அமானுஷ்யன் – 26

அந்தச் செய்தித்தாளில் பார்த்த புகைப்படம் அக்‌ஷயிற்கு நல்ல பரிச்சயமான முகம். ஆனால் அந்தப் புகைப்படம் அவனுக்கு வேறெந்த நினைவையும் ஏற்படுத்தவில்லை. அந்தப் புகைப்படத்துடன் வந்த செய்தியை அவன் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தான். அந்த மனிதர் பெயர் ஆச்சார்யா என்றும், அவர் சிபிஐயின் அடிஷனல் டைரக்டர் என்றும் அவர் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டதாகவும் அவரைக் கொன்ற கொலையாளியிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் எழுதியிருந்தது.

அவரைக் கொன்ற தேதிக்கு மறுநாள் தான் அவனையும் யாரோ கொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அவனுக்கு நன்றாகப் பரிச்சயம் உள்ள நபராக அவர் இருப்பதால், அவரைக் கொன்றதையும் அவனைக் கொல்ல முயற்சி செய்ததையும் சேர்த்துப் பார்க்கும் போது அவரைக் கொன்றவர்களே தான் அவனையும் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று தோன்றியது. அவன் அந்த செய்தியுடன் கொலைகாரன் என்று போட்டிருந்த இன்னொரு புகைப்படத்தைக் கூர்ந்து பார்த்தான். பெயர் கிஸான்சந்த் என்று இருந்தது. அந்த முகம் அவனுக்கு அன்னியமானதாக இருந்தது. ஆச்சார்யாவைக் கொன்றவனைப் பிடித்து விட்டார்கள் என்றால் இப்போது அவனைக் கொல்லத் துடிப்பவர்கள் யார்?

அந்தப் புகைப்படத்தையே கூர்ந்து பார்த்தான். அந்தக் கண்களில் உயிர் இல்லை. கிஸான்சந்த் ஏதோ வியாதியால் பலமாக பாதிக்கப்பட்டவன் போலத் தெரிந்தான்…..

“எதை அவ்வளவு சுவாரசியமாகப் பார்க்கிறீர்கள்?” – சஹானாவின் குரல் கேட்டது.

அக்‌ஷய் நிமிர்ந்தான். சஹானா அவனுக்கு எதிரில் நின்றிருந்தாள். சாதாரண உடைகளிலும் மிக அழகாகத் தோன்றும் இவள் வழக்கம் போல் வேண்டுமென்றே தன் அழகைக் குறைத்துக் காண்பிக்க முயற்சி செய்தும் தோற்றுப் போயிருப்பதை அவன் உணர்ந்தான். கணவன் இறந்த பின் அழகாகத் தெரியக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நடந்து கொள்வது போலத் தோன்றியது. எனவே ஆரம்பத்தில் அவன் கவனிக்கத் தவறிய அழகை அவன் பின்னர் தான் உணர ஆரம்பித்தான். இப்போது கூட ஒரு மங்கிப் போன சுடிதாரை உடுத்திக் கொண்டிருந்தாலும் அவள் தேவதை போலத் தான் தெரிந்தாள்.

“ஹலோ பழையபடி நீங்கள் உங்களை மறந்து விடவில்லையே” அவள் விளையாட்டாகக் கேட்டதும் அவன் சிரித்தான்.

“இல்லை…. இந்தப் பத்திரிகையில் இருக்கும் இந்த மனிதர் எனக்கு நன்றாகப் பரிச்சயமானவர் போல இருக்கிறது. அதனால் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்”

அவள் அவன் எதிரில் அமர்ந்து அந்த செய்தித்தாளை வாங்கி அவன் காட்டிய புகைப்படத்தைப் பார்த்தாள். “இவர் ஆச்சார்யா. சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட சிபிஐ அடிஷனல் டைரக்டர். இவர் போட்டோவைப் பார்த்த பிறகு வேறெதாவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?”

