ஆண்டு – 1900. ஆஃப்ரிக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறது ஒரு கப்பல். மெடிட்டரேனியன் கடலில், கிரீஸ் மற்றும் டர்க்கி நாடுகளின் இடையில் இருக்கும் ஆண்ட்டிகிதேரா (Antikythera) என்ற தீவில் கப்பலை நிறுத்த உத்தரவிடுகிறார் கேப்டன் டிமிட்ரியோஸ் கோண்டோஸ் (Dimitrios Kondos). காரணம், கடலில் சுழன்றடித்த ஒரு புயல். இந்தக் கப்பலில் இருப்பவர்களின் பிரதான வேலை, கடற்பாசி சேகரிப்பது. புயலில் சிக்கி, இந்தத் தீவில் ஒதுங்கியபோது, கேப்டனின் மூளை வேலை செய்தது. சும்மா இருப்பதை விட, இங்கும் தீவைச் சுற்றியுள்ள கடலில் கடற்பாசி சேகரிக்கலாமே என்று எண்ணியவர், மாலுமிகளை கடலில் மூழ்கச் சொல்லி உத்தரவிடுகிறார். அன்று கடலுக்குள் மூழ்கிய மாலுமிகள், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அந்தப் பிராந்தியத்தில் மூழ்கிக்கொண்டே இருந்தனர். அவர்கள் வெளியில் கொண்டு வந்த பொக்கிஷங்கள், இன்றும் ஆராய்ச்சியாளர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. பல்வேறு வெண்கலச் சிலைகள், சிறுசிறு பொருட்கள் ஆகியவை அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
முதன்முதலில் இந்தப் பொக்கிஷக் குவியலைப் பார்த்த மாலுமி ஒருவர், பதறியடித்துக்கொண்டு தன்னுடன் பிணைத்திருந்த கயிறை ஆட்ட, மேலே கப்பலில் இருந்தவர்கள், மாலுமிகளுக்கு வழக்கமாக ஏற்படும் கரியமில வாயுப் பற்றாக்குறைதான் இவருக்கும் ஏற்பட்டு, அதனால் பைத்தியம் ஆகிவிட்டாரோ என்று நினைத்து அவசர அவசரமாக அவரை மேலே இழுத்தனர். மேலே வந்ததும், கடலுக்குள் ஒரு பெரிய குதிரைப்படையே இறந்து கிடக்கிறது என்று அவர் பதட்டத்தில் உளற, அவர்மேல் இருந்த ‘பைத்திய’ ஊகம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம். ஆனால், அதன்பின் மூழ்கிப் பார்த்தபோதுதான் இந்த வெண்கல சிலைக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டு, சென்ற நூற்றாண்டின் பிரதான அகழ்வாராய்ச்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
சரி. இதற்கும் ஏலியன்களுக்கும் என்னய்யா சம்மந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதா?
இரண்டு வருடங்களில் கடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் அத்தனையும் ஏதென்ஸில் உள்ள தேசிய தொல்பொருள் ம்யூஸியத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை 1902ல் பார்வையிடுகிறார் வலேரியோஸ் ஸ்டேய்ஸ் (Valerios Stais) என்ற ஆராய்ச்சியாளர். அப்போது, அந்தப் பொருட்களின் இடையில் வைக்கப்பட்டிருந்த ‘அது’ அவரது கவனத்தை ஈர்த்தது. பெரியதொரு கல்லில் செதுக்கப்பட்டிருந்த ‘அது’ ……..என்ன?
அப்பொருளை உற்றுக் கவனித்த ஸ்டேய்ஸ், ஆனந்தக் கூத்தாடத் துவங்கினார்.
இந்த இடத்தில் ‘தொடரும்’ போடவேண்டும் என்று தோன்றினாலும், இப்போதுதான் இந்தக் கட்டுரை ஆரம்பித்திருப்பதால், வேறொரு இடத்தில் போட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அகழ்வாராய்ச்சியில் சேகரிக்கப்பட்ட பல பொருட்களின் மத்தியில், ஒரு பெரிய கல்லில், பல்சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. அதாவது, தற்காலத்தில் பெரிய கடிகாரங்களினுள்ளும், சிக்கலான இயந்திரங்களினுள்ளும் இருக்கும் பல சக்கர அமைப்பு போன்ற ஒன்று. மிகத்தெளிவாகவே அது ஒரு பல்சக்கரம் என்று தெரிந்துவிட்டதால், ஸ்டேய்ஸுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. பண்டையகாலத்தில் ஏது இப்படி ஒரு பல்சக்கரம்? இதனை யார் வடிவமைத்திருப்பார்கள்? பல கேள்விகள்அவரது மனதைப் போட்டுக் குடைந்தெடுக்க, இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அறிவித்தார் ஸ்டேய்ஸ். உடனடியாக உலகப்புகழ் பெற்றார்.
