வாழ்க்கை பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டது. சிலருக்கு இந்த உண்மை அனுபவ ரீதியில் புலப்படுகிறது. பலருக்கோ புலப்படாமல் போய் விடுகிறது. வாழ்க்கையை ஒரே மாதிரியாக அணுகினால் போரடித்து விடும். ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்தலில் தான் வாழ்க்கை உயிர்பெறுகிறது.
சாதனையாளர்களும் வாழ்க்கையை ரசிக்காமல் சாதனைகளைப் புரியவில்லை. வாழ்க்கையை அவர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதுதான் முக்கியம்.
சுபாஷ் சந்திரபோஸ் நாட்டு விடுதலையைத் தன்னுடைய லட்சியமாகக் கொண்டார்.அதற்காக அவர் பட்ட துயரங்கள் பல. நம்முடைய நிலையிலிருந்து பார்த்தால்அவையெல்லாம் தாங்க முடியாத துன்பங்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தத் துன்பங்களை எப்படிப் பார்த்தார் என்பது தான் இதில் முக்கியம்.
‘மாண்ட்லே’ சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது ஷயரோக நோயினால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். சிறை வாழ்க்கையே துன்பமயமானது. இதில் நோய் வேறு. அந்த நிலையில் நண்பர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதத்திலுள்ள ஒரு வாசகம் குறிப்பிடத்தக்கது .
‘’இந்தச் சிறை வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தேசத்துக்காக அதை அனுபவிக்கிறேன் என்கிற போது அந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கிறது.
இங்கே அவர் அனுபவித்த துன்பம் முக்கியமில்லை. தன்னுடைய வாழ்க்கையில் தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்துக்காக அதை அனுபவிக்கிறோமென்ற உணர்வு அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சிறை வாழ்க்கையினைக் கூட அனுபவிக்கும் மனோபாவம் அவருக்கு வந்து விடுகிறது. தன்னுடைய வாழ்க்கை ரசனையை உயர்ந்த நிலைக்கு அவரால் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
சாக்ரடீஸின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் அடிக்கடி எடுத்துக்காட்டப்படுவதுண்டு. நண்பரோடு வெகுநேரம் நின்று அவர் பேசிக் கொண்டிருப்பதைவிரும்பாத அவர் மனைவி அவரைக் கடுமையாகத் திட்டினார். அப்போதும் நண்பரோடு பேசிக் கொண்டிருப்பதை சாக்ரடீஸ் நிறுத்தவில்லை. ஆத்திரமடைந்த மனைவி ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் ஊற்றினார்.
எந்த ஒரு மனிதரும் அந்த நிலையில் கடும் கோபத்துக்குத் தான் ஆளாகியிருப்பார். நண்பரின் முன்னிலையில் மனைவி தனக்கு ஏற்படுத்திய அவமானத்தையும் சாக்ரடீஸ் ரசித்தார். ‘’முன்பு இடி இடித்தது, இப்போது மழை பெய்கிறது’’ என்று நண்பருக்கு விளக்கம் சொன்னார்.
சாக்ரடீஸால் இவ்வாறு எப்படிப் பேச முடிந்தது-? ஆங்கிலத்தில் Sense of Humour என்று சொல்வார்கள். நகைச்சுவை உணர்ச்சியின் உன்னத நிலையிலிருந்தே சாக்ரடீஸ் இந்த விமர்சனத்தைச் செய்திருக்க வேண்டும் என்பது சந்தேகமில்லை.
‘கார்ல் மார்க்ஸ்’ வாழ்க்கை பூராவும் கடுமையான வறுமையோடு போராடினார். உலகவரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மிகப் பெரிய பொருளாதார தத்துவத்தைச் சொன்னார்.
வறுமையினையும் ரசிக்கின்ற மனோபாவம் கார்ல் மார்க்ஸ்க்கு இருந்திரா விட்டால்வாழ்க்கை பூராவும் வறுமையோடு போராடி ஆராய்ச்சி பூர்வமான பொருளாதாரதத்துவத்தைப் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக அவர் எழுதியிருக்கமுடியாது. இத்தனைக்கும் அவருடைய மனைவி ஜென்னி பணக்காரக் குடும்பத்தைச்சேர்ந்தவர். கணவரின் லட்சியத்துக்கு ஆதரவு தருவதற்காக அவரும் வறுமையை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார்.
இவ்வாறு உலக மகா புருஷர்களின் வாழ்க்கையை ஊடுருவிப் பார்த்தால்துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியிலும் அவர்கள் அரிய சாதனைகள்புரிந்ததற்குக் காரணம் அவர்கள், வாழ்க்கையை நேசித்ததுதான் என்கிற உண்மைதெளிவாகும்.