********
வருணும் அக்ஷயும் கைநிறைய பொருள்களுடன் ஷாப்பிங் போய் வந்தார்கள்.
வருணின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் அக்ஷயின் தலைமையில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வருணுக்கு என்ன எல்லாம் பிடிக்கும் என்று யோசித்து யோசித்து அக்ஷய் ஒவ்வொரு பொருளாக வாங்கி வந்தான். சிலவற்றிற்கு வருணையே அழைத்துச் சென்று தேர்ந்தெடுக்க வைத்தான். வருணுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சஹானா ஒருவித சோகத்தோடு மகன் சந்தோஷத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அவள் கணவன் இருந்த வரை வருணின் பிறந்த நாள் உடை கூட வருண் விருப்பப்படி இருக்காது. விலை உயர்ந்த உடை தான் மகனுக்கு அவன் வாங்கித் தருவான் என்றாலும் அவன் தனக்குப் பிடித்ததைத் தான் வாங்கித் தருவான். ஆரம்பத்தில் ”இதிலாவது அவனுக்குப் பிடித்ததை வாங்கித் தரலாமே” என்று சஹானா சொல்லிப் பார்த்திருக்கிறாள்.
“அவனுக்கு என்ன தெரியும்? நாம் தான் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்பான். வருண் கடையை விட்டு வெளியே வருகிற வரை ஏக்கத்தோடு தனக்குப் பிடித்த ஆடைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை ஒரு முறை பார்த்து விட்டு தனியே அழுதிருக்கிறாள். அதன் பிறகு அவள் அவர்களுடன் போவதில்லை. அதை எல்லாம் பார்க்க அவள் மனதில் சக்தியில்லை.
இப்போது வருணும் அக்ஷயும் ஷாப்பிங் போய் வரும் போது கை நிறைய பொருள்களுடன் வரும் போதும் அவளால் அவள் கணவன் காலத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
“அம்மா இன்றைக்கு என்ன எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம் சொல் பார்க்கலாம்” என்ற வருண் டிவியில் தாய் வருவதைப் பார்த்தவுடன் “அம்மா உன் ப்ரோக்ராம்” என்று உற்சாகமாகச் சொன்னான்.
இமயமலைச் சாரலில் இருந்த ஒரு பழமை வாய்ந்த கோயிலையும் அந்தப் பகுதியில் இருந்த பழங்குடி மக்கள் பற்றியும் சஹானா விளக்கியது டிவியில் வந்து கொண்டிருந்தது.
சஹானா அக்ஷயிடம் சொன்னாள். “நாங்கள் உங்களை முதலில் பார்த்தது இந்த ப்ரோகிராம் ஷூட்டிங் முடித்து வந்து கொண்டிருந்த போது தான்”
துரதிர்ஷ்ட வசமாக அதே நிகழ்ச்சியை அந்த ரெடிமேட் கடைக்காரனும் பார்த்துக் கொண்டிருந்தான். “அட இந்தப் பெண் அந்த ஆள் கூட வந்தவள் தானே”. அவனுக்குத் தன் அதிர்ஷ்டத்தை அவனாலேயே நம்ப முடியவில்லை. முதலில் கிடைத்த பணத்தை விட அதிகமாகத் தருவதாக அவர்கள் சொல்லி இருந்ததால் பரபரப்புடன் தன் செல்போனை எடுத்தான்.
(தொடரும்)