7 சிறந்த பழக்கங்கள்:
அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்தபோது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்!
அதையே &’The seven habits of highly effective people&’ by Stephen R.Covey என்ற புத்தகமாக வடிவமைத்தார். அவர் கண்டறிந்த ஏழு பழக்கங்களும், எல்லோர்க்கும் மிக மிக எளிதானவை; புரிந்து கொள்ளக்கூடியவை; எல்லோரும், எல்லா வயதினரும் பின்பற்றக்கூடியவை!
1. உன் செயலுக்கு, நீயே முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்:
பிறரது எண்ணம், சொல், உணர்ச்சி, செயல் போன்றவற்றால் நீ தூண்டப்பட்டால், உடனடியாக, உணர்ச்சி வசப்பட்டு, எதிர்வினையைக் காட்டி அவதிப்படாதீர். சற்று சிந்தித்து, சுய பொறுப்புடன் செயல்பட்டால், நல்ல விளைவுகள் உண்டாகும்.
2. இலக்கை மனதில் இருத்தி, பயணத்தைத் தொடங்கு:
அடைய வேண்டிய குறிக்கோளை மனதில் பதித்து,’கருமமே கண்ணாயினாராய்’ செயல்பட்டால், பயணம் வெற்றிப் பாதையில், உறுதியாய்ச் செல்லும்.
3. முதன்மையானவற்றை முந்திச் செய்:
செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, முக்கியமானவற்றை அவசரமின்றி, முனைப்புடன் முதலில் செய்தால், கால நிர்வாகம் கையில் இருக்கும், வெற்றி வீட்டு வாயிலில் நிற்கும்!
4. நீ மட்டுமின்றி, பிறரும் வெற்றி பெற நினை:
உங்களது நலனோடு, பிறர் நலனையும் மனதில் இருத்தி, வெற்றி-தோல்வி மனப்பான்மை அற்ற பரந்த மனத்துடன், பிறருடன் பேச்சுவார்த்தை அல்லது பணியில் ஈடுபடும்போது, மனித உறவுகள் மேம்படவும், வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
5. முதலில் புரிந்துகொள்; பிறகு புரிந்து கொள்ளப்பட நாட்டம் கொள்:
முதலில் பிறர் சொல்வதை கவனமாகக் கேட்டு, பின்பு அவரிடம் உரையாடினால், செய்திப் பரிமாற்றம் நல்ல முறையில் நடந்து, இருவரும் பயன் பெறலாம்; உறவும் மேம்படும்.
6. ஒருங்கிணைந்த, கூட்டு சக்தியாய் செயல்படு:
பலர் இணையும்போது, வெறும் சேர்க்கையாக இன்றி, கூட்டு சக்தியாக, குழுமமாக செயல்பட்டால், பல மடங்கு பயன்களை அடையலாம்.
7. உன்னை தினமும் புதுப்பித்துக்கொள்:
தினமும் உடல், உள்ளம், உணர்வு, ஆன்மிக அடிப்படையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நாள் முழுவதும் சோர்வின்றி, உற்சாகத்தோடும், சக்தியோடும் செயலாற்ற முடியும்.
முதல் மூன்று பழக்கங்கள் (1,2,3) தனி மனித வெற்றிக்கானவை. அடுத்த மூன்று பழக்கங்கள் (4,5,6) ஒருவர் பொது வாழ்வில் வெற்றி பெறத் தேவையானவை. கடைசி பழக்கம் (7) அனைத்தையும் உள்ளடக்கி, இணைத்துச் செல்வதாகும்.
வாழ்வில் உயர்ச்சி அடைய, மேற்கூறிய ஏழு பழக்கங்களையும் கடைப்பிடிப்பது எளிதுதானே!