சடுதி மரணத்தினால் மனிதனுக்கு ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்ததினால் தான் போலும் கிறிஸ்தவ தேவாலயங்களில், “பிதாவே, போர்முனை இறப்புகள், கொலைச்சாவுகள், சடுதி மரணங்கள் ஆகிய தீமைகளிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று பிரார்த்திக்கின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனும் பூவுலகில் வாழவேண்டிய காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் தமது முற்பிறப்புகளில் ஏதோ பெருந்தவறுகள் புரிந்த காரணத்தினால் அவைகளின் பிரதிபலனாக கர்மாவின் நியதிகளுக்கேற்ப சடுதி மரணத்தை அடைய வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இயற்கையின் படைப்புகளில் பிறழ்வுகள் (Freaks) ஏற்படுவதுபோல நமது வாழ்விலும் நமது அறிவுக்குப் புலனாகாத காரணங்களின் வினைப்பயனாக விபரீதங்களும் விபத்துக்களும் நடைபெறுகின்றன.
சடுதி மரணம் அடைந்தவர் இவ்வுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவராகவோ, ஆன்மீக முன்னேற்றம் கிட்டியவராகவோ இருந்துவிட்டால் சிறிது காலம் அமைதியாக நித்திரை செய்வது போன்ற ஒரு உணர்வுநிலையில் சூட்சும உலகில் மிதந்துகொண்டிருப்பார்.
பின்னர் சாதாரணமாக இறப்பவர்கள் சூட்சும உலகில் பெறும் அனுபவங்களைப் பெறுவார். சடுதி மரணம் அடையும் பொழுது பயங்கர அதிர்ச்சி (குண்டுவெடிப்பு, திடீர்விபத்து, துப்பாக்கிச்சூடு போன்றவைகள்) அனுபவித்தவர்கள் மறுஉலகில் பிரக்ஞையைத் திரும்பப் பெற நீண்டநேரம் அல்லது இரண்டொரு நாட்கள் செல்லக்கூடும் என்று கூறப்படுகின்றது.
சடுதி மரணம் அடைந்த அநேகர் ஒரு குழப்பமான மனநிலையுடனேயே மறு உலகில் பிரவேசிக்கின்றார்கள். இவர்களை நேசக்கரம் நீட்டி வரவேற்று, ஆசுவாசப்படுத்தி மரணத்தின் பின் தொடரும் வாழ்வைப் பற்றிய விளக்கத்தையளித்து வழிநடத்துவதற்கென்றே மறுஉலகில் நல்லாத்மாக்கள் இருக்கின்றார்கள்.
பாவம், புண்ணியம், நல்வினை, தீவினை என்ற கோட்பாடுகளில் நம்பிக்கையின்றி எப்படியும் வாழலாம் என்றெண்ணி நீச வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் சடுதி மரணத்தால் கூடுதலான துயரத்தை அனுபவிக்கின்றார்கள்.
இவர்கள் தமக்குச் சடுதி மரணம் நிகழ்ந்த சூழ்நிலையைத் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி, அச்சம்பவங்கள் மறுபடியம் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருந்து கொண்டு அதன் பயனாக ஏற்படும் பீதி, பயம், ஆக்ரோஷம், வேதனை போன்ற உணர்வுகளை சிறிதுகாலம் அனுபவித்து அல்லற்படுவர்.
நுண்நோக்காற்றல் படைத்த பிரம்மஞானிகள் (Theosophists) சடுதி மரணம் அடைந்த சிலரின் உடனடியான உணர்வுநிலைகளை அவதானித்துக் கூறியதைப் பார்க்குமிடத்து இறக்கும் தறுவாயில் இறந்தவரைப் பீடித்திருந்த மனோநிலையைப் பொறுத்தே அவருடைய மறு உலக அனுபவங்கள் அமையும் என்று தெரிகிறது.