ஒரு வியாபாரியும், அவரது வேலைக்காரனும் அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரமாகி விட்டதால், ஒரு ஊரில் தங்கி மறுநாள் செல்ல முடிவெடுத்தனர். தங்கும் விடுதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு மடத்தில் வந்து படுத்தனர்.
வியாபாரி மண்டபத்தின் உள்ளேயும், வேலைக்காரன் திண்ணையிலுமாகப் படுத்தனர். அப்போது, சில திருடர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன், இருட்டில் படுத்திருந்த வேலைக்காரனின் காலில் தெரியாமல் மிதித்து விட்டான்.
அவன் அலறியடித்து எழுந்தான். ஏய், காலை மடக்கிப் படுக்கக்கூடாதா? நான் ஏதோ கட்டை கிடப்பதாக நினைத்து மிதித்து விட்டேன், என்றான் மிதித்தவன். வேலைக்காரனுக்கு கோபம்.
உங்க ஊரிலெல்லாம் கட்டைகள் மடியில் பத்து ரூபாய் கட்டை வைத்துக் கொண்டு படுத்திருக்குமாக்கும், என்றான்.
ஆகா…இவனிடம் பணம் இருக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தவன், அவனிடமிருந்ததை பறித்துக் கொண்டான்.
திடீரென அவனுக்கு சந்தேகம். ஏய்! இதெல்லாம் யாருக்கு உரியது? நல்ல நோட்டா, கள்ள நோட்டா? என்று அதட்டினான். அதெல்லாம் எனக்கு தெரியாது. உள்ளே படுத்திருக்கிறாரே எனது எசமான், இதுஅவருடைய பணம். அவரிடம் போய் அந்த விஷயத்தையெல்லாம் கேட்டுக் கொள், என்றான் அந்த அடிமுட்டாள்.
வேலைக்காரனிடமே இவ்வளவு பணத்தை கொடுத்து வைத்து இருக்கிறார் என்றால், எஜமானனிடம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போட்ட திருடர்கள், உள்ளே சென்று வியாபாரியிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்று விட்டனர். இந்த வியாபாரிக்கு வேலைக்காரன் எப்படி சரியாக அமையவில்லையோ, அப்படித்தான் சிலருக்கு நட்பு, உறவு வட்டாரம் சரியில்லாமல் இருக்கிறது. முட்டாள்களின் சேர்க்கையால் தப்பாமல் கேடு வரும். சரி தானே!