Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி – 3
நளதமயந்தி பகுதி – 3

நளதமயந்தி பகுதி – 3

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன்,  புன்னகைப் புயலே! அழகே வடிவாய் பேசும் பைங்கிளியே! இந்தச் சோலை எப்படியிருக்கிறது தெரியுமா? எங்கள் மாவிந்த நகரத்தில் நாங்கள் இளைப்பாறும் சோலையை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறது, என்றான். வந்தது வினை. தமயந்தி கோபித்துக் கொண்டாள்.
நாங்கள் என்றால்… இவர் யாரைச் சொல்கிறார்? இவர் தான் மாமன்னராயிற்றே! அழகில் மன்மதன். இவரது ஊரில் இருக்கும் சோலையில் அந்த நாங்களுடன் தங்கியிருந்தாரோ! நாங்கள் என்று இவர் குறிப்பிட்டது பெண்களாக இருக்குமோ! அப்படியானால், எனக்கு முன்பே இவருக்கு பெண்களிடம் உறவு இருந்திருக்கிறது. இது தெரிந்தால், இவருக்கு நான் கழுத்தை நீட்டியிருக்கவே மாட்டேன்.
இந்த ஆண்களே இப்படித்தான்! வண்டுகள்! ஓரிடத்தில் ஒழுங்காக இருக்கமாட்டார்கள். மனைவி அருகில் இருக்கும் போது கூட அந்த நாங்கள் இவரது நினைவுக்கு வருகிறார்கள். இன்னும் ஊருக்குப் போனதும், இவர் அந்த நாங்கள் பின்னால் அலைவார். நான் போய் இழுத்துக்கொண்டு வர வேண்டும். என்ன மனிதர் இவர், காதல் மொழி பேசும் போது, என்னைத் தவிர வேறு யாரையும் ஏறிட்டுக்கூட பார்த்ததில்லை என்றார். இப்போது, யாரையோ சிந்திக்கிறார்.
அந்த அன்னம் மட்டும் இப்போது என் கையில்கிடைத்தால்… அதன் கழுத்தை திருகி விடுவேன், அது செய்த வேலை தானே இவ்வளவும்.. அவள் கோபத்துடன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டாள்.
சந்தேகம்…. பெண்களுக்கே உரித்தான குணம், அதிலும் காதலித்து திருமணம் செய்யும் பெண்கள் இருக்கிறார்களே. அவர்கள் ஆண்களைப் பாடாய் படுத்தி விடுவார்கள். ஆண்கள் என்ன வார்த்தை பேசினாலும் சரி…அதைக் குதர்க்கமாக்கி, என்னென்னவோ சிந்திப்பார்கள். தமயந்தியும் இதற்கு விதிவிலக்கா என்ன! அவள் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு முகத்தைத் திருப்பியிருக்கிறாள். அப்பாவி நளன்…ஆஹா..இவளுக்கு என்னாயிற்று! இத்தனை நேரம் சந்தோஷமாகத்தானே பேசினாள்.
இப்போது சந்தோஷத்துக்கு தோஷம் வந்துவிட்டதே! ஏதாவது தப்பாக பேசி விட்டோமா! அப்படி வித்தியாசமாக ஏதும் பேசவில்லையே. அவன், அவள் முகத்தை மெதுவாகத் திருப்ப, அவள் பொசுக்கென்று எழுந்து விசுக்கென்று மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆண், பெண் என்ற இனத்திற்கிடையே இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் தான் இந்த ஊடல். வள்ளுவரின் மனைவி வாசுகி, கணவரின் செயல்பாடுகளை கடைசி வரை கண்டுகொண்டதே இல்லை என்று சொல்வதை எல்லாம் ஒருபக்கம் நம்பவே முடியவில்லை.
ஊடல் இன்பத்தில் அவர் நிரம்பவே திளைத்திருக்க வேண்டும். அந்த அனுபவ அறிவு இல்லாமலா, ஊடல் என்ற தனி அத்தியாயத்தையே அவர் படைத்திருக்க முடியும்!தமயந்தி! ஏன் உன் முகத்தில் திடீர் மாற்றம்? என்ன ஆனது உனக்கு? என்றான் கவலையுடன். மனைவி குளத்தில் குளித்ததில், புதுத்தண்ணீர் பிடிக்காமல் ஏதேனும் ஆகிவிட்டதோ என்ற கவலை அவனுக்கு!அவளது கொவ்வைச் செவ்விதழ் ஏதோ பேசத்துடித்தது. கண்கள் சிவந்திருந்தன.