அந்த அகழ்வாராய்ச்சியில் பல அற்புதமான சிற்பங்களைக் கண்டெடுத்திருந்தாலும் (தத்ரூபமான ஒரு வெண்கலத் தலை, ஆறடிக்கும் மேலான ஒரு மனிதனின் மிகத்துல்லியமான வெண்கலச்சிலை, ஹெர்குலஸின் சிலை, Lyre என்ற தந்திகலாளான வெண்கல இசைக்கருவி, சலவைக்கல்லினால் செய்யப்பட்ட எருது ஆகியவை லிஸ்ட்டில் அடங்கும்), அவை அத்தனையும் எதுவுமே இல்லை என்று சொல்லக்கூடிய கண்டுபிடிப்பாக இது அமைந்தது.
இதனைத்தொடர்ந்து, அந்தப் பொருட்களின் காலத்தைக் கணக்கிடும் வேலை துவங்கியது. ஒரு சில வெண்கலச் சிலைகள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டன. ஒருசில சலவைக்கல் சிலைகளோ, கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருந்தன. இதனைத்தொடர்ந்து அந்தக் கப்பலின் மரத்தை கார்பன்டேட்டிங் செய்து பார்த்ததில், அந்த மரம், கி.மு 220யைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. கி.மு 220 யைச் சேர்ந்த கப்பலில், நான்காம் நூற்றாண்டு மற்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் எப்படி இருக்க முடியும்? அந்த மரம், வெகு காலம் முன்னரே வெட்டப்பட்டு இருந்தால் முடியும் அல்லவா?
லூஸியன் என்ற கிரேக்க எழுத்தாளர் (கி.பி இரண்டாம் நூற்றாண்டு), ஸுல்லா என்ற ரோமானிய கொடுங்கோலனைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். ஏதென்ஸில் இருந்து சூறையாடப்பட்ட பல பொருட்களை இந்த ஸுல்லாவின் கப்பல்கள் எடுத்துச் சென்றதையும், அவற்றில் ஒன்று கி.மு 86ல் கடலில் மூழ்கியதையும் பற்றியும் இந்தக் குறிப்புகளில் அவர் எழுதியிருப்பதால், இக்கப்பல் அதுவாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபஸர் டெரெக் டி ஸோல்லா ப்ரைஸ் (Derek de Solla Price) என்பவர், 1974ல் இந்தக் கருவியைப் பற்றிய அவரது ஆராய்ச்சிக் குறிப்பை வெளியிட்டார். அவரது குறிப்பின்படி, இந்தக் கருவி, நாட்குறிப்புகளைக் கணிக்க உதவும் ஒரு பண்டையகால கணினி. அதாவது, உலகின் முதல் கம்ப்யூட்டர். இந்தக் கருவியில் உள்ள பல்சக்கரங்களைத் திருப்புவதன்மூலம், ஒரு குறிப்பிட்ட தேதியை உள்ளீடாகக் கொடுத்தால், அந்தத் தேதியின் சூரிய சந்திரர்களின் இருப்பையும், பிற கிரகங்களின் இருப்பையும் துல்லியமாகக் கணக்கிட்டது இந்தக் கருவி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்! கி.மு முதல் நூற்றாண்டில், பிற கிரகங்களின் இருப்பைத் துல்லியமாகக் கணக்கிட்ட ஒரு கணினி இருந்திருக்கிறது என்பது, உலகையே புரட்டிப்போடக்கூடிய தகவல் அல்லவா? மைக்கேல் எட்மண்ட்ஸ் என்ற கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபஸர் – இவர்தான் இந்தக் கருவியைப் பற்றிய கடைசி ஆராய்ச்சியைச் செய்திருப்பவர் – கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது:
“இந்தக் கருவி, ஒரு அதிசயம். இதனைப்போன்ற கருவிகள் உலகில் வேறு இல்லை. இதுதான் முதலும் கடைசியுமான ஒன்று. மிகத் தத்ரூபமான தகவல்களைக் கொடுப்பதாக இது இருக்கிறது. இதன் செயல்பாடு மற்றும் உருவாக்கம், வாயைப் பிளக்கச் செய்வதாக இருக்கிறது. இதனை யார் செய்திருந்தாலும் சரி – மிகமிகப் பொறுமையாக, நேர்த்தியுடன் செய்திருக்கிறார்கள். சரித்திரபூர்வமாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களில், மோனாலிஸாவை விடவும் அரியதொரு பொருளாக இதனை நான் எண்ணுகிறேன்”.
