Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 2

அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 2

அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.

ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவேஇருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ஆன்மீக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனையை கொண்டு அவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என நாம் முடிவு செய்வது கடினம்.

ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். உண்மையை அவர்களின் உள்நிலை உயர்வை நாம் உணரும் நிலையில் இல்லை.

காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என சொல்லிவிட முடியாது, அது போலவே உடைகள் இல்லாமல் இருக்கும் யோகிகள் ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் சொல்ல முடியாது அல்லவா?

அஹோரி எனும் இத்தகைய யோகிகள் பிரம்மாண்டமானவர்கள் என சொன்னால் மிகையில்லை. தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள். யோகிகள் இரு நிலையில் வகைப்படுத்தலாம்.அதாவது தன்முனைப்பு கொண்டவர்கள், சமூக முனைப்பு கொண்டவர்கள்.

தன்முனைப்பு கொண்ட யோகிகள் தங்களுக்கு என ஆன்மீக பயிற்சிகள் அமைத்து கொண்டு செயல்படுபவர்கள். சமூக முனைப்பு கொண்டவர்கள் சமூகத்தை அறவழியில் கொண்ட செல்ல செயல்படுபவர்கள்.

யோகிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என சொன்னேன், சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பார்கள். தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் வரும் எத்தனையோ ஆன்மீகவாதிகளில் இவர்கள் உண்டு. நமக்கு அவர்களை அடையாளம்காண்பது அரிது.

இமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

யோகிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என நான் குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். யோகிகளில் ஒரு பிரிவினர் ராணுவத்தை போல செயல்படுகிறார்கள். ராணுவ யோகிகள் சிலர் கையில் பெரிய ஆயுதங்களை வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். பாரதத்தில் சுதந்திர போராட்டத்தில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.

உபநிஷத்தின் வார்த்தையான “சத்ய மேவ ஜெயதே” ஏன் இந்திய அரசின் தேசிய வார்த்தையாக இருக்கிறது? சுந்திர போராட்டத்தில் ஏன் காந்தி முன்னிருத்தப்பட்டார் ?

தமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஏன் அடிக்கடி ரிஷிகேசம் சென்றார்கள் ? என பல காரணங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.

நான் கும்பமேளாவில் நாக சன்யாசிகளின் கூடாரத்திற்கு அருகில் தங்க நேர்ந்தது. இருபது மணி நேரத்திற்கு மேலாக ஒரு நூல் கூட அசையாமல் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாள் சரியாக நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். எனது கூடாரத்தின் வெளியே அமர்ந்திருந்தேன். குளிருக்காக பெரிய மரம் என் முன்னே எரிந்து கொண்டிருந்தது( தூஹ்ணி). யோகிகள் மொத்தம் பத்து முதல் இருபது பேர் இருப்பர்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரும் எந்த ஒரு சப்தமும் வராமல் எழுந்து நின்றார்கள்.

வரிசையாக நடந்து சென்று கங்கையாற்றில் இறங்கினார்கள். எழுந்து வந்து அருகில் இருக்கும் மயானத்தின் சாம்பல் கொட்டும் பகுதியில் புரண்டு விட்டு மீண்டும் வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். இத்தனையும் நடக்கும் பொழுது தங்களுக்குள் அவர்கள்பேசவில்லை. சைகைகாட்டவில்லை. அனைவரும் ஒரே உடலின் உறுப்பு போல கச்சிதமாக செயல்பட்டார்கள். அப்பொழுது தட்பவெப்பம் சுமாராக 4 டிகிரிக்கும்குறைவாக இருக்கும்.

கும்பமேளாவில் பங்கெடுக்கும் ஆரம்ப நிலை யோகிகளை கொண்ட வீடியோ காட்சி.

கும்ப மேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க , இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது? ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவுபொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி?

தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். யோகிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்…! இவர்களை பொருத்தவரை ரிடையர்மெண்ட் என்பது நேரடியாக செட்டில்மெண்ட் தான்.

மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.

சென்ற பதிவில் இருந்த யோகியின் உருவத்தையும் , இவரின் உருவத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சில உண்மைகள் புரியும். பரமஹம்ஸ யோகானந்தர் எனும் யோகி, தனது வாழ்வில் மஹாஅவதார் பாபாஜியை கண்டார். அதை மனதில் வைத்து வரைந்த உருவம் தான் இது.யோகிகள் பார்ப்பதற்கும் செயல்படுவதிலும் ஒன்று போலவே இருப்பர்கள். இவரை போன்ற அனேக யோகிகள் அருவமாக வாழ்வதுண்டு. யோகிகள் தங்கள் உடலை சில காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை, சூட்சம நிலையில் மாற்றிவிடுகிறர்கள்.

இறந்து போனவரை உயிர்த்தெழுக வைப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
யோகிகள் உயிர் அற்ற உடலை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ள பிரிடீஷ் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு ஒன்றே சாட்சி.

அந்த வழக்கு… ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top