பொதுவாக வெயிலின் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்க, வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் போன்றவர்கள், நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் வராமல் இருப்பது நல்லது. மேலும் தங்கள் பணி காரணமாக வெளியே செல்வோர், அவசியம் குடிநீர் பாட்டில் கொண்டு செல்வதும், தினசரி 3 முதல் 5 லிட்டர் வரை காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் பருகுதலும் அவசியம்.
கோடைக்கேற்ற காற்றோட்டமுள்ள இடங்களில் வசித்தல், தளர்வான பருத்தி ஆடைகள் அணிதல், காற்றோட்ட பகுதிகளில் பணி செய்தல், போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு பின்னர், குறைந்த பட்சமாக 8 மணி நேரமாவது உறங்குவது அவசியம்.
பொதுவாக, புகையிலை பொருட்கள், மதுபான உபயோகிப்பு மற்றும் அசைவ உணவுகளை அவசியம் தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக, நீர் சத்து உள்ள திரவ நிலை உணவுப் பொருட்கள், இளநீர், எலுமிச்சை சாறு, தர்பூரணி, வெள்ளரி பிஞ்சுகள், ஆரஞ்சு பழவகைகள் உட்கொள்ளுவதன் மூலம், உடலின் நீர் சத்து அதிகரிப்பதோடு, வெயிலின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதாகவும் அமையும்.
குறிப்பாக, சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கும் உணவுகளை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். எனவே, மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம், பொது மக்கள் தங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.