துறவி ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். பணக்காரன் ஒருவன் அவரிடம் ஆசி வாங்கினால் தனக்கு மேலும் பணம் பெருகும் என்ற எண்ணத்தில் அவரை சந்திக்கசென்றான். துறவியின் பாதத்தில் விழுந்து வணங்கினான்.
“”அன்பனே! எழுந்திரு! உனக்கு என்னப்பா குறை!” என்று கேட்டார்.
“”ஐயா! உங்கள் நல்லாசியுடன் நான் இன்னும் பணம் சேர்க்க வேண்டும் என்றுவாழ்த்துங்கள்,” என்று கூறினான். துறவி அவனிடம், “”செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. பொருளாசைக்கு எல்லையே கிடையாது. மனம் என்னும் குரங்கு தாவிக் கொண்டே தான் திரியும். நாம் தான் மனதை ஒருமுகப்படுத்தி நிலைநிறுத்தவேண்டும்.
இல்லாதவர்களுக்கு சிறிதளவாவது கொடுப்பதே நீ பெற்ற செல்வத்தின் பயனாகும். பெற்ற பொருள் அனைத்தையும் நீ ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்றால்முடியாது. வாழ்க்கையில் நாம் இழக்கக் கூடாத பெருஞ் செல்வம் மனநிறைவும்,நிம்மதியுமே.
ஒரு நாளைக்கு ஒருபிடி அன்னத்தையாவது பசித்தவருக்கு உணவாக இடு! உன்னிடம் உள்ள பணம் உனக்கு உதவலாம், உதவாமலும் போகலாம். நீ படுத்த படுக்கையாக கிடந்தால், பணத்தை எட்டி எடுக்கக்கூட கை உதவாது. ஆனால், ஒருவன் செய்த தர்மம் தக்க சமயத்தில் உதவும்,” என்று ஆசியளித்தார்.
இந்த அறிவுரை பணக்காரனின் மனதை மாற்றியது. தான் மட்டுமே செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.