அவள் ஆர்வத்தோடு கேட்க அவன் முகம் வாட இல்லையென்று தலையசைத்தான். அவன் முகவாட்டம் எல்லாம் ஒரு கணம் தான். மறுகணம் அது ஒரு பெரிய விஷயமல்ல என்பது போல் முகம் பழைய நிலைக்குத் திரும்பியது. சற்று முன் அவளைப் பார்த்தவுடன் கூட அவன் பார்வையில் தெரிந்த இனம்புரியாத உணர்ச்சி என்ன என்று அவள் கண்டுபிடிப்பதற்குள் அவன் முகம் மாறி விட்டிருந்தது. அவன் என்ன நினைக்கிறான் என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று தோன்றியது.

“நான் இவர் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளை எல்லாம் சேர்த்து எடுத்துத் தர என் நண்பன் மதுவிடம் சொல்கிறேன். அதைப் படித்துப் பாருங்கள். பின் வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா என்று பார்ப்போம்… இன்றைக்கு இரவு மது வருவான். அவன் மிகவும் நல்லவன். அவனிடம் உங்களைப் பற்றி நான் சொல்லியிருக்கிறேன். அவன் மூலம் உங்களைப் பற்றிய தகவல் எதுவும் வெளியே போகாது. அதை நீங்கள் உறுதியாக நம்பலாம்…..”

அவள் சொல்லி விட்டு அவன் ஏதாவது மறுப்புத் தெரிவிக்கிறானா என்று அவனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் ஒன்றும் சொல்லாமல் அவளையே அமைதியாகப் பார்த்தான். தன் மனதில் உள்ள எதையும் வெளிப்படுத்தாமல் இருக்கும் இவனை மதுவிற்குப் பிடிக்காது என்று அவளுக்குத் தோன்றியது.

“உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் அவனை வர வேண்டாம் என்று சொல்கிறேன்”

“அவர் வரட்டும். நீங்கள் நம்புகிற ஆளை நானும் நம்புகிறேன்”

*********

அம்மாவின் போன் வரும் வரை ஆனந்திற்கு இருப்பு கொள்ளவில்லை. காலையில் அவள் போன் செய்தபோது பரபரப்புடன் உடனே எடுத்தான்.
“சொல்லும்மா”

“ஆனந்த் அவர் இப்போது ஹரித்வாரில் இருக்கிறாராம். அங்கே சங்கர மடத்தில் இருக்கிறாராம். அடுத்த வாரம் நேபாளத்திற்குப் போகிறாராம்”

“சரிம்மா. நான் என்னிடம் கேட்டவரிடம் சொல்லி விடுகிறேன்”

“ஆனந்த்”

“சொல்லும்மா”

“அவரைப் பார்க்க யார் போனாலும் அவன் இப்போது எங்கே, எப்படி இருக்கிறான்னு கேட்கச் சொல்லுடா”

அவனுக்குத் தொண்டையை அடைத்தது. சமாளித்துக் கொண்டு சொன்னான். “சொல்றேன்ம்மா”

“அவர் என்ன சொல்றார்னு கேட்டு எனக்கு மறக்காமல் போன் செய்”

“சரிம்மா”

அவன் அவசரமாக ஹரித்வாரிற்குக் கிளம்பினான்.

**********

ஹரித்வாரில் சங்கரமடத்திற்கு ஆனந்த் போனபோது அந்தச் சாது அங்கு இருக்கவில்லை. ஹரித்வாரிலேயே இருக்கும் மானசதேவி கோயிலில் தியானம் செய்வதற்காகப் போயிருக்கிறார் என்றார்கள். ஆனந்த் மானசதேவி கோயிலிற்குப் போனான். கோயிலில் அதிகமாய் கூட்டம் இல்லை. கோயிலின் வெளிப்பகுதியில் ஒரு ஓரமாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்து கொண்டிருந்த அவர் அருகில் சென்று நின்றான். பத்து நிமிடம் கழித்துக் கண்களைத் திறந்தவர் “என்ன?” என்று கேட்டார்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஆனந்த் மூன்று வருடங்களுக்கு முன்னால் அவரை சந்தித்துத் தன் காணாமல் போன தம்பி பற்றிக் கேட்டதை நினைவுபடுத்தினான். அவருக்கு நினைவிருந்ததாகத் தெரியவில்லை.