முகத்தில் அந்த நிழற்சோலையிலும் வியர்வைத்துளிகள். அந்தத்துளிகள் அவளது அழகு முகத்தில் முத்துக்களைப் பதித்தது போல் இருந்ததை, அந்த நிலையிலும் நளன் ரசித்தான். அந்த அழகு அவனை மயக்க அவளை அணைக்க முயன்றான். அவள் விலகிச் சென்றாள். தனது சந்தேகத்தை அவனிடம் எப்படி கேட்பது? தமயந்தி அமைதியாக இருந்தாள். அந்த அமைதி நளனை மேலும் சங்கடத்துக் குள்ளாக்கியது. நம்மிடம் ஏதோ தப்பு கண்டுபிடித்திருக்கிறாள். அதனால் தான் இந்த மாற்றம் என்பதைப் புரிந்து கொண்ட அவனும் ஏதும் பேசாமல் படீரென தரையில் விழுந்தான். தன் அன்பு மனைவியின் கால்களை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டான்.
அவளுக்கு பரமதிருப்தி.
கணவன் காலடியில் கிடக்கிறான் என்றால் எந்தப் பெண்ணுக்குத் தான் இன்பம் பிறக்காது! இவன் தனக்காக எதையும் செய்வான் என்ற எண்ணம் மேலிட அவள் அவனை எழுப்பினாள். அப்படியே அணைத்துக் கொண்டாள். கோபம் பறந்தது. ஊடல் தீர்ந்தது. அவர்களது பயணமும் தொடர்ந்தது. கங்கைக்கரை வழியே அவர்கள் தங்கள் ஊரை அடைந்தனர். வான் முட்ட உயர்ந்து நின்ற மாளிகைகள் அங்கே இருந்தன. இது தான் நமது ஊர் என்று தமயந்தியிடம் மகிழ்ச்சியுடன் சொன்னான் நளன். ஊருக்குள் சென்ற புதுமணத்தம்பதியரை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வரவேற்பு வளைவுகளின் அழகில் சொக்கிப்போனாள் தமயந்தி.
மக்களுக்கு  இருவருமாக இணைந்து பரிசுகளை வாரி வழங்கினர். மக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர். நளமகாராஜன் தமயந்தியுடன் நிடதநாடு வந்து சேர்ந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டது. அதுவரை அவர்களுக்குள் எந்த கருத்து பேதமும் வந்ததில்லை. இன்பமாய் வாழ்வைக் கழித்தனர். பிள்ளைச்செல்வங்கள் இருவர் பிறந்தனர். தங்கள் இன்ப வாழ்வின் சின்னங் களான அந்த புத்திரர்களைப் பார்த்து பார்த்து தமயந்தி மகிழ்ந்திருப்பாள். தாயுடனும், தந்தையுடனும் விளையாடி மகிழ்வதில் இளவரசர்களுக்கு தனி விருப்பம்.
ராஜாவாயினும், ராணியாயினும்,  பணமிருந்தாலும், இல்லாவிட்டாலும்…  யாராயிருந்தால் என்ன! துன்பம் என்னும் கொடிய பேய் எல்லோர் வாழ்விலும் புகுந்து விடுகிறது. நள தமயந்தி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன! துன்பம் வந்தால் தெய்வத்திடம் நாம் முறையிடலாம். ஆனால், தெய்வமே துன்பத்தைக் கொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்வது! ஆம்..தெய்வப்பிறவிகளான இந்திராதி தேவர்கள், தமயந்தி தங்களுக்கு கிடைக்காமல் போனதால் ஆத்திரம் கொண்டு, நளனுக்கு துன்பம் இழைக்க சதித்திட்டம் தீட்டினர்.
ஏற்கனவே, சனீஸ்வரர்  தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தபோது, தாமதமாக வந்ததால், அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. மேலும், தமயந்தி தேவர்களைப் புறக்கணித்து, நளனுக்கு மாலையிட்டு விட்டதால், அவரது ஆத்திரம் அதிகரித்தது. தேவர்களை விட உயர்ந்தவன் ஒரு மானிடனா? என்று அவருக்கு பெரும் கோபம். இதனால், நளன் மீது வெறுப்பு அதிகரித்து அவனை ஒரு வழிசெய்ய நேரம்பார்த்துக் காத்திருந்தார். நள தமயந்தி 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர்.
தங்கள் தேசத்து மக்களை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தனர். மக்களும் மன்னன் சொல் கேட்டு நடந்து கொண்டனர். மன்னனும், மக்களும் கருத்தொருமித்து வாழும் நாட்டில் பிரச்னையை உண்டுபண்ண சனீஸ்வரரால்  இயலாது. அவரும் 12 ஆண்டுகள் பொறுத்துப் பார்த்து, நளன் எங்காவது இடறமாட்டானா என்று கண்ணில் நல்லெண்ணெயை ஊற்றிக்கொண்டு காத்திருந்தார்.
