Home » பொது » அறிவியல் தமிழின் புதல்வர்
அறிவியல் தமிழின் புதல்வர்

அறிவியல் தமிழின் புதல்வர்

பெ.நா.அப்புசுவாமி

(பிறப்பு: 1891, டிச. 31-மறைவு: 1986, மே 16)

தலைப்பாகையும்  பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக, சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி- பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில்,  லா பாயின்ட் தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர், சட்டம் படித்த  பெ.நா.அப்புசுவாமி.1917ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை லகுவாகத் தாண்டும்.

தள்ளாத பிராயத்தில் தான் எழுதிய படைப்பை ஹிந்து  பத்திரிகைக்கு அனுப்ப அஞ்சல் அலுவலகத்துக்கு நடந்தபோது தான் இந்த ஜாம்பவான் காலமானார்(1986 , மே 16)படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம், அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை.

அதை எழுத்துக்கு வலிமைதரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல் எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார்.

1936-ல் காற்றடைத்த ராட்சச பலூன்களில் நடத்திய விண்வெளி யாத்திரை பற்றி எழுதியவர், துணைக்கோள் (ஜியோ ஸ்டேஷனரி சாட்டிலைட்) பற்றி 1965ல் அதே உற்சாகத்தோடு எழுதுகிறார். ‘பண்டித நேருவைப் பறி கொடுத்தோமே’ என்று கிராமபோனில் கேட்டு இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நெக்குருகிக் கொண்டிருந்த போது, அந்தப் பெட்டி எப்படிப் பாடுகிறது என்று படம் வரைந்து எளிமையாக விளக்கும் அப்புசாமி,  நவீன அறிவியல் கோட்பாடான மேதமை அமைப்பு (எக்ஸ்பெர்ட் சிஸ்டம்) அடிப்படையில் இயங்கும் மின்னனு மொழிபெயர்ப்பு பற்றி 1960களின் இறுதியில் தமிழில் முதலாவதாக எழுதுகிறார்.

அது மட்டுமில்லை, “நாம் வாழும் யுகம் கம்ப்யூட்டர் யுகமாகி வருகிறது” என்று அவர் கணினிப் புரட்சிக்கு இருபது வருடம் முந்தைய   1969 லேயே அறிவியல் ஆருடம் சொல்லிவிடுகிறார்.

கமிட்டி போட்டுக் கலந்தாலோசித்து நத்தை வேகத்தில் தமிழில் கலைச் சொல்லாக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்புசுவாமி அலட்டிக்கொள்ளாமல் ‘பொங்கியெழுகேணி’ (artesian well),  நுண்துகள்கொள்கை (corpuscullar theory), அறிவுக்குறி எண் (intelligent quotient) என்று போகிற போக்கில் நல்ல தமிழ்த் தொடர்களை வீசிப் பிரமிக்க வைக்கிறார்.”

வயிற்றோட்டமும் பலவீனமும் இருப்பின் அரை அல்லது ஓர் ஆழாக்கு சாராயம் தரலாம்” என்று கள்ளுக்கடை மறியல் காலத்தில் இவர் எழுதிய கட்டுரையும் சிறிய தரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துவது உண்மைதான்.

இந்த வைத்தியம் மனிதனுக்கு இல்லை, நோய் கண்ட பசுமாட்டுக்கு.தமிழிலிலும் அறிவியல் கற்பிக்க முடியும் என்று நிரூபித்தவர், அறிவியல் தமிழ் எழுத்தாளர்  பெ. நா.அப்புசுவாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top