Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 16

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 16

இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை.
கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது.
கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.
இந்து மதத்துக்கே உரியதான இந்த தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வணிகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
ஆதிகால கிரேக்க சமய மரபுகள் (Greek Gnosticism) இந்து சமய நம்பிக்கைகளை ஒத்திருக்கக் காணப்படுகின்றன. எம்பிடொக்கில்ஸ், பைதகொறஸ் போன்ற பேரறிஞர்கள் மறுபிறப்புத் தத்துவத்தை மக்கள் மத்தியில் கூறிவந்தார்கள்.
இவர்களைத் தொடர்ந்து பிளாட்டோவும் மறுபிறப்பு நம்பிக்கையை வலியுறுத்தினார்.
யூதர்களின் வழிகாட்டியும், அவர்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஆரம்ப வித்திட்டவருமான மோசஸ் பரப்பிய “கபாலா” தத்துவம் மறுபிறப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆனால் பின்னால் வந்த “மிஷ்னா”, “தல்முட்” என்ற யூத போதனைகளில் இத்தத்துவம் ஏனோ வலியுறுத்தப்படவில்லை. ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் மறுபிறப்பு நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
கி.பி. 538 – ம் ஆண்டின் கான்ஸ்டான்ட்டினோபிளில் நடைபெற்ற மகாநாட்டில் (Council of Constantinople) தான் முதல் தடவையாக ஜஸ்ரீனியன் என்ற பேரரசன் மறுபிறப்பில் நம்பிக்கை வைப்பது திருச்சபைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல் (Anathema) என்று சட்ட மூலமாகப் பிரகடனப்படுத்தினான்.
இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (Sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.
“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………”
(ஆதாரம் The mystics of Islam by Reynold.A Nicholson).
இப்பாடல் மாணிக்கவாசக சுவாமிகளின் பின்வரும் திருவாசகத்தை நினைவுறுத்துகிறது.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவாராயத் தேவராய்ச்
செல்லா அநின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லா பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்”.
மனிதன் முக்தியடையும் வரை அவனுடைய ஆத்மா பிறப்பெடுத்துக் கொண்டேயிருக்கும் என்று இந்து சமயம் புகட்டுகிறது.
கி.மு. 5 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெறோடொட்டுஸ் (Herodotus) என்பவர் “எகிப்தியர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தனர் மனிதனின் ஆத்மா அழிவற்றது. மனிதன் இறந்தவுடன் இன்னொரு உடலினுள் அவனுடைய ஆத்மா புகுந்து விடுகிறது என்று நம்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
அலெக்சாந்திரியாவின் க்ளெமன்ட் என்னும் போப்பாண்டவர் (2 ஆம் நூற்றாண்டு) அதேகாலத்துப் பேரறிஞர் ஓறிஜின் ஆகியோரும் மறுபிறப்பு தத்துவத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.
ஜெருசலத்தில் பிரம்மாண்டமான தேவாலயத்தை நிறுவிய இஸ்ரவேல் நாட்டின் புகழ்பெற்ற மன்னன் சாலமன் (கி.மு 970 – 933) வெளியிட்ட “அறிவுக்களஞ்சியம்”  (Book of Wisdom) என்ற தனது நூலில் “நான் நல்லவனாயிருந்ததால் எனது ஆத்மா ஒருநல்ல உடலில் புகுந்து கொண்டது” என்று கூறியுள்ளார்.
மேற்கு நாட்டு அறிஞர்கள் பலர் மறுபிறப்பில் தமக்கு உண்டான நம்பிக்கையை தங்கள் நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த Samuel Alexander (1859 – 1939) பிறான்ஸ் தேசத்தைச் சேர்ந்த Henri Bergson (1859 – 1941) ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பேரறிஞர் எமேர்சனும் (1803 – 82) மறுபிறப்புத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டாக்டர் இவான்ஸ் வென்ஸ் (Dr. Evans Ventz) ஒரு ஞான ஆராய்ச்சியாளர். இவர் 1958-ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் உரையாற்றிய பொழுது, “இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞானிகள் மறு பிறப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்” என்று கூறினார்.
இன்றைய சமுதாயம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்ந்தறிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமுடையது. இருந்தும் இறப்புக்குப் பின் ஏதோவொரு வகையில் மனித வாழ்வு தொடர்கின்றது என்ற நம்பிக்கை இப்போது உலக மக்கள் மத்தியில் பரவலாக நிலை பெற்றுவிட்டது.
கடவுளை நம்புகிறவர்களுக்கு கர்மாவிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
அடுத்து முற்பிறப்பு நினைவுகள் பற்றிப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top