ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்..! (Baobab)
வடக்கு ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் மெஸ்ஸினா நகருக்குப் போனால், அங்கு பூதம் போல ஊதிய ஒரு மரத்தைப் பார்க்கலாம். இந்தப்பக்கம் வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இதனை ‘தலைகீழாக நடப்பட்ட கேரட் ‘ என்று சொன்னார். இது ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் – பாவோபாப் என்று அழைக்கப்படும் அடன்ஸோனியா டிஜிடாடா (ADANSONIA DIGITATA)
இதனை பலர் தாவர உலகின் பிசாசு என்று கூறி வந்திருக்கிறார்கள். பாவோபாப் மரங்கள் மிக உறுதியானவை, சட்டென்று இறக்காதவை. பிடுங்கி கீழே தரை மட்டமாகப் போட்டபின்னரும் நீட்ட வாக்கில் சில முறை இந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன. மரங்களை வெட்டிச்சாய்த்த பின்னரும், இந்த மரத்தின் வேர்கள் மரத்தின் ஆணி வேரிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவு வரை இருக்கும் இதன் வேர்கள் உயிரோடு பலவருடங்கள் இருப்பதை பார்த்திருக்கிறார்கள். இந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிரோடு இருக்கும். மிக மெதுவாக வளர்கின்றன. சுமார் 5 மீட்டர் சுற்றளவுக்கு இந்த மரம் வளர்வதற்கு சுமார் ஆயிரம் வருடங்கள் ஆகும்.
பெரும் வெள்ளம் வருவதற்கு முன்னர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஒரு மரம் 25 மீட்டர் சுற்றளவு உள்ளதாக பார்த்திருக்கிறார். மொம்பாஸா தீவில் இதனை விட பெரிய மரங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களில் பெற்ற பீரங்கிக்குண்டுகளை இன்னும் தாங்கிக்கொண்டு உயிர்வாழும் பாவோபாப் மரங்களை இன்றும் பார்க்கலாம்.
எங்கே காணப்படுகின்றன ?
இந்த பாவோபாப் மரங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் பல இடங்களில் வாழ்கின்றன. இவைகளை மடகாஸ்கர், இந்தியா, இலங்கை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட பார்க்கலாம். (இவைகள் இந்தியாவில் என்னவாக அழைக்கப்படுகின்றன என்பதை யாரேனும் எழுதலாம்) ஜிம்பாப்வே நாட்டின் பல இடங்களில் இவை காணக்கிடக்கின்றன. லிம்பாப்போ, சூட்பான்ஸ்பர்க் மலைத்தொடர்களிலும் இவை இருக்கின்றன. மெஸ்ஸினா உண்மையிலேயே ஒரு பாவோபாப் நகரம். பாவோபாப் மரங்கள் பெரும்பாலும் வெப்பம் அதிகமுள்ள மணல் அதிகமுள்ள சமவெளிகளை இடங்களை விரும்புகின்றன.
காலஹாரி பாலைவனத்தில் ஒரு வரிசையாக 96 கிலோமீட்டருக்கு ஒரு மரமாக பாவோபாப்கள் இருக்கின்றன. இவைகள் வாழும் குளங்களாக பலரது உயிரைக் காப்பாற்றி இருக்கின்றன. பாவோபாப் இல்லாமல் உயிர்வாழ பல ஆப்பிரிக்க பிரதேசங்களில் முடியாது. சூடானில் இருக்கும் சுமார் 30000 பாவோபாப் மரங்களிலிருந்து பல நூற்றாண்டுகளாக மக்கள் தண்ணீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஒரு பாவோபாப் சுமார் 4000 அல்லது 5000 லிட்டர் தண்ணீரைச் சேமித்து வைக்கும். பாவோபாப் மரங்கள் இன்று பாதுகாக்கப்பட்ட தாவர இனம். இந்த பாபக் மரங்கள் காய்ந்து பட்டுப் போனதை ஒருவரும் பார்த்திருக்க மாட்டார்கள். அகலமான அடியைக் கொண்டிருப்பதாலும் அதனுள் இடை வெளிகள் காணப்படுவதாலும் ஆதிவாசிகளின் இருப்பிடமாகவும் இது காணப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக, இவை காகிதம் தயாரிக்கவும், இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தும் அழிக்கப்பட்டிருந்தன.
பாவோபாப் மரத்தின் உபயோகங்கள்..!
இதன் இலைகளை சூப் போல சாப்பிடலாம். இந்த இலைகளைக் கீரையாகவும் சாப்பிடலாம்
இந்த இலைகளை காயவைத்தும் பயன்படுத்துகிறார்கள்
இந்த மரத்தின் நடுவில் இருக்கும் சோற்றை, கூழ் போல சாப்பிடுகிறார்கள் ஆப்பிரிக்கர்கள்.
இந்த மரத்தின் விதைகளுக்குள் வெள்ளையாக இருக்கும் சோற்றை தண்ணீரோடு கலந்து புத்துணர்வு பானமாக அருந்தலாம்.
விவசாயிகள் இந்த சோற்றை தண்ணீரோடு கலந்து மலேரியாவுக்கு மருந்தாகப்பயன்படுத்துகிறார்கள்
இதன் விதைகளை வறுத்து, நிலக்கடலை போல உபயோகப்படுத்துகிறார்கள்
இதன் பட்டையை உரித்து உடைத்து, ஊறவைத்து, கயிறுதிரிக்கவும், மீன் வலை பின்னவும், துணி நெய்யவும் பயன்படுத்தலாம்.