தக்காளி, மாதுளை, நெல்லி…
கோடை காலத்தின் அமிர்தம்!
––––––––––––––––––––––––––
கோடை வெயிலில் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி எளிய சில வழிகளை நேற்று பார்த்தோம்… இன்று மேலும் சில வழிமுறைகளை பார்ப்போம்…
தினமும், வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் நலமாக வைத்திருக்க உதவும். இலகுவான புரதத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். சோயா, பருப்பு வகைகள் போன்றவை எளிதான சத்தான புரதங்கள்.
பாதாம், பிஸ்தா போன்றவைகளையும், அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளியும், மாதுளையும், நெல்லியும் கோடைக் காலத்திற்கு கண்கண்ட அமிர்தம் என்பதால், இதனை தினமும் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு, இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய், காரம் குறிப்பாக ஊறுகாய், வத்தல் இவை கோடை காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.
நிறைய நீர், மோர் குடியுங்கள். ஐஸ் கட்டி, மிகவும் குளிர்ந்த ஐஸ்கிரீம் இவை அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை. சிறு சிறு அளவாக உண்ணுங்கள். அதிக நீர் சத்து உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோடை காலத்தில் பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியில் செல்வதும், உணவு அருந்துவதும் குடும்ப மகிழ்ச்சிதான்.
ஆனால் இந்த கோடையில்தான் கிருமிகள் வேகமாக பரவும். எனவே வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிடுவது நல்லது. கோடையில் காய்கறிகள், பழங்கள் விரைவில் கெட்டு விடும். எனவே அவை கெட்டு விடாது இருக்க, உங்கள் குளிர்சாதன பெட்டியினை சரியான டிகிரியில் செட் செய்யுங்கள்.