சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் – என்பது ஏன் தெரியுமா?
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும். ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி ..
ஸ்ரீகிருஷ்ணனிடம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும். அவை என்னென்ன? சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும். பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் ஆபரணங்களாகத் தெரியும். எதிரிகளுக்கு இதெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும்.
சக்கரம், வில், வாள், கதை இதெல்லாம் ஆயுதங்கள் என்று சொன்னால் சரி ஒப்புக் கொள்ளலாம். சங்கு இருக்கிறதே அது எப்படி ஆயுதமாகும்? இப்படித்தான் துரியோதனன் நினைத்தான் ஏமாந்து போனான்.. கண்ணபிரானுடைய உதவி வேண்டும் என்பதற்காக அர்ஜுனனும் துவாரகைக்குப் போனான்.
துரியோதனனும் துவாரகைக்குப் போனான். அவர்களிடம், உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார். அவர்கள் இருவரும் தனித்தனியாக, வர இருக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொல்கிறார்? தருமனுக்கு உதவி செய்வதாக முன்பே நான் வாக்குக் கொடுத்து விட்டேன் என்கிறார். துரியோதனன் பார்க்கிறான். சரி அப்படியானால் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து போர் செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.
ஸ்ரீகிருஷ்ணர் யோசித்தார். சரி என்று ஒப்புக் கொண்டார். இதை கேட்டதும் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் என்ன கேட்கிறான் தெரியுமா? நீங்கள் எனக்கு சாரதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு சரி என்று மகிழ்ச்சியுடன் ஸ்ரீகிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். ஏனென்றால், தேரை ஓட்டும் சாரதிக்குத்தான் யஜமானனுடைய வெற்றியை அறிவிப்பதற்காக அடிக்கடி சங்கு ஊதும் உரிமை உண்டு. ஸ்ரீகிருஷ்ணனுடைய பாஞ்சஜன்யம் என்ற சங்குக்கு எவ்வளவு பலம் உண்டு என்ற விஷயம் துரியோதனனுக்கு முதலில் தெரியவில்லை.
மகாபாரதப் போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அவன் புரிந்து கொண்டான். போர் நடக்கும் சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் சங்கு ஊதிய போதெல்லாம் ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள் என்பதை துரியோதனன் நேரில் பார்த்தான்.
அதன் பிறகு தான் அவன் யோசித்தான். ஸ்ரீகிருஷ்ணனுடைய சங்கும் ஓர் ஆயுதமாகி விட்டதே! அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்ற பழமொழி உருவாயிற்று.