ஒரு வேளை அவன் இந்த புத்த விஹாரத்திற்குள் உயிருடன் இருக்கிறான் என்றால் அவன் மறைந்திருக்க கண்ணுக்குத் தெரியாத இந்த சுரங்கப் பாதை உள்ள பாதாள அறைதான் பொருத்தமான ரகசிய இருப்பிடம் என்பதில் வந்தவர்களுக்கு சந்தேகமிருக்கவில்லை.
மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார், “அது ஒரு காலத்தில் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட அறை. அதில் சில புத்தகங்களும், சிலைகளும் மட்டுமே இருக்கின்றன. அதுவும் எங்களுக்கு மட்டுமே தெரிந்த இருப்பிடம். நீங்கள் தேடும் ஆள் அங்கு வந்து ஒளிய வாய்ப்பேயில்லை”
இளைய பிக்கு இப்போதும் தலையைக் குனிந்து கொண்டு நின்றாரே தவிர வாயைத் திறக்கவில்லை.
அங்கு இரண்டாவது முறையாகத் தேடிக் கொண்டு வந்தவன் அலட்சியமாகச் சொன்னான், “பயப்படாதீர்கள். உங்கள் புத்தகங்களும் சிலைகளும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் அதையெல்லாம் ஒன்றும் செய்ய மாட்டோம். அவன் அங்கு இல்லையென்றால் எங்கள் பாட்டுக்குப் போய் விடுவோம். இனி வந்து தொந்தரவு செய்ய மாட்டோம். நீங்கள் எல்லோரும் ஒதுங்கி எங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நில்லுங்கள். அல்லது இந்த இடத்தை விட்டுப் போய் ஏதாவது ஒரு அறைக்குள் பத்திரமாக இருங்கள்”
ஒரு வேளை அவன் அங்கு இருந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி தேவைப்படவில்லை. அவர்கள் கையில் இருந்த நவீனத் துப்பாக்கிகள் அதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிவித்தன. மூத்த பிக்கு சில அடிகள் பின் வாங்கி சுவற்றை ஒட்டினற் போல் நிற்க, இளைய பிக்கு உட்பட மற்ற பிக்குகளும் அப்படியே செய்தனர்.
அவரிடம் பேசியவன் தன் சகாக்களிடம் சொன்னான், “ரெண்டு பேர் புத்த விஹார வாசற்கதவு பக்கம் நில்லுங்கள். ரெண்டு பேர் இந்த சுரங்கப் பாதைக்கு வெளியே நில்லுங்கள். மற்றவர்களில் மூன்று பேர் முதலில் உள்ளே போகலாம். மீதியுள்ள மூன்று பேர் இரண்டு நிமிட இடைவெளி விட்டு உள்ளே தொடர்ந்து வரட்டும். எல்லாரும் தயாராய் இருங்கள்….”
டார்ச் லைட்டைப் பிடித்தபடி முதலில் ஒருவன் மெல்லச் செல்ல துப்பாக்கியை நீட்டியபடி இருவர் பின் தொடர்ந்தனர். அவர்கள் சென்று சரியாக இரண்டு நிமிடம் கழித்து அடுத்த மூன்று பேரிலும் ஒருவன் டார்ச் ச்லைட்டுடன் முன்னே செல்ல துப்பாக்கியுடன் இருவர் பின் தொடர்ந்தனர். இருவர் பாதாள அறையின் நுழைவு துவாரத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி தயாராக நிற்க மற்ற இருவர் புத்த விஹார கதவுப் பக்கம் துப்பாக்கியை நீட்டியபடி தயாராக நின்றனர்.
சுமார் இருபது நிமிடங்கள் கழித்து பாதாள அறையிலிருந்து உடல் உடையெல்லாம் தூசியும், ஒட்டடையுமாக பரிதாபமாக தும்மிக் கொண்டே வெளியே வந்தனர். சிலர் அங்குமிங்கும் சொறிந்து கொண்டு வந்தார்கள். அவன் அங்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உள்ளே போகாத நான்கு பேரும் தங்கள் சகாக்களைப் பார்த்து லேசாகச் சிரித்தார்கள்.
மூத்த பிக்குகளிடம் முன்பு பேசியவன் இளைய பிக்குவை சந்தேகத்தோடு பார்த்தான். இளைய பிக்குவிற்கு முதலில் அவனை சரியாக அடையாளம் தெரியவில்லை. பின் கேட்டார், “அவன் அங்கேயும் இல்லை அல்லவா? நாங்கள் இனி அவனுக்குப் பயப்படாமல் இருக்கலாம் அல்லவா?”
சந்தேகம் தீராமல் அவன் தலையை மட்டும் அசைத்தான். தன் சகாக்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அவன் முன்னால் செல்ல அவர்கள் அனைவரும் அவனைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.