சரி. கருவியைக் கண்டுபிடித்தாயிற்று. அது எப்படி வேலை செய்கிறது என்பதும் தெரியும். ஆனால், அதன் உபயோகம் என்ன? எதனால் அல்லது ஏன் அது பண்டைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை விஞ்ஞானிகளால் இந்தக் கேள்விக்கு பதிலைக் கூற இயலவில்லை. பொதுமக்களுக்கு உபயோகப்படும் வகையில் இது வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும், கப்பல்களில் காம்பஸ் போல இது உபயோகப்படவில்லை என்று மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பண்டைய காலத்தில் இதனைப்போன்ற இன்னும் சில கருவிகள் இருந்திருக்கலாம் என்றும் யோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவியைப்போல் சில கருவிகளும் தற்போது செய்யப்பட்டு, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
பண்டைய காலத்தில் இத்தனை துல்லியமாக ஒரு கருவியை எப்படிச் செய்திருக்க முடியும்? அதற்கான கணக்கிடும் முறைகள் எப்படி உருவாக்கப்பட்டன? இதன் சூத்ரதாரி யார்? எந்தக் கேள்விக்கும் இதுவரை விடை தெரியவில்லை.
இந்த இடத்தில்தான் எரிக் வான் டானிக்கென் எழுதிய குறிப்புகள் விவாதிக்கப்படுகின்றன. இந்தக் கருவியைப்பற்றி அறுபதுகளின் இறுதியிலேயே தனது ‘Chariots of the Gods’ புத்தகத்தில் எழுதியிருக்கிறார் டானிக்கென். ஏலியன்கள் பண்டைய காலத்தில் பூமிக்கு வந்தபோது இங்கே செய்யப்பட்ட ஒரு திசைகாட்டும் கருவிதான் இது என்பது அவரது கருத்து. பல கிரகங்களுக்கு இடையில் ஏலியன்கள் பயணிக்க வேண்டியிருந்ததால், அவர்களது உலகில் உபயோகிக்கப்பட்ட ஒரு கருவியின் மாடலைத்தான் பூமியில் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார். ஆனால், எந்தவித ஆதாரமும் டானிக்கென் அவரது இந்த வாதத்துக்குக் கொடுக்கவில்லை. இது அவரால் எழுதப்பட்ட ஒரு possibility. அவ்வளவே. விஞ்ஞானம் இதனை நிராகரித்துவிட்டது. ஆனால், இதுவரை விஞ்ஞானத்தால் இந்தக் கருவியைப்பற்றி எதுவும் சொல்லமுடியவில்லை என்பதும் உண்மை.
இந்தக் கருவி எப்படி உருவாக்கப்பட்டது? அல்லது, எங்கிருந்து வந்தது? இதனை உருவாக்கியது யார்? இதன் உண்மையான பயன்பாடு என்ன? என்றோ ஒருநாள் பூமிக்கு வந்துபோன வேற்றுக்கிரகவாசிகளின் மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவுதானா இது? (சொற்றொடருக்கு நன்றி: மதன் – வந்தார்கள் வென்றார்கள் கடைசி அத்தியாயம்).
எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், ஒரு ம்யூசியத்தினுள் அமைதியாக வீற்றிருக்கிறது ‘The Antikythera mechanism’ என்று அழைக்கப்படும் இந்தக் கருவி.
இதோ இந்தக் கருவியைப் பற்றி இரண்டு சுவாரஸ்யமான வீடியோ தொகுப்புகள். இந்த இரண்டையும் தவறாமல் பாருங்கள்.
Antikythera Mechanism Part 1
Antikythera Mechanism Part 2
இப்பொழுதுதான் இந்தத் தொடர் ஆரம்பித்திருக்கிறது. அடுத்து நாம் காணப்போகும் மர்மம் என்ன?
அது……………..
தொடரும் . . .