வில்வமரத்தின் சிறப்பு
மும்மூர்த்திகள் உறைம் வில்வமரம்
பிரும்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளைத் தன்னகத்தே கொண்ட லிங்கம் சில கோயில்களில் காணமுடிகிறது. மும்மூர்த்திகள் அரசமரத்திலும் இருக்கின்றனர். அதே போல் குத்துவிளக்கிலும் உறைகின்றனர்; கோமாதாவிலும் இருக்கின்றனர்.
வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது.
வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இதன் தழை ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுகிறது. இதன் காய், கனி, வேர் ஆகிய அனைத்தும் நல்ல பலனை நமக்கு கொடுக்கிறது. பெரும்பாலும் வில்வமரம் ஈஸ்வரன் கோயில்களில் உள்ளது. வில்வ இலையுடன் தண்ணீரை கலந்தால் அது புனித நீராக ஈஸ்வரன் கோயில்களில் பயன்படுத்தப் படுகிறது.
வில்வமரம் இந்தியாவில்தான் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு வெப்பம் தேவைப்படுகிறது. எனவே இது இந்தியாவில் முக்கியமாக சிவஸ்தலங்களில் வளர்க்கப் படுகின்றன. இது பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் வளர்க்கப் படுகிறது. இது சுமார் 10 மீட்டர் அதாவது 30 அடி வரை வளரும் தன்மையுடையது. இதன் இலைப்பகுதிகளில் பூக்கள் மாசி, பங்குனி மாதங்களில் பூக்கும். இதன் பூக்கள் பன்னீர் போன்ற வாசனை உடையதாக இருக்கும். பிறகு இது வில்வ பழமாக மாறும்.
சைவத்தில் இருப்பது போலவே வைணவத்திலும் இந்த வில்வம் திருமகளுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. இலக்குமி விஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கிறாள். ஆகையால் திருவஹீந்திரபுர தாயாருக்கு வில்வ இலை அர்ச்சனை நடக்கிறது. கும்பகோண சக்ரபாணி கோயிலிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ அர்ச்சனை நடக்கிறது.
வில்வ இலைக்கு ஒரு தனிச்சிறப்பும் உள்ளது. நாம் ஒருமுறைப் பூஜித்த பூக்களைத் திரும்பவும் உபயோகப்படுத்துவதில்லை. அவைகளை எடுத்துக்களைந்து விடுகிறோம். ஆனால் ஒருமுறை பூஜைக்கு உபயோகித்த வில்வ இலைகளை அலம்பி தூயமைப்படுத்தி மறுபடியும் பூஜைக்கு உபயோகப்படுத்தலாமாம். ஆனால் அதற்குரிய காலவரை ஒரு ஆறுமாதம் தானாம். இதே போல் துளசியையும் ஒருவருடம் வரை உபயோகிக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் இவைகள் சுத்தமான சூழ்நிலையில் வளர்ந்த மரங்களாக இருக்கவேண்டும். சுடுகாட்டின் அருகில் இருந்தாலும் சேர்க்கக்கூடாது.
சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.
அதுவும் ஞாயிறு அன்று வில்வத்தினால் அர்ச்சிக்க மிகச்சிறப்பாம். சோமவாரம் என்றுச்சொல்லப்படும் திங்கள் அன்று சிவனுக்குத் துளசியால் அர்ச்சிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வில்வமரத்தின் எல்லா பாகமுமே பூஜைக்கு உரியது ஆகிறது.
வில்வ இலை அர்ச்சனைக்கும், வில்வப்பழம் அபிஷேகத்திற்கும், மரத்தின் கட்டை ஹோமம் யாகத்திற்கும், வேர் மருந்துக்கும் உபயோகப்படுகிறது வில்வபழத்தின் சதுப்பை நீக்கி உபயோகித்தப்பின், அதன் குடுப்பையைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீசூர்ணததையும், திறுநீற்றையும் ஒரு டப்பாப்போல் வைத்துக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதனால் மருத்துவக்குணம் அதில் கலக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
சிவன் என்பது நெருப்பு. நாம் நெருப்பாக சிவன் இருக்கும் அண்ணாமலை க்ஷேத்ரத்தைப் பார்க்கிறோம். இந்த நெருப்பாய் சுடும் இடத்தில் சூட்டைத்தணிக்க வில்வ இலை உதவுகிறது. இதேபோல் நாரயணன் எப்போதும் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதால் துளசி அவருக்கு உபயோகப் படுத்தப்படுகிறது இது உஷ்ணத்தைத் தருகிறது.
