Home » பொது » உ.வே.சாமிநாதையர்!!!
உ.வே.சாமிநாதையர்!!!

உ.வே.சாமிநாதையர்!!!

உ. வே. சாமிநாதையர்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கல்வி பயின்று, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்கக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, “மகாமகோபாத்தியாய,” “டாக்டர்” என்னும் பட்டங்களைப் பெற்று வாழ்ந்தவர், உ.வே. சாமிநாதையர்.

நீருக்கும் நெருப்புக்கும் இரையாகவிருந்த தமிழைத் தடுத்துக் காப்பாற்றிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர். ஏட்டுச் சுவடிகளிலிருந்த இலக்கியத்தை அச்சு வாகனத்திலேற்றியவர். எட்டுத் தொகையில் ஐந்து நூல்களையும் பத்துப் பாட்டையும் காப்பிய நூல்களையும் மற்றும் எண்ணற்ற இலக்கிய நூல்களையும் செம்மையான முறையில் பதிப்பித்தவர். பல உரை நடை நூல்களைப் படைத்தவர்.

உ. வே. சாமிநாதையர்(உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா) ஒரு தமிழறிஞர். பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குச் சேவை புரிந்தவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொணரப்பட்டது.

உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார்.

ஆரம்பநாள் வாழ்க்கை

சாமிநாதையர் பெப்ரவரி 19, 1855 ல் தமிழ் நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தையாரான வேங்கட சுப்பையர் ஒர் இசை கலைஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் (பாட்டனார் பெயர்) என்பதாகும். இளமையில் ‘சாமா’ எனப் பெற்றோர்கள் அழைத்து வந்ததையே இவருடைய ஆசிரியர் ’சாமிநாதன் எனத் திருத்தி அமைத்தார். பின்னர் அதுவே அவருடைய பெயராயிற்று.

உ.வே.சா அவர்கள தனது ஆரம்பத் தமிழ்க் கல்வியையும், இசையையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார்.பின்னர் அவர் 17 வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதினத்தில் தமிழ் படிப்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற தமிழறிஞர் மகாவித்துவான் என அழைக்கப்பட்ட திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழை 5 வருடங்களாக பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரியொன்றில் ஆசிரியராகப் பணியிலிருந்த சாமிநாதையர் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

தந்தையிடம் தனிப்பயிற்சி

ஐயரவர்களுடைய தந்தை வேங்கட சுப்பையர் இலக்கண இலக்கிய பயிற்சியும், இசைப் புலமையும் பெற்றவர். தந்தையிடம் சிறந்த கல்விப்பயிற்சி பெற்ற சாமிநாதையர் அரியலூர்ச் சடகோப ஐயங்கார், செங்கணம் விருத்தாசல ரெட்டியார் போன்றோரிடம் பாடங் கேட்டார். பின்னர், பலரின் உதவியுடன் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைத் தம் பதினேழாம் வயதில் ஆசிரியராகப் பெற்றார்.

ஐயர் அவர்கள் பிள்ளையவர்களை நிழல் போலத் தொடர்ந்து நூல்கள் பலவற்றைப் பாடங் கேட்டார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பனையோலையில் எழுதப் பழகிய ஐயர், பிள்ளையவர்களின் பாடல்களைப் பனையேட்டில் எழுதலானார். இவரிடம் ஆறு ஆண்டுகள் கல்வி கற்ற இவர் கோபால கிருட்டிண பாரதியாரிடம் இசைப் பயிற்சியும் பெற்றார்.

கல்லூரி ஆசிரியர் 

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் காலமான பின் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரிடம் சில ஆண்டுகள் கல்வி கற்ற ஐயர் ஆசிரியராகவும் மாறினார். பிள்ளையவர்களின் முதல் மாணவராகிய தியாகராசச் செட்டியார், தாம் கும்பகோணம் கல்லூரியில் ஆற்றிய தமிழாசிரியர் வேலையை ஐயருக்கு வாங்கி அளித்தார். அதுவே இவருடைய தமிழ்ப் பணிக்கு முதற்படியாயிற்று.

