Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 13

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 13

மனிதனுடைய கீழ் மனசு காமலோகத்தில் சுத்தப்படுத்தப்படும் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் பின்னர் அவனிடம் சட உலகில் இருந்த உயர்ந்த எண்ணங்களும், தன்னலமற்ற மனப்பாங்குமே சுவர்க்கத்துக்கு அவன் செல்லும்போது கூடவருகின்றன. சமய ஈடுபாடு கூடிய ஒருவருக்கு அவருக்கேற்ற சுவர்க்கம் கிட்டுகிறது.
கடவுள் வணக்கத்தில் இன்பம் கண்டவருக்கு சடஉலகில் பல்வேறு தடைகள் கிலேசங்கள் சௌகரியங்கள் அவருடைய தெய்வவழிபாட்டுக்கு இடைஞ்சல்களாக இருந்திருக்கும். சுவர்க்கத்தில் எல்லாவித இடர்பாடுகளும் நீங்கப்பெற்று தெய்வ வழிபாட்டுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே அவருக்கு சுவர்க்கமாக அமைகிறது.
சடஉலகில் வாழ்ந்தபொழுது உலக நன்மைக்காக உழைத்த கல்விமான்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் மேதைகளும் மேலும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய அனுகூலங்களைப் பெற்றுக்களிப்புற்றிருப்பர்.
சுவர்க்கம் எண்ணங்களின் மயமான மனோதளம் (Mental plane) என்பதனால் ஆழமான ஆராய்ச்சிகளுக்கு மிகவும் சாதகமானது. இதுவே புதிய சந்ததிகள் சிந்தனா சக்தியும் புதிய ஆக்க திறனும் அதிகமுள்ளவர்களாக பிறக்க காரணமாகிறது.
இங்குள்ள போது இயற்கையின் எழிலை ரசித்து மகிழ்ந்தவர்கள் சுவர்க்கத்தில் இயற்கைக் காட்சிகளின் வனப்பைக் கண்டு மகிழ்வுற்றிருப்பர்.
இசைப்பிரியர்கள், ஓவியர்கள் ஆகியோர் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதில் இன்பம் காண்பர். சுவர்க்கத்தை சிறுசிறு உதாரணங்களால் விளக்கிவிட முடியாது. இறைவனின் திட்டம் பிரம்மாண்டமானதொரு கணிப்புப்பொறி (Computer) போன்றது. ஒவ்வொரு மனிதனின் மனோநிலைக்கு ஏற்றவாறும் அவனது சட உலகபெறுபேறுகளுக்கு ஏற்றவகையிலும் அவனுடைய சுவர்க்கம் அமைக்கப்படுகிறது.
பல்வேறு சமயத்தவர்களாலும் அவர்களுடைய சமய மரபுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப சுவர்க்கம் வர்ணிக்கப்படுகிறது. ஒருசில வர்ணனைகள் விநோதமான கற்பனைகளாகத் தெரிந்தாலும் அந்தத் தேசங்களையும் சமூகங்களையும் பொறுத்தவரையில் அவைகள் அர்த்தம் நிறைந்தவைகளாகவே தென்படுகின்றன.
கிரேக்கர்களும் ரோமாபுரியினரும் நல்ல ஆத்மாக்கள் எலீசியன் வெளிகளுக்கு (Elysian Fields) சென்று தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கூடிக்குலாவி களிப்புற்றிருப்பர் என்றும் பூவுலகில் தாங்கள் செய்த தொழில்களையே செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றும் நம்பினார்கள்.
ஸ்கேண்டினேவியர்கள் யுத்தப்பிரியர்கள், யுத்தமுனையில் இறந்த சுத்தவீரர்களின் ஆத்மாக்கள் “வல்ஹல்லா” (Valhalla) என்னும் சுவர்க்கத்துக்குச் சென்று அங்கு “ஒடின்” என்னும் தெய்வத்தின் முன்னிலையில் யுத்தம்புரிந்து, வெற்றிகள் ஈட்டி விருந்துகள் உண்டு இன்புற்றிருப்பார்கள் என்று நம்பினார்கள்.
செவ்விந்தியர்கள் (Red Indians) வேட்டைப்பிரியர்கள் சுவர்க்கத்தில் நல்ல வேட்டைக்காடுகள் நிறைய இருப்பதாக எண்ணினார்கள்.
முகம்மது நபிகளும் அவரைப் பின்பற்றிய ஆரம்பகால முஸ்லீம்களும் வனாந்தரங்களில் வாழ்ந்தவர்கள். எனவே அவர்க்ள அல்லாவின் ஆணைகளைப் பின்பற்றியவர்கள் மோட்சத்துக்குச் செல்வார்கள் என்றும், அங்கு நிழல்தரும் விருட்சங்களும் சுவைமிக்க கனிகளை அளிக்கும் மரங்களும் சுத்தநீரோடைகளும் பாலும் தேனும் முந்திரிகைப் பழச்சாறும் ஓடும் ஆறுகளும் காணப்படும் என்றும் மோட்சவாசிகள் மரநிழலில் படுத்துக்கொண்டு அழகிய பெண்மணிகள் (Houris) கிண்ணங்களில் ஊற்றும் பழச்சாற்றை அருந்திக் கொண்டு இன்புற்றிருப்பர் என்றும் கூறுகிறார்கள்.
எனவே சுவர்க்கம் அவரவருடைய மனப்பாங்குக்கு ஏற்றவாறே அமைகிறது. தூய மனம் உள்ளவர்களும் ஆன்மீக முன்னேற்றமடைந்தவர்களும் தன்னலமற்ற பொது சேவைகள் புரிந்தவர்களும் புண்ணிய கருமங்களைச் செய்தவர்களும் சுவர்க்கத்தில் நீண்டகாலம் தங்கிவிடுகிறார்கள்.
மேலும் சில விளக்கங்களைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top