உஹூம்…முடியவே முடியவில்லை.  ஆனால், மனிதன் என்பவன் ஒரு பலவீனன் ஆயிற்றே! நளனுக்கு அன்றைய காலைப்பொழுது மோசமாக விடிந்தது. அந்தப்பொழுது சனீஸ்வரருக்கு இனிய பொழுதாகி விட்டது. அன்று காலை நளமகாராஜன் தன் பூஜையறைக்கு கிளம்பினான். பூஜையறைக்குள் நுழையும் முன்பு கால்களை நன்றாக அலம்ப வேண்டும். பலர் இப்போது அதைச் செய்வதே இல்லை.
இப்போது கோயிலுக்கு போகிறவர்கள் கூட அதைச் செய்வது இல்லை. திருப்பதி போன்ற ஒன்றிரண்டு கோயில்களில் உள்ளே நுழையும்போதே நம் குதிகாலளவு தண்ணீர் படும்படி ஓட விட்டிருக்கிறார்கள். மற்ற இடங்களில் தெப்பக்குளத்தில் போய் கால் கழுவக்கூட வழியின்றி வற்றிப்போய்விட்டது. இதனால், சனீஸ்வரன் அநேகர் வீடுகளில் நிரந்தர வாசம் செய்து வருகிறார். ஆம்…கடவுள் தந்த நீர்நிலைகளை அழித்ததால், சனீஸ்வரனின் பிடிக்குள் நம்மை நிரந்தரமாகச் சிக்கச் செய்து விட்டார்!
நளனுக்கும் தண்ணீரால் தான் கண்டம் வந்தது. அவன் கால்களைக் கழுவினான். ஆனால், சரியாக கழுவவில்லை. சிலர் காலின் முன்பகுதியில் மட்டும் தண்ணீர் ஊற்றிவிட்டு செல்வார்கள். இது தவறான நடைமுறை. கால் கழுவும் போது குதிகால் நனையுமளவு கழுவ வேண்டும். நளனும் இதே தவறைச் செய்தான். ஏதோ நினைவில் முன்கால்களைக் கழுவியவன் குதிகாலைக் கழுவவில்லை.
இந்த சிறு தவறை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சனீஸ்வரர், நளனின் கால் வழியாக அவனது உடலில் புகுந்து பிடித்துக் கொண்டார். சனி என்றால் யாரும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. யார் ஒருவன் கடமை  தவறுகிறானோ அவனை மட்டுமே அவர் பிடிப்பார். சின்னத்தவறைக் கூட அவர் சகித்துக் கொள்ளமாட்டார். அந்த வகையில் 12 வருடம் காத்திருந்து நளனைப் பிடித்தார் சனீஸ்வர பகவான்.
ஒருவன் அன்றாடம் நாராயணா, சிவாயநம, சரவணபவ என்று தன் இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜபித்து வந்தால் அவனைத்துன்பங்கள் அணுகாது என்பது ஐதீகம். ஆனால், என்றாவது ஒருநாள் மறந்துபோனால் சனீஸ்வரர் அந்த நாளை தனக்கு இனியநாளாக்கிக் கொள்வார். அந்த நபரைப் போய் பிடித்துக்கொள்வார். ஒரு சிலர் நாத்திகம் பேசுகிறார்களே!  உலகத்திலேயே பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்களே! துன்பம் என்பதே அவர்களுக்கு இல்லையா என்று கேட்கலாம்.
நாத்திகவாதி தான் எந்நேரமும் இறைவனின் நினைப்பில் இருக்கிறான். சிவன் இல்லை, நாராயணன் இல்லை, முருகன் இல்லை, பிள்ளையார் இல்லை என்று அநேகமாக தினமும் எல்லாக்கடவுள்களின் பெயரையும் பலமுறை உச்சரித்து விடுகிறான். இல்லை என்று சொல்பவனும் தன் பெயரை உச்சரித்ததால் பலனைக் கொடுத்து விடுவார் பகவான். அதனால் தானோ என்னவோ. நாத்திகர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை போலும்! சனீஸ்வரர் ஒருவனை அண்டிவிட்டால் போதும். கணவன், மனைவியைப் பிரிப்பார், சகோதரர்களைப் பிரிப்பார்…இப்படி பலவகை பிரிவினைகளை உருவாக்குவார்.