பதிப்புப்பணி

கும்பகோணத்தில் முனிசீப்பாக இருந்த சேலம் இராமசாமி முதலியார் ஐயரிடம் சீவக சிந்தாமணியைப் பாடங் கேட்க விரும்பி ஒரு நாள் ஒரு பழைய புத்தகத்தை எடுத்து வந்தார். அதிலிருந்த பிழைகளை எடுத்துக் காட்டிய ஐயரிடம் முதலியார் அவர்கள், ‘தாங்களே இந்நூலை ஏன் திருத்தி அச்சிடக் கூடாது’ என வினவினார். அதன்படி ஐயரவர்கள் ஏடுகளைத் தேடத் தொடங்கினார். எல்லாச் சுவடிகளையும் ஒப்பிட்டு நோக்கி 1887 ஆம் ஆண்டில் சிந்தாமணியை வெளியிட்டார். இவருடைய முதல் பதிப்புப்பணியே இவருக்கு மிகுந்த புகழை அள்ளித் தந்தது.

1888 ஆம் ஆண்டு பத்துப்பாட்டு நூலையும், 1892 இல் சிலப்பதிகாரத்தையும், பிறகு புறநானூறையும், 1898 இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டார். இவருடைய நூல்கள் யாவும் பல ஓலைச்சுவடிப் பிரதிகளை முறையாக ஆராய்ந்து, திருத்தமான பாடங்கண்ட பிறகே வெளிவரலாயின. இதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பு ஆண்டு கணக்கிலாகும்.

ஏட்டுச்சுவடி மீட்பு

உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே இராமசாமி முதலியார் என்பவரை சந்தித்து நட்பு கொண்டார்.இவரே உ.வே.சாவின் பின்னை நாட்களில் ஏட்டுசுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சேற்றும் பணியே மேற்கொள்ள கால்கோலியவராவார்.

இவரால் உ.வே.சா விற்கு கையளிக்கப்பட்ட சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமை அக்காலகட்டத்தில் சமயகாழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களை பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அவருள் தூண்டியது. பலவிதமான சமண இலக்கியங்களை தேடி சேகரித்தார். 1887இல் சீவக சிந்தாமணியை பதிப்பித்து வெளியிட்டார்.அதனை அடுத்து பத்துப்பாட்டு வெளிவந்தது.

இவ்வாறு தொடக்கம் பெற்ற உ.வே.சாவின் தமிழ் இலக்கியங்களின் மூலப்பிரதிகளை தேடி சேமித்து,பகுத்து,பாடபேதம் கண்டு,தொகுத்து வழுநீக்கி அச்சிலேற்றும் பணியானது அவர் அவர் 84 வயதில் காலமாகும் வரை தொடர்ந்தது. இதற்காக அவர் பல ஊர்களில் ஏட்டுச் சுவடிகளை தேடியலைந்தார்.

முடிவில் கிடைத்தவற்றினை அச்சேற்றினார். செய்யுள், புராணங்கள், பக்தி, காப்பியம் என பல்வேறு வகைப்பட்ட ஒலைச்சுவடியாக இருந்த 90 ற்கு மேற்பட்ட இலக்கியங்கள் இவரால் புத்தக வடிவானது. இவர், சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை’’ போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

சென்னை அடைந்த பயன் 

நூல் வெளியீட்டுப் பணியில் முழுநேரமும் ஆர்வங் கொண்ட ஐயருக்கு சென்னையில் பணி கிடைத்ததும் அவருடைய வளர்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று. சென்னை மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பூண்டி அரங்கநாத முதலியார் சாமிநாதையரின் தமிழார்வத்தைக் கண்டு மெச்சி அவரைத் தம் கல்லூரியில் வேலைக்கு அமர்த்தினார்.

அதன் பின்னர் 1903 ஆம் ஆண்டில் ஐங்குறு நூலையும், 1904 இல் பதிற்றுப்பத்து நூலையும், 1918 ஆம் ஆண்டில் பரிபாடலையும் ஐயர் பதிப்பித்து வெளியிட்டார். 1919 ஆம் ஆண்டில் மாகாணக் கல்லூரி ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர்,  தில்லையில் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அமைத்த மீனாட்சிக் கல்லூரியின் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஐயர் பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்றார்.

அச்சு பதித்த நூல்களின் பட்டியல்

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்

பட்டங்களும் பதவிகளும்

1906 ஆம் ஆண்டில் மகா மகோபாத்யாயர் (பெரும் பேராசான்) என்னும் சிறப்புப் பெயருடன் ஆயிரம் வெண்பொற் காசுகளும் அளிக்கப் பெற்றார்.