அவர்கள் போன பிறகு இளைய பிக்குவைப் பார்த்து மூத்த பிக்கு கேட்டார், “என்ன இதெல்லாம்?”
இளைய பிக்கு சொன்னார். “நாம் வருடக் கணக்கில் உபயோகிக்காத பாதாள அறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்கள் பல நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தீர்கள். நான் ஒரு நாள் எட்டிப்பார்த்த போது உள்ளே முழுவதும் சிலந்தி வலைகளும் தூசியுமாய் இருந்தது…… இவர்கள் இப்போது அதை எல்லாம் நிறையவே எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இனி நமக்கு சுத்தம் செய்வது சுலபம்”
மற்ற பிக்குகள் புன்னகைக்க மூத்த பிக்கு இளைய பிக்குவை ஊடுருவிப் பார்த்தார். இளைய பிக்கு தன் தலையைத் தாழ்த்திக் கொண்டார். இளைய பிக்குவிற்கு அந்தப் பெயர் அறியாத இளைஞன் மேல் இருந்த பாசமும் அதனால் அவனைக் கொல்லத் துடிக்கிற மனிதர்கள் மீதிருந்த கோபமும் முற்றும் துறந்தவர்களுக்கு சிறிதும் பொருத்தமானதல்ல என்பதை மூத்த பிக்குவின் பார்வை சொல்லியது. புத்த பிக்குவாக மாறி அந்த புத்த விஹாரத்திற்கு அவர் வந்து ஒரு வருட காலமே ஆகி இருந்தது. புத்த மத நூல்களைப் படிப்பதிலும், அனுஷ்டானங்களைப் பின் பற்றுவதிலும் அவர் குறுகிய காலத்திலேயே நல்ல தேர்ச்சி பெற்று விட்டிருந்தாலும் மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர் இன்னும் உண்மையான பிக்குவின் தன்மைகளைப் பெற்று விட்டிருக்கவில்லை என்பது மூத்த பிக்குவின் கணிப்பாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் இளைய பிக்கு நடந்து கொள்ளும் போதெல்லாம் வார்த்தைகளின்றி பார்வையாலேயே மூத்த பிக்கு சுட்டிக் காட்டுவது வழக்கம்.
அவன் மீது அவர் வைத்திருந்த அன்புதான் வந்தவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதை அவர் பார்வையால் சுட்டிக் காட்டியதற்கு இளைய பிக்கு வாய் திறந்து எதிர்க் கேள்வி கேட்டார். “நிராதரவாய் நிற்கும் மனிதர்கள் மீது அன்பு காட்டுவது தவறா குருவே?”
மூத்த பிக்கு சொன்னார், “அன்பு உயிர்கள் அனைத்தின் மீதும் பொதுவாக இருப்பது தெய்வீகத் தன்மை. ஆனால் அது தனிப்பட்ட மனிதர்களிடம் தேங்கும் போது துக்கத்தையே தரும்”
இளைய பிக்கு மௌனம் சாதித்தார். மூத்த பிக்கு சொன்னார், “இன்னொரு விஷயம்…”
என்ன என்பது போல் இளைய பிக்கு பார்க்க, மூத்த பிக்கு சொன்னார், “பேச்சில் சாமர்த்தியம் பல சந்தர்ப்பங்களில் நம்மை உண்மையை நழுவ விடச் செய்வதுண்டு….”
குனிந்த தலை நிமிராமல் இளைய பிக்கு நகர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவருடைய சிந்தனை அவனை நோக்கிச் சென்றது. அவன் வருவதை முன் கூட்டியே அறியும் சக்தி படைத்தவனாக இருந்ததாகத் தோன்றியது. அவன் நேற்று இரவு அங்கிருந்து கிளம்புவதாகச் சொன்ன போது மூத்த பிக்கு உட்பட அனைவருமே அது தேவையுமில்லை, உசிதமுமில்லை என்று சொன்னார்கள். மூத்த பிக்கு அவனிடம் கேட்டார், “நீ ஏன் போக வேண்டும் என்று நினைக்கிறாய்?”
“அவர்கள் என்னை மறுபடி தேடி வரலாம் என்று தோன்றுகிறது”
இளைய பிக்கு சொன்னார். “அவர்கள்தான் ஒரு முறை பார்த்து விட்டுப் போய் விட்டார்களே. இனி உனக்கு இதுதான் பாதுகாப்பான இடம். இனி இங்கே தேடி வர மாட்டார்கள்”
அவன் அமைதியாக விளக்கினான், “நீங்கள் உங்களுக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளைத் தொலைத்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை வைத்திருக்கக் கூடிய எல்லா இடத்திலும் தேடுகிறீர்கள். அது கிடைக்கவில்லை. நீங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுவீர்களா? மாட்டீர்கள் அல்லவா? முதலில் மேற்போக்காகத் தேடிய இடத்தில் எல்லாம் மறுபடி நிதானமாகவும் மேலும் கவனத்துடனும் தேடுவீர்கள் அல்லவா? அதே போலத்தான் அவர்களும் என் உடல் எங்கும் கிடைக்கவில்லை என்றான பிறகு மறுபடி தேடிய இடத்திலேயே தேட வருவார்கள்….”
