அக்ஷய் அந்த மீசைக்காரரின் சந்தேகத்தைக் கவனித்தாலும் அலட்டிக் கொள்ளவில்லை. சஹானாவிடம் சொன்னான். ”சஹானா. நான் அவனைப் பற்றி சந்தேகப்பட்டது எல்லாம் உண்மையாகி விட்டது பார்த்தீர்களா. இனியாவது வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடாதீர்கள்”
சஹானா ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். ஆரம்பத்தில் இருந்து அலட்டாமல், பதறாமல் சற்று சோம்பலாக சோபாவில் சாய்ந்து கொண்டு பேச அவனால் எப்படி முடிகிறது என்று அவள் திகைத்தாள்.
”சஹானா. உங்கள் டிவி ரேட்டிங் உடனடியாக ஒரு வழி சொல்கிறேன் கேளுங்கள். அந்தத் தீவிரவாதி உங்களுடன் மணிக்கணக்கில் காரில் பயணம் செய்து வந்திருக்கிறான். ஆனால் அதே நேரத்தில் அவன் இங்கேயும் வெடிகுண்டு வைத்திருக்கிறான். இதிலிருந்து இன்னொருவன் அவன் முகஜாடையிலேயே இருக்கிறான் என்று தெரிகிறான். அதை சொல்ல இந்த போலீஸ்காரர்கள் சங்கடப்பட்டாலும் நமக்கு அப்படித்தான் தோன்றுகிறது. அவர்கள் இரட்டைப் பிறவியாக இருக்கலாம். இல்லை அவன் தன்னைப் போலவே இன்னொருவனை சர்ஜரி கூட செய்திருக்கலாம். அவனை வைத்து நீங்கள் பெரிய பரபரப்பை உண்டாக்கலாம். அவன் நல்லவனா, கெட்டவனா? உயிரைக் காப்பாற்றும் உத்தமனா, உயிரைக் குடிக்கும் எமனா? என்றெல்லாம் முதலில் சில நாட்கள் விளம்பரம் செய்து அவன் பற்றி நீங்கள் துப்பறிய ஆரம்பிக்கலாம். தீவிரவாதியுடன் ஐந்து மணி நேரப் பயணம் என்று சொல்லி நீங்கள் தனிப்பட்ட முறையில் கூட பிரபலம் ஆகலாம். எனக்குத் தோன்றுகிறது சஹானா இது உங்களுக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம். நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் நான் சொல்வேன்”
அவ்வளவு தான் நான் சொல்வேன் என்று முடித்தது போலீஸ்காரர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘அடப்பாவி இதற்கு மேல் என்னடா சொல்ல வேண்டும்” எனறு மனதினுள் பொரிந்து தள்ளிய மீசைக்காரர் அந்த அதிகப்பிரசங்கியை முறைத்து விட்டு சஹானா பக்கம் திரும்பினார்.
”மேடம் தயவு செய்து இந்த முட்டாள்தனம் எல்லாம் செய்து விடாதீர்கள். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் நீங்கள் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று நாங்கள் எச்சரிக்கிறோம். முக்கியமாக உங்கள் டிவிக்கெல்லாம் சொல்லவே கூடாது”
அக்ஷய் கிண்டலாகச் சொன்னான். ”சார் இது மீன்குட்டியிடம் நீந்தக்கூடாது என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. அவர்கள் தொழிலே இந்த மாதிரி பரபரப்பை விற்பது தானே சார்”
வழுக்கைத்தலையருக்கு அவன் வாயில் ப்ளாஸ்திரி எதாவது ஒட்டி வைத்தால் என்ன என்று தோன்றியது. இவன் சொல்வதை எல்லாம் அந்தப் பெண் கேட்டு இதை விளம்பரப்படுத்தினால் அதை விடப் பெரிய பிரச்னை வேறு இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.
”தம்பி. பரபரப்பு என்ற பெயரில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.” என்று சொன்னார்.
மீசைக்காரர் அங்கிருந்து முக்கியமாய் அவனிடமிருந்து கிளம்பினால் போதும் என்ற முடிவுக்கு வந்தவராக எழுந்தார்.