“சரி இப்போது என்ன வேண்டும்?”

“தம்பியைப் பற்றி இப்போதைய தகவல் ஏதாவது…..”

தனக்கு எதிரில் அவனை அமரச் சைகை காட்டிய அவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். சுமார் எட்டு நிமிடங்கள் கழித்து கண்களைத் திறக்காமல் சொன்னார். “நீ சந்தேகப்படுகிற மாதிரி உன் தம்பி இன்னும் சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறான்….”

தன் சந்தேகத்தை அவர் சரியாகச் சொன்னதில் ஆனந்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. அதே சமயம் அவன் உயிரோடு இருக்கிறான் என்ற தகவல் வயிற்றில் பாலை வார்த்தது.

அவர் தொடர்ந்தார். “…..அவன் வீட்டுக்குள்ளே இருக்கிறான். அவன் மடியில் ஒரு பையன் உட்கார்ந்திருக்கிறான். எதிரில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். சிறிது தள்ளி ஒரு வயதான அம்மாள் நின்றிருக்கிறாள்…..”

தன் தம்பிக்குத் திருமணம் ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் ஆனந்திற்கு வந்தது.

“அவன் இருக்கும் இடம் எங்கே என்று சொல்ல முடியுமா?”

அவர் தெரியவில்லை என்பது போல் கண்களை மூடியபடியே தலையசைத்தார். சிறிது நேர மௌனத்திற்குப் பின் அவர் தொடர்ந்தார். “அவனை நிறைய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது…….”

சற்று முன் கிடைத்த நிம்மதி இப்போது காணாமல் போனது. ஆனந்த் அவரையே கவலையோடு பார்த்தான். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் அவர் ஏதோ காட்சியை உள்ளுக்குள்ளே பார்த்துக் கொண்டிருந்தார் என்று ஆனந்திற்குத் தோன்றியது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. கண்களைத் திறந்தவர் சரி நீ போகலாம் என்பது போல் தலையசைத்தார்.

“நீங்கள் ஏதோ பார்த்தது போல் தெரிந்தது. ஆனால் எதுவும் சொல்லவில்லையே”

“எதிர்காலத்தில் நடப்பது எல்லாமே தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.. பல சமயங்களில் அப்படித் தெரிந்து கொள்வது மிகப் பெரிய பாரம். அது தேவையில்லை…”

அவனுக்கு அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்து விடும் போலத் தோன்றியது. “என்னவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்கள்”

அவனையே கூர்ந்து பார்த்தவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார். அவன் மறுபடியும் சொல்லச் சொன்னான்.

அவர் சொன்னார். “உன் தம்பி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைப் பார்த்தேன்.”

அவன் முகம் வெளுத்தது. அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். அவரை வற்புறுத்திக் கேட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அம்மா நினைவு வரக் கண்களில் நீர் நிறைந்தது.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த சாது அமைதியாகச் சொன்னார். “ஒரு காட்சி முழு உண்மையையும் சொல்லி விடுவதில்லை. எல்லாவற்றையும் நடத்தும் இறைவன் இருக்கிறான். அவனை நம்பு. பிரார்த்தனை செய். இந்த மானசதேவி மனதாரச் செய்யும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்குப் பெயர் போனவள்”

ஆனந்த் தலையசைத்தான். பின் தன்னை சுதாரித்துக் கொண்டு கேட்டான். “உங்களுக்குத் தெரிந்த காட்சி ஏதாவது இதுவரை பொய்யாகி இருக்கிறதா?”

இரக்கத்துடன் அவனைப் பார்த்தபடி அவர் சொன்னார். “இல்லை”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top