நளதமயந்தி அவர்களாகப் பிரியமாட்டார்கள் என்று! ஏனெனில், ஒருவர் மேல் ஒருவர் அவர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். நளன் பிரிந்தால் தமயந்தி இறந்து போவாள். தமயந்தி பிரிந்தால் நளனின் உடலில் உடல் இருக்காது. இதனால் தான் ஏழரைச்சனி காலத்தில் உயிர்போகாது என்பார்கள். உயிரே போகுமளவு துன்பம் வருமே தவிர உயிரை அவர் அந்த சமயத்தில் பறிப்பதில்லை. தம்பதியரை பிரிக்கமுடியாது என்பதால், நளனுடைய அண்ணன் புட்கரன் என்பவன் மூலமாக துன்பம் கொடுக்க திட்டம்வகுத்தார் சனீஸ்வரர்.
இதற்காக அவனது நட்பையும் நாடிப்பெற்றார். புட்கரன் நெய்தல் நாட்டின் அரசனாக இருந்தான். அவனுக்கு ஆசை காட்டினார் சனீஸ்வரர்.புட்கரா! நீ உன் நாடு மட்டும் உனக்குப் போதுமென நினைக்கிறாய். உன்னிடம் அக்கறை கொண்ட நானோ, செல்வச்செழிப்பு மிக்க நிடதநாடும் உன்னிடம் இருந்தால் நல்லது என்று! அந்த நாட்டின் வளமனைத்தையும் எண்ணிப்பார். உன் நாட்டில் ஏற்கனவே உள்ள வளத்தையும் கணக்கிட்டுக் கொள். இரண்டையும் சேர்த்துக் கூட்டு.
ஆஹா…பொருள் வளத்தில் உன்னை மிஞ்சும் மன்னர்கள் யாரும் உலகில் இருக்கமாட்டார்கள். எனவே, நிடதநாட்டை உன்னுடன் சேர்த்துக் கொள்ளேன், என்றார்.புட்கரன் சிரித்தார். சனீஸ்வரரே! நிடதநாட்டைக் கைப்பற்றுவதென்பது அவ்வளவு சுலபமா? என் சகோதரன் நளனின் படை வலிமை வாய்ந்தது. அவனை வெற்றிகொள்வது அத்தனை சுலபமல்ல.  அவனிடம் வம்பிழுத்து இருப்பதையும் இழந்து விடக்கூடாதே! என்றான் சற்று அச்சத்துடன்.  புட்கரா! அப்படியெல்லாம் நான்  விடுவேனா? கத்தியின்றி ரத்தமின்றி அவனதுதேசம் உனதாக ஒரு வழி சொல்கிறேன். சரியா? என்ற சனீஸ்வரரிடம், அது என்ன? என்று ஆவலுடன் கேட்டான் புட்கரன்.
புட்கரா! சூதாட்டம் மன்னர்களுக்கே உரித்தான இனிய பொழுதுபோக்கு. ஆம்…யாராவது ஒருவருக்கு… ஏனெனில், இதில் ஒருவர் தன் பொருளை இழந்து விடுவாரே! நளனைப் பற்றுவதற்கு நான் மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது, பற்றி விட்டேன். இனி அவனை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பேன். அவனுடைய புத்தியை கெடுக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நளனுடன் சூதாடு. வெற்றி உன் பக்கமாக இருக்கும்படி செய்து விடுகிறேன், என்றார் சனீஸ்வரர். புட்கரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. சூதாட்டத்தில் ஒருவேளை தனக்கும் தோல்வி வரக்கூடும் என்ற எண்ணமிருந்தாலும், சனீஸ்வரரே உறுதியளித்து விட்டதால் வெற்றிபெற்று, நாட்டை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டுவிட்டான்.
சனீஸ்வரரிடம் அனுமதி பெற்று, நெய்தல் நாட்டில் இருந்து தனது காளை வாகனத்தில் ஏறி புட்கரன் நிடதநாடு நோக்கிச் சென்றான். திடீரென அண்ணன் முன்னறிவிப்பின்றி வந்தது கண்ட நளன், அண்ணா! திடீரென வந்துள்ளாயே! ஏனோ! என்று கேட்டான். நளனே! நான் உன்னோடு சூதாடுவதற்காகவே இங்கு வந்துள்ளேன். உனக்கு அதில் ஆர்வமில்லாமலா இருக்கும்! மன்னர்களுக்கே உரித்தான விளையாட்டு தானே இது! கொஞ்சம்புத்தி வேண்டும்.
புத்தியில்லாதவர்களுக்கு மட்டும் இது ஒத்துப்போகாது. நீ தான் மகாபுத்திசாலியாயிற்றே! என்று சற்று பொடி வைத்துப் பேசினான். ஒருவேளை நளன் மறுத்தால், அவனைப் புத்தி கெட்டவன் என்று சொல்லலாமே என்பது புட்கரன் போட்ட கணக்கு. அவனது கணக்கு தப்பவும் இல்லை. சரி அண்ணா! அதற்கென்ன! விளையாடி விட்டால் போகிறது, என்று ஒப்புதல் அளித்து விட்டான்.