‘பாரத தர்ம மகா மண்டலத்தார்’ அவையினர் இவருக்கு ‘திராவிட வித்யா பூஷணம்’ (திராவிடக் கலையழகன்) என்னும் பட்டத்தையும், காஞ்சி காமகோடிபீடத் தலைவர் அவர்கள், ‘தாட்சிணாத்ய கலாநிதி’ (தெற்கத்திய கலைச் செல்வன்) என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச் செய்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ஐயாயிரம் வெண்பொற் காசுகளை வழங்கி அவரை வாழ்த்தினர்.

ஐயவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய சென்னைப் பல்கலைகழகம் அவருக்கு ‘டாக்டர்’ (இலக்கியப் பேரறிஞர்0 பட்டத்தை வழங்கியது. இப்பட்டத்தைப் பெற்ற ஐயரவர்கள் தான் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்றும் இது தமிழுக்குக் கிடைத்த மதிப்பு என்றும் மிகுந்த அடக்கத்துடன் கூறினார்.

சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், காசி, திருவனந்தபுரம், ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த ஐயரவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார். இவருடையத் தமிழ்த் தொண்டினைப் பாராடாதார் இல்லை என்றே கூறலாம். மகாகவி பாரதியார் இவரை நேரில் கண்டு வாழ்த்திய பாடல்களே இதற்குப் பெருஞ்சான்றாகும்.

”முன்இவன்அப்  பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?”  

என்றும்,

”பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதிஅறிவாய் அவர் நெஞ்சின் வாழ்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே”

என்றும் உணர்ச்சிப் பெருக்கோடு இவரை வாழ்த்துவர் பாரதியார்.

தமிழுக்கும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி உ.வே.சா. அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் மார்ச் 21, 1932 அன்று அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது.

சுயசரிதம்

உ.வே.சாமிநாதையர் தனது சுயசரிதத்தை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார், இது 1950ல் தனிப் புத்தக வடிவம் பெற்றது.

இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நூலாக்கம்

கல்லூரியாசிரியர் வேலையைத் தவிர மற்றக் காலங்களில் எல்லாம் நூல் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த ஐயரின் நூல்கள் பலப்பல. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை மட்டுமின்றிப் பல நூல்களையும் அவர் வெளிக் கொணர்ந்தார்.

  • தக்கயாகப்பரணி,
  • பாசவதைப் பரணி உரை,
  • சங்கரலிங்க உலா,
  • திருவாரூர்க் கோவை,
  • பழலைக்கோவை,
  • கலைசைக்கோவை,
  • சீகாழிக்கோவை,
  • சிராமலைக்கோவை,
  • சிவக்கொழுந்து தேசிகப் பிரபந்தங்கள்,
  • மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிரபந்தத்திரட்டு,
  • திருமயிலைத் திரிபந்தாதி,
  • திரு இலஞ்சிமுருகன்உலா,
  • திருக்கழுக்குன்ற உலா,
  • திருப்பூவனநாதர் உலா,
  • திருக்கழுக்குன்றச்சிலேடை வெண்பா,
  • கடம்பர்கோவில் உலா,
  • மதுரைச் சொக்கநாதர் உலா,
  • தேவை உலா,
  • மான்விடு தூது,
  • தமிழ்விடு தூது,
  • அழகர்கிள்ளைவிடு தூது,
  • வண்டுவிடு தூது,
  • சிவசிவ வெண்பா,
  • திருமலையாண்டவர் குறவஞ்சி,
  • மகரநெடுங்குழைக்காதர் பாமாலை,
  • தனியூர்ப் புராணம்,
  • நன்னூல் மயிலைநாதர் உரை,
  • மதுரை மும்மணிக்கோவை,
  • வலிவல மும்மணிக்கோவை,
  • திருவாவடுதுறைக் கோவை,

ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட ஐயரவர்கள் நல்லுரைக்கோவை, புதியதும் பழையதும், நினைவு மஞ்சரி, தமிழ்நெறி விளக்கம், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், தியாகராயச் செட்டியார் வரலாறு, போன்ற பல அரிய உரைநடை நூல்களையும்,  எழுதி வெளியிட்டு உள்ளார். இவ்வாறு அவர் 90க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். இத்துடன் அவர் ஆயிரக்கணக்கான சுவடிகளையும் சேகரித்துள்ளார்.

தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் பெரு நூல்களான சங்க இலக்கியங்களை இவர் அள்ளித் தந்ததும், பொது அறிவுக்களஞ்சியங்களான உரைநடை நூல்களை இவர் படைத்துத் தந்ததும்  தமிழாய்வு செய்யும் பலருக்கு இன்றும் பயனளித்து வருகிறது.

தன்னடக்கம்

இத்தனைப் படைப்புகளை அளித்த அவர் இறுதிவரை மிக்க அடக்கத்துடனும், ஆரவாரமின்றியும், அமைதியுடனும், நிதானமுடனும் செயலாற்றியதுமே நாம் அறியத்தக்கதொரு சிறப்பாகும்.

புதுமை நோக்கு

ஒருநூலைப் பதிப்பிக்க மேற்கொண்டவுடன் அதனை எவ்வாறெல்லாம் புதிதாகப் பதிப்பிக்கலாம் என்பதிலேயே அவர் நாட்டம் கொண்டார். அதற்காகப் புதிய புதிய துறைகளில் ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்து ஈடுபடுவார். இவ்வகையில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம், போன்ற பல சமயக் கருத்துகளையும் ஆழ்ந்துணர்ந்தே பதிப்பில் ஈடுபட்டார். ஆங்கிலம் அதிகம் அறியாதவராயினும் ஆங்கிலம் அறிந்தவரை அணுகி அவர் கூறும் புதிய கருத்துகளைச் சேர்த்துக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. இவ்வகையில் அவ்வப்போது உதவியவர்களையும் அவர் வாழ்நாள் முழுவதும் நினைவு கொண்டார்.  எவர் உதிவியையும் அவர் மறந்ததில்லை.

தனிச்சிறப்புகள்

ஐயர் பதிப்புகளில் அவருடைய விரிவான முகவுரைகளும், தனித்தனி அகராதிகளும், விளக்கங்களும், ஒப்பீட்டுப் பகுதிகளும், குறிப்புரைகளும் சுவடிகள் பற்றிய விவரங்களும் தனித்தன்மை உடையன. இவை எவருக்கும் எக்காலத்தும் பயன்மிகத் தருவன.

தமிழ்நூல்களைப் பலரும் வாங்கிப் படிக்க வேண்டுமென மிகக் குறைந்த விலையில் அவற்றை அவர்  அச்சிட்டு வெளியிட்டது மற்றொரு சிறப்பாகும். தாம் 44 ஆண்டுகள் வரை ஆய்ந்து வெளியிட்ட ’தக்கயாகப்பரணி’ (552 பக்கங்கள்) நூலுக்கு விலை ரூ.4.00 என்றும், தாம் 37 ஆண்டுகள் வரை ஆய்ந்து வெளியிட்ட 1132 பக்கங்கள் கொண்ட ‘பெருங்கதை’ நூலுக்கு ரூ. 7.50 என்றும் வழங்கியது இவர் தம் தமிழுணர்வைக் காட்டும். இவ்வாறே பிற பதிப்புகளையும் இவர் அமைத்தார்.

அறிஞர்கள் கருத்துரைகள் 

”ஐயரவர்கள் தேடித் தொகுத்து வைத்திருக்கும் அரிய நூல்களைத் திருத்திய முறையில் பதிப்பிடுவதானால், சிறந்த தமிழறிஞர்களுக்குப் பல தலைமுறைக் காலம் உளங்கவர்ந்த வேலை இருந்து கொண்டே இருக்கும்” என்பர் பேராசிரியர் சு. வையாபுரிப்பிள்ளை அவர்கள்.

”ஆங்கிலக் கல்வி இல்லாதவராயினும் இவர் நூல்களை அச்சிட்ட முறை ஆங்கிலம் கற்றவர்க்கெல்லாம் வியப்பு விளைக்கும் என்பர்”  பேராசிரியர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.

1937 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாட்டில் காந்தி அவர்கள் தலைமை வகித்தபோது ஐயரவர்கள் வரவேற்புரை வாசித்தளித்தார். அதைகேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், “தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ?” என்று சொன்னாராம்.

இவ்வாறு கற்றோரையும் மற்றோரையும் எளிதில் கவரச் செய்யும்படியாக ஐயரவர்கள் விளங்கினார். இவருடைய தன்னலமில்லாத் தமிழ்ப் பணியே இதற்குக் காரணமாகும்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி “மகா மகோ பாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு “தமிழ் இலக்கிய அறிஞர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, “இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது’ என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் “தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு “என் சரித்திரம்’ என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும்  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top