Home » சிறுகதைகள் » பலன் வழங்கியே தீருவார்!!!
பலன் வழங்கியே தீருவார்!!!

பலன் வழங்கியே தீருவார்!!!

ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம்.

அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி? சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார்.

சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார். சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார்.

பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top