ஒரு பெரிய ஆலமரம் பல பல கிளைகளை பரப்பிக்கொண்டு பலருக்கும் நிழல் தந்துவந்தது. பல ஊருக்கும் செல்லும் வழியில் அது இருந்ததால், பல உயிரினங்களும் அது தரும் நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் பலரையும் சந்தித்து, நட்புறவுடன் பழக இருந்த அமைதியான சூழலுக்கும் அம்மரத்தை நாடி வந்தனர்.
அவர்களுள் ஒரு வீரனும் சில வருடங்களாக அவனுக்கு இருந்த பல பொறுப்புக்களிடையே அம்மரம் தரும் மன நிம்மதிக்காக முடிந்தபோதெல்லாம் அங்கு வந்து கொண்டிருந்தான். தன்னை போல் மரத்தினை நாடி வந்த பல நல்ல உள்ளங்களுடன் நட்புறவு கொண்டு அளவளாவிவிட்டு செல்வான். அப்படி ஒரு நாள் அவன் அங்கு வந்தபோது பழைய நண்பர்கள் யாரும் கண்ணில் தென்படுகிறார்களா என்று துழாவிக்கொண்டே மரத்தடியில் ஆவலுடன் அமர்ந்தான்.
கிளைகளின் மேலே ஒரு பறவை தனியாக கரைந்துகொண்டிருப்பதாக தோன்றியது. மற்றவர்களை போல சாதாரண பிரஜையாக பாவித்து அதனுடன் பேச்சுக்கொடுத்தான். இளரத்த பேச்சுக்கள் என்று அந்த புதிய பறவையின் பேச்சுக்களை முதலில் ரசிக்க தொடங்கினான். போக போக அந்த பறவைக்கு என்ன தோன்றியது என்று வீரனுக்கு புரியவில்லை.
அவ்வீரனை பல பெயர் சொல்லி அழைத்து கடுமையான பேச்சுக்களால் தாக்கியது. வீரனுக்கு தான் என்ன சொன்னோம், பறவையின் போக்கு ஏன் இப்படி ஆனது என்று ஒன்றும் புரியவில்லை. அவன் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் பறவை இன்னும் பல பேச்சுக்களை பேசி வீரனுக்கு மனவருத்தத்தை உண்டு பண்ணியது. தன் அதிருப்தியை தெரியப்படுத்திவிட்டு வீரன் கௌரவமாக ஒதுங்கிவிட்டான்.
பலரும் அங்கே வர தொடங்கினர். நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தாலும் ஒருவருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லையா, தலையிட்டுக்கொள்ள விருப்பமில்லையா என்று வீரனுக்கு தெரியவில்லை. சரியான மேற்பார்வை இருப்பின் தேவையற்ற பேச்சுக்களையும் பொன்னான நேரம் வீணாவதையும் தடுக்கலாம் என்று ஒருவர் மட்டும் சொன்னார். வீரனுக்கு பறவையை வீழ்த்தி வாயை அடைக்க ‘முடியுமா’ என்ற எண்ணம் தோன்றவே இல்லை, ‘வேண்டுமா’ என்ற கேள்வி தான் அவன் மனது முழுவதும் நிரம்பியிருந்தது.
அப்படி அடிப்பதன் மூலம் அவனுக்கு நிம்மதியும் கிடைக்காது, மனமும் இடம் தராது. அது தான் வீரனின் சுபாவம். பறவையின் தரத்திற்கு தான் ஏன் செல்லவேண்டும்? பொதுவான இடத்தில் பேசுவதற்கென்ற ஒரு அளவும் தரமும் எழுதப்படாத விதிமுறையாக இருக்கிறது. எதற்கு எழுதவேண்டும்? படித்தவர்களுக்கு தன்னாலே வரும் பண்பு அது. அது தான் பள்ளிக்கல்வியிலேயே தமிழில் ‘நிறை குடம் தளும்பாது’ என்ற பழமொழி பத்தாது என்று கூடவே ஆங்கிலத்தில் ‘எம்டி வெஸெல்ஸ் மேக் லாட் ஆஃப் நாய்ஸ்’ என்றும் சொல்லித்தரப்படுகிறதே.
அதனால் அதை வலியுறுத்த வேண்டியது வீரனின் வேலையும் இல்லை, கவலையும் இல்லை. வீரனின் அமைதியை பறவை தன்னால் வீரன் பயந்து ஓடிவிட்டான் என்று வருவோர் போவோரிடமெல்லாம் கொக்கரித்தது. பாவம் அந்த பறவைக்கு தெரியாது. அந்த மரம் பல அரிய விஷயங்களை, பொக்கிஷங்களை கொண்டது. கேவலம் அந்த சிறு பறவைக்காக வீரன் அம்மரத்தை விட்டுவிடமாட்டான். அது தரும் நிழலும், அங்கு வரும் நல்ல உள்ளங்களின் நட்பும் அவனுக்கு என்றும் தேவை.
மற்ற பொறுப்புக்கள் அழைப்பு விட, வீரன் அவ்விடத்தை விட்டு, நியாயமாக ஒலித்த குரலின் சொந்தகாரரிடம் நட்பு பாவத்துடன் தலை அசைத்துவிட்டு தன் பொறுப்புக்களை காண கிளம்பிவிட்டான். இனி அடுத்து நேரம் கிடைக்கும் போது அம்மரத்தினை நாடி திரும்பி வருவான்!
இது எதுவும் அறியாத பறவை இன்னும் கத்திக்கொண்டு தான் இருந்தது. வீரனுக்கு ஒன்று புரிந்தது, பறவைக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எங்கேயோ அடி விழுந்திருக்கிறது. அந்த வலியை அடுத்தவர் மேல் சேர்வாரி பூசி தீர்த்துக்கொள்கிறது. பரிதாப உணர்ச்சியே மனம் முழுவதும் நிரம்பியிருக்க வீரன் பெருமூச்சுடன் நடக்க தொடங்கினான்.