சஹானாவிடம் சொன்னார். ”மேடம். உங்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். இந்த விஷயம் பற்றி எங்களைத் தவிர யாரிடமும் பேசாதீர்கள். அவன் பெரிய தீவிரவாதி என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவன் உங்களுக்கு எந்த பிரச்னையையும் செய்யாமல் இருந்தது உங்கள் நல்ல நேரம். அவனைப் பிரபலப்படுத்தினால் எங்கள் வேலையும் கெடும். அவனும் உங்களை தண்டிக்க வரலாம். அதனால் தயவு செய்து ரகசியமாகவே இதை வையுங்கள். அவன் எப்போதாவது வந்தாலோ, போனில் தொடர்பு கொண்டாலோ உடனடியாக எங்களுக்குத் தெரிவியுங்கள்”
அவர் நீட்டிய விசிட்டிங் கார்டை சஹானா வாங்கிக் கொண்டாள்.
மீசைக்காரர் மரகதம் பக்கம் திரும்பினார். ”அம்மா நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள். அவன் வந்தால் எங்களுக்கு தகவல் சொல்லுங்கள்”
அவர் பேசப் பேச மரகதத்திற்கு வியர்த்தது. வயிற்றைக் கலக்கியது.
அவள் முகத்தைப் பார்த்த அக்ஷய் சிரித்தபடி சொன்னான். ”பெரியம்மா. பயப்படாதீர்கள். அவன் கண்டிப்பாக வருவான் என்று அவர் சொல்லவில்லை. வந்தால் சொல்லுங்கள் என்கிறார் அவ்வளவு தான்.”
மரகதத்திற்கு இன்னும் வியர்த்தது. என்ன மனிதனிவன்? கொஞ்சம் கூட பயமே இல்லாமல் யாரையோ பற்றி சொல்வது போல் அனாயாசமாகப் பேசுகிறானே.
மீசைக்காரர் மரகதத்தை தைரியமூட்டும் வகையில் பார்த்தார். பின் அக்ஷய் பக்கம் திரும்பினார். ”நீங்களும் தான். அவனைப் பற்றி எதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்”
”நான் நாளை சஹானாவின் மகன் பிறந்த நாள் முடிந்தவுடன் போய் விடுவேன் சார்……”
மீசைக்காரர் அவன் எங்கு போகப் போகிறான். அவன் விலாசம் என்ன என்று விசாரித்து அவனைப் பற்றிய எல்லா விவரமும் சேகரிப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்தார். அவர் அவனைப் பற்றி கேட்க வாய் திறந்த போது அவன் முந்திக் கொண்டு அவரிடம் ரகசியமாய் நெருங்கி வந்து கேட்டான். ”சார் உண்மையில் அவனும், இங்கு குண்டு வைத்தவனும் கூட்டாளிகளா, இல்லை இரட்டையர்களா?…”
”நான் அவனைப் பற்றிய ரகசியத் தகவல்கள் எதுவும் அவன் பிடிபடும் வரை சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். மன்னிக்கவும்” என்றவர் அவசரமாகத் தன் சகாவைப் பார்த்து தலையசைத்தார். இருவரும் கிளம்பினார்கள். மரகதமும் சஹானாவும் நிம்மதிப் பெருமூச்சு விட அக்ஷய் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
”சார் ஒரு நிமிஷம்….”
போலீஸ்காரர்கள் இருவரும் நின்றார்கள்.
”நான் கண்டிப்பாக சஹானாவிடம் பேசி அவன் வந்தாலோ, பேசினாலோ ரகசியமாக உங்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்கிறேன். எனக்கு உங்களால் வேறு ஒரு உதவி ஆக வேண்டும். செய்வீர்களா?”
”என்ன உதவி” மீசைக்காரர் சந்தேகத்தோடு பார்த்தார்.
மிக ரகசியமாக அவர் அருகில் வந்து சொன்னான். ”நான் ஒரு முஸ்லீம் பெண்ணை மனதாரக் காதலிக்கிறேன். அவள் ஆக்ராவில் இருக்கிறாள். அவர்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் எங்கள் கல்யாணத்திற்கு பெரிய எதிர்ப்பு இருக்கிறது. ஒரு வேளை நாங்கள் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டால் உங்கள் போலீஸ் டிபார்ட்மெண்ட் எங்களுக்குப் பாதுகாப்பு தருமா?”
அவர்கள் நின்று கொண்டிருந்தது ஜெய்பால்சிங் வாசலில் என்பதாலும், அவர் வாசலில் தான் நின்று கொண்டிருந்தார் என்பதாலும் அவன் ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்ததைப் பின்னால் வந்து நின்றபடி கேட்கத் தவறவில்லை.