இதைக் கேட்ட அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ராஜாவுக்கு ஏன் இப்படி புத்தி போயிற்று? இந்த புட்கரன் கொடிய எண்ணத்துடன் வந்துள்ளான் என்பதை நளமகாராஜா புரிந்து கொள்ளவில்லையே! ஐயோ! இந்த தேசத்தைக் காப்பாற்றுவது நம் கடமை.
மன்னன் தவறு செய்யும் போது, அமைச்சர்கள் இடித்துரைக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நாம் மன்னனுக்கு புத்தி சொல்வோம், என்று முதலமைச்சர் மற்ற மந்திரிகளிடம் கூறினார்.அவர்கள் நளனை அணுகினர்.மகாராஜா! தாங்கள் அறியாதது ஏதுமில்லை. இருப்பினும், தாங்கள் புட்கரனுடன் சூதாடுவது கொஞ்சமும் சரியில்லாதது.
இந்த உலகத்தில் ஐந்து செயல்களை மிகமிகக் கொடிதானது என்றும், உயிரையும் மானத்தையும் அழித்து விடக்கூடியது என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அடுத்தவன் மனைவியை விரும்புவது, பொய் சொல்வது, மது அருந்துவது, ஒருவன் இன்னொருவனுக்கு செய்கிற உதவியைக் கெடுப்பது..குறிப்பாக, ஒருவனுக்கு பணஉதவி செய்வதைத் தடுப்பது, சூதாடுவது ஆகியவையே அந்த பஞ்சமா பாதகச் செயல்கள்.
நீங்கள் சூதாட ஒப்புதல் அளித்தது எங்களை மிரளச் செய்திருக்கிறது. ஏதாவது, காரணம் சொல்லி அதை நிறுத்தி விடுங்கள். வேண்டாம் மன்னவரே! உங்களையும், தங்கள் அன்புத்துணைவியாரையும், மக்களையும் காக்க எங்கள் வார்த்தைக்கு மதிப்பளியுங்கள், என்றனர். ஒருவன் நல்லவனாக இருந்தாலும்,  அவனுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால், யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான்.
அது மட்டுமல்ல! புத்தி சொன்னவர்களுக்கும் தொல்லை செய்யத் தொடங்கி விடுவான். நளன் புத்தியைக் கெடுப்பது சனீஸ்வரன் இல்லையா! அவனுக்கு இந்த புத்திமதி ஏறுமா? அமைச்சர்களின் சொல்லை அவன் கேட்க மறுத்து விட்டான். இதைத்தான் இவன் தலையில் சனி ஏறி நின்று நடனமாடுகிறான் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.
அமைச்சர்கள் அவனது அமைதியைக் கண்டு பயந்து அவனுக்கு இன்னொரு முறை அறிவுரை சொன்னார்கள்.மகாராஜா! சூதாட்டம் ஒரு மனிதனின் குணத்தையும் உருவத்தையும் மாற்றி விடும். இதில் தங்கள் சொத்து சுகத்தை இழந்தவர்கள் வறுமையால் தோல் சுருங்கி, அடையாளமே தெரியாமல் போய்விடுவார்கள்.
இது ஒருவனின் குலப்பெருமையை அழித்து விடும். பணம் போய்விட்டால் தர்மசிந்தனை குலைந்து விடும். சமுதாயத்தில், ஏழை, எளியவர்கள், வாழத்தகுதியற்றவர்கள் கூட மானம் போகிற மாதிரி பேசுவார்கள். இதுவரை உறவுக்காரர்களாக இருப்பவர்கள், நம் செல்வமின்மை கண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
அவர்களிடையே உள்ள நல்லுறவு அழிந்து விடும். அதுமட்டுமல்ல அரசே! பகடைக்காயை கையில் எடுப்பவர்களும், விலைமாதர்களிடம் சுகம் தேடி அலைபவர்களும் வஞ்சக எண்ணங்களுக்கு இடம் கொடுப்பார்கள் என்று நம் முன்னோர் எழுதி வைத்துள்ளனர். நாங்கள் சொல்வதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், என்றனர்.
