ஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.
உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்லது `சுப்ரா ரீனல்’ (`சுப்ரா’ என்றால் `மேலே’) சுரப்பிகள் எனப்படுகின்றன. நெருக்கடியின்போது இவை சில ஹார்மோன்களை வெளியிடுகின்றன.
பயத்தில் தலைதெறிக்க ஓடுவது, குத்துச்சண்டை வீரரின் `நாக்-அவுட்’ குத்தில் கூடுதல் வேகம், நெருக்கடியான நிலையில் டென்னிஸ் வீரர் `எக்ஸ்ட்ரா’ சக்தியோடு பந்தை அடிப்பது எல்லாமே அட்ரினல் சுரப்பிகளின் கைங்கரியம்தான்.
***
உங்களுக்குத் தெரியுமா?
* அனைத்து `அட்ரினோகார்ட்டிகல்’ ஹார்மோன்களும் கொலஸ்ட்ராலால் ஆனவை.
* இரண்டு அட்ரினல் சுரப்பிகளும் சேர்ந்தே 10 கிராம் எடைக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
* உடற்பயிற்சி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாகக் குறைவது, ரத்தக் கசிவு, உணர்வுரீதியான நெருக்கடி போன்றவை அட்ரினல் செயல்பாட்டைத் தூண்டும்.
* அட்ரினல் சுரப்பிகள் அவற்றின் எடையை விட ஆறு மடங்கு ரத்த வினியோகத்தைப் பெறுகின்றன.
* வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனில், அட்ரினல் சுரப்பிகளின் நீக்கம் அல்லது சேதம், மரணத்தை ஏற்படுத்தும்.
* நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய், அட்ரினல் சுரப்பிகளுக்கும் பரவுகிறது.
* ரத்த மாதிரி எடுக்க முயலும்போது அந்த நர்ஸுக்கு `கார்ட்டிசோல்’ ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
***
அட்ரினல் செயல்பாட்டின்போது…
அட்ரினல் சுரப்பியால் `அட்ரினலின்’, `நார்அட்ரினலின்’ ஆகிய ஹார்மோன்கள் வெளியிடப்படும்போது, கீழ்க்கண்ட உடலியல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன…
* இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.
* உடலியல் வேதிமாற்ற வேகம் கூடுகிறது.
* கண் பாவை விரிவடைகிறது.
* மூச்சு வாங்குகிறது.
* ரத்த நாளங்கள் சுருங்கி அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
* தசைகளுக்கான ரத்த வினியோகம் அதிகரிக்கிறது.
* உறையும் நேரம் குறைகிறது.
சாதாரண மனிதனை `சூப்பர்மேனாக்கும்’ விஷயங்கள்…
அட்ரினலின் சுரப்பின்போது, துரிதமடையும் உடலியல் வேதிமாற்றம், இதயத் துடிப்பு, அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுப்பது ஆகியவை சட்டென்று சக்தியைப் பொங்கச் செய்கின்றன. கண் பாவை விரிவதால் பார்வைத் திறன் கூடுகிறது. ரத்தம் சீக்கிரமாக உறைவது, அதிக ரத்தக் கசிவைத் தடுக்கிறது. அதிஅவசியமற்ற செயல்பாடுகளான குடல்பகுதிச் சுரப்புகள் மெதுவாகின்றன. இவ்வாறாக, நெருக்கடியில் உள்ள ஒரு நபர் அதைச் சமாளிக்கத் தயாராகிறார்.
***
அட்ரினல் சுரப்பியின் சுரப்புகள்
சுமார் 25 விதமான ஹார்மோன்களை அட்ரினல் சுரப்பி சுரக்கிறது. அவற்றில் முக்கியமான சில…
கார்ட்டெக்ஸின் சுரப்புகள்
கார்ட்டிசோல்- ஹைட்ரோகார்ட்டிசோன் என்றும் அழைக்கப்படும் இது, பிட்யூட்டரி சுரப்பியின் அடினோகார்ட்டிகோடிராபிக் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. கொழுப்பு வேதிமாற்றத்தைத் தூண்டுகிறது. குளுக்கோஸ் அளவையும், தண்ணீரைத் தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
ஆல்டோஸ்டீரான்- மினரலோகார்ட்டிகாய்டு எனப்படுகிறது. பிளாஸ்மா அடர்த்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
டீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டீரான்- இது, வயதாவதைத் தடுப்பதாகவும், பாலியல் செயல்பாட்டை மேம் படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
மெடுல்லாவின் சுரப்புகள்
அட்ரினலின் அல்லது எபிநெப்ரின்- நெருக்கடி நிலையில் சுரக்கிறது. சண்டையிட அல்லது தப்பியோட உடம்பைத் தயார்படுத்துகிறது.
நார்அட்ரினலின் அல்லது நார்எபிநெப்ரின்- ரத்த நாளங்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக் கிறது.
***
அட்ரினல் சுரப்பிகளின் `பொறுப்புகள்’
* உடலியல் வேதிமாற்றத்தைப் பராமரிப்பது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது.
* வீக்கத்தைத் தடுப்பது.
* மின்தூண்டல் கடத்தல் திரவச் சமநிலையைப் பராமரிப்பது.
* கர்ப்பத்தைப் பராமரிப்பது.
* பூப்படைதல், பாலியல் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது.
***
அட்ரினல் சுரப்பி பாதிக்கப்படும்போது…
அடிசன்ஸ் வியாதி- இது `ஹைப்போஅட்ரினோகார்ட்டிசிஸம்’ எனப்படுகிறது. `கார்ட்டிசோல்’ குறைவாக உற்பத்தியாகும் நிலை. வழக்கமாக, நோய்த் தொற்றுகளாலும், தன்னியக்க நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடுகளாலும் ஏற்படுகிறது. ஒரு லட்சம் பேரில் 4 பேரை இது பாதிக்கிறது.
குஷிங்ஸ் சிண்ட்ரோம்-கார்ட்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது. அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி மற்றும் சில வேதிப்பொருட்களால் ஏற்படலாம்.
அட்ரினல் ஹைபர்பிளேசியா- குறைவான கார்ட்டிசோல் உற்பத்தி. மரபியல் காரணங்களால் ஏற்படலாம் எனக் கருதப்படு கிறது.
பிட்யூட்டரி கட்டி- எண்டோக்ரைன் சுரப்பிகளின் செயல்பாட்டை பிட்யூட்டரி சுரப்பி கட்டுப்படுத்துகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் எந்தச் சேதமும் அதன் அனைத்து ஹார்மோன்களையும் பாதிக்கும்.
விரிலைசேஷன்- ஆண்ட்ரோஜீன்களின் அதிக உற்பத்தியால் முரட்டுத்தனமான தன்மை ஏற்படும் நிலை.
அட்ரினல் கட்டி- இது, `பியோகுரோமோசைட்டோமா’ எனப் படும் புற்றுநோய். இந்நோய், அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலினை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது.