Home » பொது » சுயராஜ்ய கனவு கண்டவர்!!!
சுயராஜ்ய கனவு கண்டவர்!!!

சுயராஜ்ய கனவு கண்டவர்!!!

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்
(பிறப்பு: 1870, நவ. 5- மறைவு: 1925, ஜூன் 16)

‘தேசபந்து’ என்று (தேசத்தின் உறவினர்) எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட  சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ்,  1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி வங்காளத்தில் டாக்கா மாவட்டம், விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

அவரது தந்தை பூபன் மோகன்தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். அவர் மிகுந்த நாட்டுப்பற்றும் உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப்பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம்.

சித்தரஞ்சன்தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று ஐசிஎஸ் தேர்வு எழுதினார். பின்னர் இந்தியா திரும்பி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். வங்கப் பிரிவினையின் போது அரவிந்தர், பிபின் சந்திரபாலுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’ என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார்.

அரவிந்தரும் சித்தரஞ்சன் தாஸும் சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான அனுசீலன் சமிதியின் துணைத் தலைவர்கள் ஆவர். இவ்வியக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிழக்கு இந்தியாவின் முக்கிய ஆயுதம் ஏந்திய இயக்கம் ஆகும். ஆயுதப்புரட்சி மூலம் சுதந்திரம் பெறுவதே இதன் குறிக்கோள் ஆகும். ஜதீந்திரநாத் பானர்ஜி,  ஜதீந்திரநாத் முகர்ஜி,  யதீந்திர கோஷ் (அரவிந்தரின் இளைய சகோதரர்),  ராஷ் பிஹாரி போஸ் ஆகியோர் இதன் முக்கிய உறுப்பினர்கள்.

சித்தரஞ்சன் தாஸ் ஐரோப்பிய இலக்கியத்தில் ஆர்வம் உடையவர்.  ‘சாகர் சங்கீத், நாராயண்மாலா, கிஷோர்-கிஷோரீ, அந்தர்யாமி’ ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். மேற்கத்திய கல்விமுறை ஆன்ம முன்னேற்றத்திற்குப் பயனற்றது என்று கருதினார். பிரம்ம சமாஜ நூல்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர் நூல்கள் ஆகியவற்றை ஆழ்ந்து படித்தார். விவேகானந்தரின் கருத்துகள் இவரைக் கவர்ந்தன. புகழ்பெற்ற அறிஞர்களான பக்கிம் சந்திரர், டி.எல்.ராய், கிரீஷ் கோஷ்,ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் நூல்களையும் அவர் ஆழ்ந்து படித்தார்.

எல்லோரும் கல்வி கற்க வேண்டியது அவசியம் என்று கருதினார். ஈஸ்வரசந்திர வித்யாசாகரின் விதவை மறுமண இயக்கத்திற்கு உதவினார். அவர் 1890-லிருந்து 1894 வரை இங்கிலாந்தில் இருந்த காலத்தில் தாதாபாய் நௌரோஜிக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். ஜான்மெக்கலன் என்பவரின் இந்திய விரோதப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கிளாட்ஸ்டோன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

அரவிந்தரின் அலிப்பூர் குண்டுவழக்கில் தாஸின் வாதத் திறமையால் அரவிந்தர் விடுவிக்கப்பட்டார்.  அதனால் அவரது புகழ் பரவியது.  தும்ரோன் அரசரின் தத்தெடுப்பு குறித்த வழக்கிலும் அவர் வெற்றி பெற்றார்.  இவ்வாறாக அவர் சிவில், கிரிமினல் வழக்குகள் இரண்டிலுமே தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

1920-ல் அவரது மாத வருமானம் ரூ. 50,000 ஆகும். அவரது தந்தை தாராள குணத்தாலும், ஆடம்பரத்தாலும் திவாலாகி இருந்தார். 1913-இல் தாஸ் தனது தந்தையின் கடன்களை அடைத்தார்.  1921- ஆம் ஆண்டு விக்ராம்பூரில் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அதே ஆண்டு அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றம், அஸ்ஸாம்- வங்காள ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தினார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டார். அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.  கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார் சித்தரஞ்சன்தாஸ்.

ஃபோர்வார்ட் (Forward) என்ற செய்திப் பத்திரிகையை ஆங்கிலேயருக்கு எதிராக ஆரம்பித்து நடத்தினார். இப்பத்திரிகை பின்னர் விடுதலை (liberty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

1923-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி காந்திஜியை எதிர்த்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் சுயராஜ்ஜியக் கட்சி துவங்கப்பட்டது. இதில் முக்கியமானவராக சித்தரஞ்சன் தாஸ் இருந்தார்.

1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி டார்ஜிலிங்கில் தனது 55-வது வயதில் இறந்தார்.

சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர்; பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்; புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர் சித்தரஞ்சன் தாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top