Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » ‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி
‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி

‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி

எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்,
நீர்ச்சத்து – 50 கிராம்
கொழுப்பு – 1.0 கிராம்
புரதம் – 1.4 கிராம்
மாவுப்பொருள் – 11.0 கிராம்
தாதுப்பொருள் – 0.8 கிராம்
நார்ச்சத்து – 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.
பாஸ்பரஸ் – 0.20 மி.கி.
இரும்புச் சத்து – 0.4 மி.கி.
கரோட்டின் – 12.மி.கி.
தையாமின் – 0.2 மி.கி.
நியாசின் – 0.1 மி.கி.
வைட்டமின் ஏ – 1.8 மி.கி.
வைட்டமின் பி – 1.5 மி.கி.
வைட்டமின் சி – 63.0 மி.கி
எலுமிச்சையின் பயன்கள்:
வயிறு பொருமலுக்கு:
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க:
தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட:
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க:
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க:
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இரத்தக் கட்டுக்கு உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய:
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்:
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
உடல் நமைச்சலைப் போக்கும்
மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.
எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top