நளனுக்கோ இவர்கள் சொன்னதைக் கேட்டு ஆத்திரம் அதிகமானது.  அமைச்சர்களே! உங்கள் புத்திமதி எனக்குத் தேவையில்லை. நான் புட்கரனுடன் சூதாடுவதாக ஒப்புதல் அளித்துவிட்டேன். இப்போது வேண்டாம் என்றால் மட்டும், என் மானம் மரியாதை போகாதா? நடக்கப் போவது நல்லதோ, கெட்டதோ அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் யாரும் எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம், செல்லுங்கள் இங்கிருந்து! என்று கோபமாகக் கத்தினான்.விதியை மாற்ற யாரால் இயலும் என்ற அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். உண்மை தான்! ஒரு சமயம் அந்த பெருமாளையே விதி விரட்டியடித்ததாம். அது என்ன?
பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரதுமுதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். புதுமணத்தம்பதிகளைசிவபார்வதி கைலாயத்துக்கு விருந்துக்கு அழைத்தனர். பெருமாள் புறப்பட்டு விட்டார். பூமாதேவி வர மறுத்துவிட்டாள்.
அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் அசலா (இருந்த இடத்தை விட்டு நகராதவள்) என்பதை தாங்கள் அறிவீர்களா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். மக்கள் என்னாவார்கள்? என் பிள்ளைகளை நானே அழிப்பேனா? மேலும், நீங்கள் ஓரிடத்தில் இருக்கமாட்டீர்கள். திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள், என்றாள்.
பெருமாளுக்கு வருத்தம். கட்டிய மனைவியோடு, வெளியில் போய்க் கூட வரமுடிய வில்லையே என்று. மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ஆத்துக்காரி வரலையா? என்று கேட்டார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார். அவளோ ஓரிடத்தில் இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள்.
பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், அவள் எங்காவது போயிருக்கிறாள் என்றே பதில் கிடைக்கும். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடி ஓடி, அவளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.
பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான், என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார்.
அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார். பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், சுவாமி! எனக்கு நாவில் எச்சில் ஊறுகிறது. இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன், என நுடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்று விட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார்.
பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், பகவானாக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். நளமகாராஜாவுக்கும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றல்லவா விதி இருக்கிறது! அதை மாற்ற யாரால் இயலும்? புட்கரனும் அவனும் ஓரிடத்தில் அமர்ந்தனர். தம்பி நளனே! உன் தேசத்தில் மாடுகளைக் கூட உழவர்கள் கூட கரும்புகள் கொண்டு மேய்க்கின்றனர். உன் தேசத்து கடலில் பிரகாசமான முத்துக்கள் நிரம்பக் கிடைக்கின்றன. இத்தகைய செல்வவளம் மிக்க நீ, மிகப்பெரிய பொருள் ஒன்றைத் தான் பந்தயப் பொருளாக வைப்பாய் என நினைக்கிறேன். பொருளை முடிவு செய்து விட்டு, பந்தயத்தைத் துவக்குவோம், என்றான்.
அண்ணா! ஒவ்வொரு பொருளாக வைப்போம். வெற்றி பெற்றவர் எடுத்துக் கொள்வோம், என்ற நளன், முதலில் தன் கழுத்தில் கிடந்த தங்க மணிமாலையை பந்தயத்தில் வைத்தான். புட்கரன் தான் ஏறி வந்த எருதை பந்தயப்பொருளாக வைத்தான். அந்த எருதை யாராலும் அடக்க முடியாது. எதிர்ப்போரைக் கொன்று விடும். அப்படிப்பட்ட பலமிக்க எருது தனக்கு கிடைத்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அது உதவுமென நளன்நம்பினான்.
பகடைக்காய் உருள ஆரம்பித்தது. முதல் உருளலிலேயே சனீஸ்வரன் தன் வேலையைக் காட்டிவிட்டார். காய்கள் புட்கரனின் சொல்லைக் கேட்டன. அவன் முத்துமாலையை வென்றான்.நளனே! நீ இழந்தது மிகச்சாதாரணமான பொருள். உம்…பெரிய பொருள் ஒன்றை வை. நானும் அதையே வைக்கிறேன், என்றான் புட்கரன். நளன் இரண்டு லட்சம் பொற்காசுகளை பந்தயப்பொருளாக வைத்தான். புட்கரனும் அதே அளவு ஒரு பையில் கட்டி வைத்தான். நளனும் புட்கரனும் அடுத்தடுத்து காயை உருட்டினர். நான்கு லட்சம் பொன்னும் போய்விட்டது புட்கரனுக்கு. நளனுக்கு கோபம் தலைக்கேறியது. கெட்டதைச் செய்யும் போது மனிதனுக்கு நிதானம் தவறுவது இயற்கை.