“நீ இன்னும் முழுதும் குணமடையவில்லை. இந்த நிலையில் நீ எங்கே போவாய்? என்ன செய்வாய்? உனக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது?”
அவன் புன்னகைத்தான். “இது வரை காப்பாற்றிய கடவுள் இனியும் காப்பாற்றுவார். ஏதாவது வழி காட்டுவார்”
இளைய பிக்கு மூத்த பிக்குவைப் பார்த்தார். மூத்த பிக்கு ஏதாவது அவனிடம் சொல்லி அவன் மனதை மாற்றுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் மூத்த பிக்கு அவன் முகத்தைப் பார்த்தே அவன் எடுத்த முடிவில் இருந்த உறுதியை அறிந்ததால் பேசாமல் இருந்தார்.
துப்பாக்கிக் குண்டால் துளைக்கப்பட்ட சட்டையின் துளையை மறைக்க ஊசி நூலால் மிகக் கச்சிதமாக அவன் தைத்துக் கொண்டான். அவனுக்கு எடுத்துச் செல்ல எதுவும் இருக்கவில்லை. அந்த இரவு வேளையில் அவன் கிளம்பிய போது மூத்த பிக்கு அவனிடம் சிறிது பணத்தைத் தர முன் வந்தார். அவன் தயங்கினான். “இங்கு எங்களைப் போன்றவர்கள் பணம் தந்து உங்களை ஆதரிக்க வேண்டுமேயல்லாமல் உங்களிடம் இருந்து பணம் பெறுவது முறையல்ல, குருவே. நீங்கள் எனக்கு நிறையவே உதவி செய்து விட்டீர்கள். இனி நீங்கள் எனக்குத் தர வேண்டியதெல்லாம் ஆசிகள் மட்டுமே” என்றவன் அவர் காலில் விழுந்து வணங்கினான்.
அதைப் பார்த்த இளைய பிக்கு கண் கலங்கினார். மூத்த பிக்கு கண்களை மூடி அவனை ஆசீர்வதித்தார்.
பின் அவனிடம் அந்தப் பணத்தைத் திணித்தார். “இதில் அதிகமில்லை. சில நாட்கள் உணவுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். வைத்துக் கொள்”. அவன் நன்றியுடனும் தயக்கத்துடனும் அதை வாங்கிக் கொண்டான்.
மற்ற பிக்குகளைக் கை கூப்பி வணங்கினான். அவர்களும் கண்களை மூடி ஒரு கணம் அவனுக்காகப் பிரார்த்தித்தனர்.
அவன் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்லிக் கொண்டு விடை பெற்றான். கடைசியில் இளைய பிக்குவின் அருகில் வந்த போது அவருடைய கலங்கிய கண்களைக் கண்டு அவன் நெகிழ்ந்து போனான். அவன் கண்களும் ஈரமாயின. அவர் ஒரு சால்வையை அவனுக்குத் தந்தார். இந்தக் கடுங்குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும் அவன் தலை, தோள் காயங்கள் வெளியே தெரியாமல் இருக்கவும் அது பயன்படும் என்று நினைத்தார். அவன் நெகிழ்ந்த மனதுடன் சொன்னான், “ஒருவேளை நான் பிழைத்து, எனக்கு நினைவு திரும்பி என் குடும்பத்தோடு இணைந்தால் அவர்களைக் கூட்டிக் கொண்டு நிச்சயம் ஒரு நாள் இங்கு வருவேன், பிக்குவே. என்னையே நான் அறியாமல் நிராதரவாய் இருந்த போது என்னைக் காப்பாற்றி என்னிடம் அன்பு காட்டியவர்கள் என்று உங்கள் அனைவரையும் நான் அறிமுகப்படுத்தி வைப்பேன்….” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.
பனி பெய்யும் கடுங்குளிரான இரவு வேளையில் அவர் தந்த சால்வையைப் போர்த்திக் கொண்டு அந்தப் புத்த விஹாரத்திலிருந்து அவன் வெளியேறினான்.
நேற்றைய நிகழ்வில் இருந்து மீண்ட இளைய பிக்குவிற்கு இங்கிருந்து நேற்று இரவு போன அவன் எங்கு சென்றானோ, தற்போது என்ன செய்கிறானோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
(தொடரும்)