“வழிபாடு தெய்வம் நிற்புறங் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்!”
என்று தொல்காப்பியம் வழிபாட்டைச் சுட்டுகிறது. வழிபாடு, வாழ்க்கை முறை, இடம், காலம் ஆகியவற்றுக்கேற்ப அமைவது மரபாகும். வழிபாடு காலத்தையொட்டிப் பலவாறாகப் பெறும், புத்தாண்டுத் தொடக்கம், ஆடிப் பதினெட்டு, தைப் பொங்கல் முதலியவை தேதி அடிப்படையில் அமைந்தவையாகும்.
கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் முதலியவை நட்சத்திர அடிப்படையில் அமைந்தவையாகும். விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி, நவராத்திரி, வைகுண்ட எகாதசி, சிவராத்திரி முதலியவை திதி அடிப்படையில் அமைந்தவையாகும்.
இவ்வகையில் திதி அடிப்படையில் அமைந்தது பிரதோஷ வழிபாடு. வளர்பிறை (பூர்வபட்சம் – சுக்கில பட்சம்), தேய்பிறை (அமர பட்சம் – கிருஷ்ணபட்சம்) ஆகிய இரண்டிலும் பதின்மூன்றாம் தேதி (திரயோதசி) யில் பிரதோஷம் வரும்.
பிரதோஷம் என்ற வடசொல்லுக்கு பொருள் ‘இரவின் முன்’ என்பதாகும். இரவின் முன் என்பது மாலைக் காலம். வேடிக்கையாக ஆங்கில முறைப்படி சொன்னால், திருப்பள்ளியெழுச்சி என்பது குட் மார்னிங். பிரதோஷம் என்பது குட் ஈவினிங். ஆங்கிலேயர் காலை, மாலை மனித வணக்கத்திற்கு அச் சொற்களை பயன்படுத்தினர். நம் மூதாதையர் காலை, மாலை கடவுளை வழிபட அச் சொற்களைப் பயன்படுத்தினர்.
பிரதோஷ வழிபாடு புராணக் கதையையொட்டி ஏற்பட்டதாகும். தேவர்களும், அசுரர்களும் நீண்ட காலப் போர் செய்து ஆற்றல் இழந்தனர். மீண்டும் ஆற்றல் பெறுவதற்கு வழி என்ன என்று எண்ணினர். அதற்குப் பாற்கடல் கடைந்தால் உண்டாகும் அமுதை உண்டால் பேராற்றல் பெறலாம் என்று எண்ணி இருசாரரும் கூட்டுச் சேர்ந்து பாற்கடலை கடையத் தொடங்கினர்.
தேவர்களும் அசுரர்களும் என்றும் ஒருவர்க்கொருவர் பகைவகராகவே இருந்துள்ளனர். நல்ல பயன் அமுது கிடைக்கும் என்பதால் கூட்டு சேர்ந்து செயல்பட்டனர். அதாவது எதிரிகளாக இருந்த காலத்தில் நடந்து கொண்டதை மறந்துவிட்டுத் தேர்தல் காலத்தில் கூட்டுச் சேரும் இன்றைய அரசியல்வாதிகளைப் போல என்று கூறலாம்.
‘வட வரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே’ என்பது சிலப்பதிகாரம். வாசுகியின் தலைப் பாகத்தை அசுரர்களும் வால்பாகத்தை தேவர்களும் பிடித்து இழுத்து கடையத் தொடங்கினர். அப்போது வாசுகி நஞ்சைக் கக்கியது. தொடர்ந்து கடைந்தபோது பாற்கடலில் நஞ்சு தோன்றியது. இரண்டு நஞ்சும் சேர்ந்து கொதித்து எழுந்தது. அசுரர்களும் தேவர்களும் அஞ்சி ஓடினர். அங்கும் இங்கும் ஓடிய தேவர்கள் திருக்கயிலை சென்றடைந்தனர் . பின் நந்தி தேவரின் (இடப வாகனர்) அண்டத்தில் ஒளிந்து கொண்டனர். இறைவன் இடப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே தோன்றி நடனம் செய்து தேவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இறைவன் கணநாதர்களுள் ஒருவரான சுந்தரரை அனுப்பி உள்ளங்கையில் உருட்டி வரச் செய்தார். வாசுகி கக்கிய நஞ்சு, பாற்கடலில் உண்டான நஞ்சு ஆகிய இரண்டும் சேர்ந்து ஆலம் + ஆலம் = ஆலாலம் ஆயிற்று. ஆலாலத்தைக் கொண்டு வந்ததால் சுந்தரர், ஆலாலசுந்தரர் எனப்பட்டார். இந்தக் கணநாதராகிய ஆலால சுந்தரர் தாம் பின்னர் திருநாவலூரில் சுந்தரமூர்த்தி நாயனாராக அவதாரம் செய்துள்ளார்.
ஆலால சுந்தரர் கொண்டு வந்த நஞ்சினை இறைவன் உட்கொண்டார். அம்மையின் கைகளால் தடுக்கப்பட்டு, ‘வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகையே’ என்ற அபிராமப் பட்டரின் கூற்றுப்படி அமுதாயிற்று. உள்ளே சென்றிருந்தால் உள்ளே இருக்கக் கூடிய உயிரினங்களுக்கு தொல்லை நேர்ந்திருக்கும். வெளியே உமிழ்த்திருந்தால் வெளியே உள்ள உயிரினங்களுக்குத் துன்பம் நேர்ந்திருக்கும். அதனால் கண்டதிலே தங்கச் செய்தார். நஞ்சுண்டன், நீலமணிமிடற்றன் ஆனான்.