உணர்ச்சிப்பிழம்பாக இருந்த நளன், தான் விட்ட நான்கு லட்சம் பொன்னையும், மணிமாலையையும் திரும்பப் பெறும் வகையில், புட்கரனே! நான் கோடி தங்கக்காசுகளை பந்தயப்பொருளாக வைக்கிறேன். நீ தயாரா? என்றான்  ஆவேசமாக. புட்கரன் சற்று கேலியான தொனியுடன், நளனே! இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன். நீ ஏதோ குழந்தை விளையாட்டு போல முத்துமாலை, இரண்டு லட்சம் என பந்தயப்பொருளை வைத்தாய். நானும் ஒரு கோடி வைக்கிறேன். பகடை உன் கைகளுக்கு பணிந்து நடந்தால், இப்போதே இரண்டு கோடி பொற்காசுகளுக்கு அதிபதியாகி விடுவாய். ஏற்கனவே நீ செல்வன், செல்வர்களைத் தேடித்தான் செல்வம் வரும். நானும் கோடி பொற்காசுகள் வைக்கத் தயார், என்றவன், பொன்மூடைகளை அடுக்கும்படி ஏவலர்களுக்கு கட்டளையிட்டான். பகடைகள் உருண்டன.
விதி தான் நளனைப் போட்டுப் பார்க்க வேண்டுமென முடிவு செய்து விட்டதே! அதிலும் சனீஸ்வரர் ரூபத்தில் அல்லவா வந்துள்ளது! இந்த சனீஸ்வரர் போல் உத்தமமான கிரகம் உலகில் இல்லை. அதனால் தான் அதற்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து,கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். எல்லா கிரகங்களும் நவக்கிரக மண்டபத்தில் இருந்தாலும், சனீஸ்வரருக்கு மட்டுமே கோயில்களில் தனி சன்னதி இருக்கிறது.குரு இருக்கிறாரே  என சிலர் கேட்கலாம். அவர் குரு அல்ல.
சனகாதி முனிவர்களுக்கும், பார்வதிதேவிக்கும் உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தியையே குரு என்று சொல்லும் வழக்கம் வந்துள்ளது. அவர் கிரகம் அல்ல. தேவர்களின் குருவான பிரகஸ்பதி. அவர் சிவாம்சம். உயிர்கள் பிறக்கின்றன. புழுவாக, பூச்சியாக, மிருகமாக, பறவையாக… இப்படி பல வகை. இவற்றால் பிறவியில் இருந்து உய்வடைய முடியாது. இவை இறந்து போனால் மீண்டும் ஏதோ ஒரு பிறப்பெடுக்கும்.
மனிதப்பிறவி ஒன்றே மகத்தான பிறவி, இதற்கு மட்டுமே ஆறறிவு இருக்கிறது. இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, இறைவனை மீண்டும் அடைய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இறைவனை அடைய வேண்டுமானால் தவமிருக்க வேண்டும். தவம் என்றால் மூச்சடக்கி, பேச்சடக்கி, அக்னியில் நின்று முனிவர்கள் செய்த தவம் போன்றதல்ல இது! யார் ஒருவன் நல்லதைச் செய்கிறானோ அவனே தபஸ்வி, என்பார் சுவாமி விவேகானந்தர்.
பல மகான்களும்இதை ஒப்புக்கொள்கிறார்கள்.பூமியில் பிறந்தவன் நல்லதையே சிந்திக்க வேண்டும், நல்லதையே நினைக்க வேண்டும். ஒரு புட்கரன் வந்தான். நளனை உசுப்பி விட்டான். சூதாட அழைத்தான். நளனுக்கு எங்கே புத்தி போயிற்று? ஆண்டவன் கொடுத்த புத்தியை அவன் பயன்படுத்தியிருக்க வேண்டாமா? உனக்கு நாடு வேண்டுமானால் என்னோடு போரிடு. நீ வீரனாக இருந்தால் என்னை வெற்றி கொள். நாட்டை எடுத்துக்கொள்! என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
இதுதானே மன்னனுக்குரிய தர்மம்! ஆனால், புத்தி கெட்ட இவனும் சூதாட ஒப்புக் கொண்டான். இப்படி பகுத்தறிவைப் பயன்படுத்தாத எந்த ஜீவனையும் இறைவன் தண்டித்தே தீருவான்.