”ஓ நீங்கள் இரண்டு பேரும் போலீசா?”
இரு போலீசாரும் அக்ஷயை முறைத்தனர். அக்ஷய் அவர்களுக்காக பதில் சொன்னான். ”ஆமாம்”
ஜெய்பால்சிங் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். ”அக்ஷய் நீ ஏன் பயப்படுகிறாய். நீங்கள் போலீஸ் ஸ்டேஷனில் போய் நின்றால் அவர்கள் கண்டிப்பாகப் பாதுகாப்பு தந்து தான் ஆக வேண்டும். அது அவர்கள் கடமை. ஏன் சார் நீங்கள் பாதுகாப்பு செய்ய மாட்டீர்களா?”
வழுக்கைத்தலையர் சொன்னார். ”இவர் சொல்வது ஆக்ராவில். அதனால் அந்தப் போலீஸ்காரர்கள் தான் இவருக்கு உதவ முடியும். ஆனால் சட்டப்படி இரண்டு பேரும் மேஜரானால் இதில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை”
அக்ஷய் முகத்தில் கவலை விலகி லேசாக நம்பிக்கை தெரிந்தது.
”உங்களுக்கு ஆக்ராவில் தெரிந்த போலீஸ் அதிகாரி இருக்கிறார்களா? ப்ளீஸ் எனக்காக நீங்கள் அவர்களிடம் பேச முடியுமா?”
ஜெய்பால்சிங் அவனுக்காக பரிந்து பேசினார். ”சார் பையன் நல்ல பையன். உயிருக்கு உயிராக அந்தப் பெண்ணைக் காதலிக்கிறான். முடிந்தால் உதவி செய்யுங்களேன்”
மீசைக்காரருக்கு அங்கிருந்து போனால் போதுமென்றாகி விட்டது. ”அங்கு என் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறேன். இருந்தால் கண்டிப்பாகச் சொல்கிறேன். எங்களுக்கு அவசரமாகப் போக வேண்டும். எக்ஸ்க்யூஸ் மீ”
இருவரும் அங்கிருந்து வேகமாக நடந்தார்கள்.வெளியே வந்தவுடன் முதல் வேலையாக மீசைக்காரர் செல்போனில் தன் மேலதிகாரியிடம் சொன்னார். ”சார். அந்தப் பெண்ணிடம் பேசி விட்டு வந்தோம்…..” அவர் சுருக்கமாகச் சொன்னதைக் கேட்டு விட்டு அந்த அதிகாரி சொன்னார். ”இது விஷயமாய் இன்னொருவர் உங்களிடம் பேச விரும்புகிறார். அவர் தான் இந்த வழக்கை மேல் மட்டத்தில் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் சிறிது நேரத்தில் பேசுவார். அவரிடம் விவரமாகச் சொல்லுங்கள். நீங்கள் அங்கிருந்து கிளம்பும் முன்னால் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார்..”
சிறிது நேரத்தில் சிபிஐ மனிதன் மீசைக்காரருக்குப் போன் செய்தான். ”அங்கே போனதிலிருந்து வரும் வரை நடந்ததெல்லாம் எனக்கு ஒன்று விடாமல் சொல்லுங்கள்”
அவன் யாரென்று மீசைக்காரருக்குத் தெரியாது என்றாலும் அவன் பேசிய தோரணை மேலதிகாரி சொன்ன நபர் தான் என்பதைத் தெரிவித்தது. மீசைக்காரர் சொல்ல ஆரம்பித்தார். இடைமறிக்கா விட்டாலும் ஆரம்பத்திலேயே சஹானா வீட்டில் இருந்த அந்த இன்னொருவன் சிபிஐ மனிதனின் மனதில் பெரிய சந்தேகத்தைக் கிளப்பினான். அதுவும் சஹானாவுக்குப் பதிலாக நடந்ததை எல்லாம் அவன் தான் சொன்னான் என்று தெரிந்த போது அவன் சந்தேகம் பலத்தது. உடனே இடைமறித்தான். ”ஒரு நிமிஷம்… அந்த ஆள் ஏன் நாம் தேடும் ஆளே மாறு வேஷத்தில் இருப்பவனாக இருக்கக் கூடாது?”
(தொடரும்)