இறைவன் ஆலகால நஞ்சையுண்டு தேவர்களைக் காத்து அருள்புரிந்தார். தேவர்களும் அசுரர்களும் அச்சமும் கவலையும் நீங்கித் துதித்து வழிபட்டனர்.
இறைவன் நஞ்சுண்டு காத்து அருள் செய்து இடபதேவரின் கொம்பின் நடுவில் நின்று திருவருள் பாலித்த காலம் வளர்பிறையும் திரயோதசியும், சனிக்கிழமையும் சேர்ந்த காலமாகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்வோருக்கு எல்லா நலன்களையும் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இறைவனும் அவ்வாறே அருள் செய்தான்.
பிரதோஷ நாளில் விரதமிருந்து பிரதோஷம வருவதற்கு முன் நீராடிக் கோவிலுக்கு செல்ல வேண்டும். மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரை பிரதோஷ காலமாகும்.
கோவிலில் விநாயகரை வழிபட்டபின் இடபதேவரை முன் வணங்க வேண்டும். அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீச நாயனாரை வணங்கிப் பின் வந்த வழியே திரும்பி வந்து இடப தேவரை வணங்க வேண்டும். அங்கிருந்து வலமாகச் சென்று கோமுகி வரை சென்று அதனைத் தாண்டாமல் முன் வந்த வழியே திரும்பி வந்து இடப தேவரை வணங்க வேண்டும். மீண்டும் அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீசுவரரை வணங்கிச் சென்ற வழியே திரும்பிச் சென்று இம்முறை இடபதேவரை வணங்காமல் வலமாகச் சென்று கோமுகிவரை சென்று மீண்டும் சென்ற வழியே திரும்பி வந்து இம்முறையும் இடபதேவரை வணங்காமல், இடமாகச் சென்று சண்டீசுவரரை வணங்கி சென்ற வழியே திரும்பி வந்து இடபதேவரை வழிபட்டு, அவருடைய இரண்டு கொம்புகளுக்கும் நடுவில் அருவுருவாய் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும். இதற்குச் சோமசூத்திரப் பிரதட்சணம் என்று பெயர். தேவர்கள் நஞ்சு கண்டு அஞ்சி அங்கும் இங்குமாக ஓடியதை அடிப்படையாக கொண்டது இப்பிரதட்சணம்.
இறைவன் ஆலால நஞ்சுண்ட செய்தி சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், திருமுறைகள், புராணங்கள், தனிப் பாடல்கள் முதலியவற்றில் ஆங்கங்கே குறிப்பிடப்படுகின்றது. பிரதோஷ வழிபாடு எங்கும் குறிப்பிடப்படவில்லை. திருவோணம், திருவாதிரை, தைபூசம், கார்த்திகை விளக்கு, மாசிமகம், பங்குனி உத்திரம் முதலியவை இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதுபோல் அரசர்கள் பிறந்த நாள் விழா, ஆடிப் பதினெட்டு, தைப் பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம், கிரகண நாள் முதலியவை இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் பிரதோஷ வழிபாடு பற்றிய செய்தி இல்லை.
தற்போது மக்கள் ஆர்வம் காரணமாக பிரதோஷ வழிபாடு மிகச் செல்வாக்குப் பெற்றுள்ளது. நஞ்சுண்ட செய்தியின் அடிப்படையில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு செய்வது ஏற்றது. இன்று திருமால் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில், கிராம தேவதைகளின் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழிபாடு வளர்ச்சி பெறுவது நல்லதுதான். அதற்காக புரியாமல் செய்வது கூடாது.
அசுத்த மாய காரியான நம் பூத உடம்பின் எச்சில் வாயை வைத்து ஞானவடிவான நந்தியின் காதில் நம் தேவைகளைச் சொல்லுவது கொடிய செயலாகும். அவ்வாறு கூறவேண்டும் என்று எந்த நூலிலும் குறிப்பிடப் பெறவில்லை. இறைவன் நஞ்சுண்ட செய்தி இலக்கியங்களில் உண்டு. ஆனால் பிரதோஷ வழிபாடு கூறப்பெறவில்லை. நஞ்சுண்ட வரலாற்றை திருமூலர் தத்துவ முறையில் பாடியுள்ளார்.
இறைவனுக்கு ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்யோசாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. ‘செம்முகம் ஐந்துளான்’ என்பர் கச்சியப்ப சிவாச்சாரியார். ஐந்து முகங்களுடன் சதாசிவ மூர்த்தியாக இருந்து ஐந்தொழில் செய்கின்றான். பொது நிலையில் இவ்வாறு ஐந்தொழில் நடைபெற்றாலும் நிலவுலகில் உள்ளவர் வழிபாட்டிற்கு இரங்கி அருள் செய்வதற்கு இறைவன் கீழ்நிலை முகம் (அதோமுகம்) கொள்கிறான். நஞ்சுண்டு இறைவன் அருள்புரிந்தான். இறைவனின் கீழ்நிலை முகமே உலகத்தை பாதுகாப்பது. அதற்கு அடையாளமாக இறைவன் கறுத்த கண்டம் உடைய வடிவோடு உள்ளான். என்பதை ஒருவரும் உணர்வதில்லை.
ஆனால் நஞ்சுண்டதால் உண்டாயிற்று என்று மட்டும் கூறி வருகின்றனர். கறைமிடற்று அண்ணல் மார்பில் அணியும் மாலையும் இறந்தவர்களுடைய வெண்மையான தலையே ஆகும் என்பதனையும் அறிவாரில்லை.
“அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவாரில்லை
உண்டது நஞ்சம் என்று உரைப்பார் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே”
என்பது திருமந்திரப் பாடல்.