மாற்றங்கள்
அவன் சிக்னலிற்காகக் காரில் காத்திருந்தான். அவனுக்கு முன்னாலிருந்த காரில் ஒரு பெண் ஏதோ பேப்பரைப் படித்துக்கொண்டிருந்தாள் சிக்னல் பச்சைக்கு மாறியது. ஆனாலும் அந்தப் பெண் காரைக் கிளப்புவதாகக் காணோம். அவள் சிக்னல் மாறியதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. மறுபடியும் பச்சை சிவப்பாகியது. பின்னால் காத்திருந்தவனோ கோபத்தால் சிவந்திருந்தான். பல கெட்ட வார்த்தைகளைச் சொல்லி உறுமி, ஸ்டியரிங் வீலைக் கைகளால் குத்தி, தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த போலிஸ்காரர் அவனை எச்சரித்தார். அதற்கு அவன், நான் “என் காருக்குள் இருந்து கத்துகிறேன். அதற்கு நீங்கள் தடைபோட எந்த சட்டமும் இல்லை’ என்று கோபமாகக் கூறினான். ஆனால் அந்த போலிஸ்காரர் அவனிடமிருந்த லைசென்ஸ் மற்றும் ஆவணங்களை எல்லாம் சரிபார்த்துவிட்டு அவனிடம் திருப்பித் தந்தார்.
அவன் கோபமாகச் சொன்னான் “எனக்குத் தெரியும், நான் எனது காரிலிருந்து சத்தம் போடுவதற்கு உங்கள் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று”.அதற்கு அந்த போலிஸ்காரர் நிதானமாகச் சொன்னார், “காரிலிருந்து கத்தியதற்காக உன் ஆவணங்களைப் பார்க்கவில்லை, உனது காரின் பின்புறத்தில் “அன்பே கடவுள்” “அமைதிக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், பிரார்த்தனை பலனளிக்கும்” போன்ற வாசகங்கள் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது, ஆனால் நீ நடந்து கொள்ளும் விதம் அவற்றிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் நீ காரைத் திருடி எடுத்து வருகிறாயோ எனச் சந்தேகமாக இருந்தது” என்றார்.ஆமாம்! அவன் நடந்து கொண்டவிதத்திற்கும் பின்னால் அவன் ஒட்டியிருந்த ஸ்டிக்கருக்கும் சம்பந்தமே இல்லை. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! நாம் எப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறோமோ, உண்மையில் அப்படி இருக்கிறோமா? நாம் நாம் விரும்பும் மனிதராக இல்லை என்று உணரும்போது நாம் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். உயர்ந்தலட்சியங்களை உருவாக்கிக் கொண்டு அதையடைய முயற்சி செய்தால் அதில் சிறிதுபின்னடைவு இருந்தாலும் பரவாயில்லை.
முக்கியமான கேள்வி “நீ இன்று எப்படி இருக்கிறாய் என்பது அல்ல? நாளை எப்படியிருக்க விரும்புகிறாய்” என்பதுதான்
“மாறுதல்கள் இல்லை என்றால் உலகமே இல்லை”.