அதற்காக, அவன் தன் சார்பில் நியமித்த பிரதிநிதி தான் சனீஸ்வரன். இரண்டு லட்சம் பொன்னையும் தோற்றான் நளன். சூதாட்டம் வெறிபிடித்த ஒரு விளையாட்டு. நகைகள், இரண்டு லட்சத்தை இழந்தாயிற்று! இதோடு எழுந்து போவோம் என்று போயிருக்க வேண்டும்! அவன் போகவில்லை. போகவும் முடியாது, ஏனெனில், சூதாட்டத்தில் ஜெயித்தவன், தோற்றவனை ஏளனமாகப் பார்ப்பான். கேவலமாகப் பேசுவான். இந்த வெறியுடன் தோற்றவன் தன்னிடமுள்ள மற்ற பொருட்களையும் பணயம் வைப்பான். மீண்டும் தோற்று ஒன்றுமில்லாமல் தெருவுக்கு வருவான்.
நளமகாராஜா புத்தி பேதலித்து கோடி பொன்னை பணயமாக வைத்தான். அவனது கஜானா இருப்பே அவ்வளவு தான்! பகடையின் உருளலில் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் இழந்தான். ஒரு நிமிடத்துக்கு முன்னால், அவன் பேரரசன். இப்போது பிச்சைக்காரன். இந்த லட்சுமி இருக்கிறாளே! இவள் ஓரிடத்தில் நிலைக்கமாட்டாள். அவளுக்கு அசலா என்று ஒரு பெயருண்டு. அதாவது ஓடிக்கொண்டே இருப்பவள் என்று பொருள்.
நேற்று வரை நளனின் கஜானாவில் தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு கிடந்தவள் இன்று புட்கரன் வீட்டுக்குப் போய்விட்டாள். நல்லவன் ஒருவன் கெட்டுப்போகிறான் என்றால், லட்சுமி தாயாரால் தாங்க முடியாது. அவள் கெட்டவன் வீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியானால் தானே நல்லவன் நல்லவனாக இருப்பான்! இவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான், இவன் வீட்டில் செல்வம் கொட்டிக்கிடக்கிறதே என்று நாமே கூட பல சமயங்களில் சில பணக்காரர்களைப் பற்றி அங்கலாய்க்கிறோம்.
இப்படிப்பட்டவர்களை மேலும் அழிக்கவும், அவர்கள் மனதில் நிம்மதியில்லாமல் செய்யவுமே லட்சுமி தாய் தன் ஓட்டப்பந்தயத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள் என்பது தான் நிஜம். எனவே, பணக்காரனாக இல்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை.
இவ்வுலகில் பொருளில்லாதவர் அவ்வுலகில் அருளைப் பெறுமளவிலான நிலைமை நிச்சயம் ஏற்படும்.
மனிதனுக்கு புத்தி கெட்டு விட்டால். அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். புட்கரன் நளனுக்கு ஆசை காட்டினான். தம்பி! பொற்காசுகள் போனால் என்ன! உன்னிடம் தேர்ப்படை, குதிரைப்படை எல்லாம் உள்ளதே! தேர் என்றால் சாதாரணத் தேரா அது! பத்துலட்சம் நவரத்தினங்களால் அவற்றை அலங்கரித்துள்ளாயாமே! அந்த தேர்கள்…இதோ, நீ இழந்த பணத்துக்கு சமம்.
அவற்றை வைத்து ஆடு! ஜெயித்தால், இங்கே இருக்கும் அத்தனையையும்…என் பொருட்களையும் சேர்த்து கூட எடுத்துக் கொள், என்றான்.சனீஸ்வரனே துணையிருக்கும் போது அவன் என்ன வேண்டுமானாலும் பேசத்தானே செய்வான்… உம்…அவனுக்கு பொங்குசனி காலம்! பேசுகிறான்… இதையறியாத நளன், அந்தக் கெட்டவன் சொன்னதை  அப்படியே கேட்டான்.
பகடையை மிக மிக மிக கவனமாகத்தான் உருட்டினான். அதுவும் சரியாகத்தான் உருண்டது…இவன் நான்கு என்ற எண்ணைச் சொல்லி உருட்ட, ஒரு பக்க பகடையில் இரண்டு புள்ளிகள்…அடுத்த கட்டையில் இரண்டு விழுந்து படீரென இன்னொரு சுற்று சுற்றியது…மூன்றாகிப் போய் விட்டது. அவ்வளவு தான்! அவ்வளவையும் தன் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டான் புட்கரன்.
அடுத்து யானைப்படை பறிபோயிற்று. அடுத்து காலாட்படையை தோற்றான். வக்கிரபுத்தி படைத்த புட்கரன், நளனே! இப்போது ஒன்றைக் கேட்கிறேன். உன் அரண்மனையில் அழகான பெண்கள் சேடிகளாக (பணிப்பெண்கள்) இருக்கின்றனர். அவர்களை வைத்து ஆடேன். நீ வென்று விட்டால், அவர்களுக்கு நிகராக தோற்ற அனைத்தையும் தந்து விடுகிறேன், என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top