இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ்.
ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார்.
விருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற வேளையில் மன்னர் மட்டும், மாறுவேடம் போட்டுக் கொண்டு நகரைச் சுற்றி வந்தார்.
அவர் ஒரு கிராமத்துக்குள் தம்முடைய குதிரையைச் செலுத்தி கொண்டு வந்து பார்த்தபோது, அக்கிராமத்தில் ஒருவருமே இல்லை. எல்லாரும் மன்னரின் விருந்துக்காக அரண்மனைக்குச் சென்றிருந்தனர்.
ஆனால், ஓரிடத்தில் ஒரேயொரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தாள். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட மன்னர் அவளிடம் நெருங்கிச் சென்று, “பெண்ணே, இந்தக் கிராமமே காலியாக இருக்கிறதே… இங்குள்ளவர்கள் என்னவானார்கள்?” என்று கேட்டார்.
அவளோ தன் வேலையிலேயே மும்முரமாக மூழ்கி இருந்த காரணத்தினால், தன் பார்வையைத் திருப்பாமலேயே சொன்னாள்.
“உங்களுக்கு விஷயமே தெரியாதா? இன்று நம் மன்னரின் அரண்மனையில் திடீர் விருந்துக்கு ஏற்பாடாகி உள்ளது. அதில் மன்னர் பரிசு கொடுப்பார் என்றும் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆகவே, விருந்து சாப்பிடும் பொருட்டும், தங்களுக்கு ஏதாவது அதிர்ஷ்டவசமாகப் பரிசு கிடைக்காதா… என்ற நப்பாசையாலும் மக்கள் அங்கே சென்றிருக்கின்றனர்!” என்றாள்.
“இவ்வளவு விபரங்களைத் தெரிந்து வைத்திருக்கக் கூடிய நீ, விருந்துக்குப் போக வில்லையா? அதிர்ஷ்டமிருந்தால் உனக்கும் மன்னரின் பரிசு கிடைக்குமில்லையா?” என்று கேட்டார்.
அந்தப் பெண் வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்.
“ஐயா, எனக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால், நான் செய்யும் இந்த வேலைக்குத் தக்க கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மேலும், நான் விருந்துக்குப் போய்விட்டால், இன்றைய தினத்தில் செய்யும் வேலையை இழந்து விடுவேன். அதனால், கிடைக்கும் கூலியை இழந்து விடுவேன். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்குண்டு. ஆகவேதான், நான் போக விரும்பவில்லை!” என்றாள்.
இதைக் கேட்ட மன்னர் மனமகிழ்ந்தார்.
“பெண்ணே, என்னை நிமிர்ந்து பார். உன் சக மக்களிடம் நீ கூறு. நீங்கள் அதிர்ஷ்டத்தை விரும்பி மன்னரைப் போய்ப் பார்க்கச் சென்றீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால், வேலையை விட மனதின்றிக் கடுமையான வேலை செய்து கொண்டிருந்தேன். என் உழைப்பு அதிர்ஷ்டமாக மாறி, மன்னரையே இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. மன்னரே தேடி வந்து பரிசுகள் தந்தார் என்று கூறு,” என கூறி, ஒரு பணமூட்டையை அவள் கையில் தந்துவிட்டு சென்றார் மூன்றாம் ஜார்ஜ்.
கடுமையான உழைப்பு அதிர்ஷ்டத்தை அழைத்து வரும். அதிர்ஷ்டத்தைக் தேடிக் கொண்டு நாம் போகக் கூடாது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடிக்கொண்டு வர வேண்டும். அதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.