அரச மரத்தைப்பூஜிப்பது போலவே வில்வ மரத்தையும் பூஜிப்பது வழக்கம் இதே போல் துளசிச்செடியும் பூஜைக்கு உகந்த ஒன்றாகிறது. வில்வமரத்தை வழிப்பட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கிறதாம்.
வில்வ இலை
இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது.
இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
அஸ்வமேதயாகம்
வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.
வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.
தங்கமலர் அர்ச்சனை
சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.
வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்..
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
வேடனுக்கு மோட்சம்
ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை.
இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.
ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம்.
அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது.
கற்பக மூலிகையான வில்வம்
திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.
வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது.
இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.
சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்பொழுது பறிக்கக்கூடாது
வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு.
இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.
சகல நோய் நிவாரணி வில்வம்
அனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.
சிறுவர் முதல் பெரியோர் வரை தாக்கும் சிறு நோய்களானாலும் எளிதில் குணமடையா நோய்களானாலும் சிறந்த மூலிகை மருந்தாக செயல்படுகிறது இந்த வில்வ மரம். வில்வ மரத்தின் இலை காரத்தன்மை கொண்டவை. இதனை இடித்து பிழிந்த சாற்றில் பசும்பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல், சோகை, வீக்கம் குணமாகும். மூன்று இலைகளை சுத்தம்
செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட்செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாண முறுங்கை சாற்றையும் சேர்த்து பருகிவர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் பச்சை இலைகளாவும் உண்டுவர ஆஸ்துமா நோயையையும் கட்டுப்படுத்துகிறது.
வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். இதுபோல் காய்தூளை சிறிது வெள்ளத்துடன் சேர்த்து உண்டால் இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும். வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை உட்கொண்டு வந்தால் சீதபேதி, பசியின்மை ஆகியவையும் குணமாகும்.
மேலும் பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும், அதிக வேர்வை ஏற்படுவதும் குறைகிறது. மேலும் மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இது போல் வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியத்தன்மை கொண்டது. வில்வ வேர் பட்டையை பச்சையாக ஒருகிராம் சீரகத்துடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 1 கப் பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் பருகிவர தாது பலப்படும்.
வில்வமரத்தின் பாகங்கள் சில நோய்களை முற்றாக குணப்படுத்தவல்லது. மேலும் சிறந்த கொலரா தடுப்பு மருந்தாகவும் வில்வமரத்தின் பாகங்கள் செயல்படுகின்றன.
வில்வ பழம்: வில்வ பழத்தில் பல சத்துக்கள் உள்ளன. அவை புரதச்சத்து, தாதுப்பொருள் சத்து, மாவுப்பொருள் சத்து, சுண்ணாம்பு சத்து, கொழுப்புச் சத்துக்கள் உண்டு. மேலும் வைட்டமின் ஈ சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் உள்ளன.
வில்வ பழத்தின் பயன்கள்: வில்வ பழத்திலிருந்து ஜாம், ஸ்குவாஷ், சர்பத், சிரப் ஆகியவைகளை தயாரிக்கலாம். கற்கண்டு, மிட்டாய் மற்றும் மிட்டாய்பானங்கள் தயாரிக்கலாம். இதன் குழம்பு வண்ணப் பொடிகளுடன் கலந்து படங்கள் வரைய பயன்படுகிறது. இதன் பழச்சதையை சோப்பு போலும் பயன்படுத்தலாம். பழத்தின் ஓட்டிலிருந்து ஒரு வகையான தைலம் தயாரிக்கலாம்.
இது வில்வ தைலம் எனப்படுகிறது. இதன் விதைகளிலிருந்து எண்ணெய் அதாவது வேப்பங்கொட்டையில்இருந்து வேப்ப எண்ணெய் தயாரிப்பதுபோல் வில்வ எண்ணெய் தயாரிக்கலாம். இதன் மரப்பட்டையிலிருந்து காகிதம் தயாரிக்கலாம். வில்வ பழத்தை சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வில்வ பழச்சதைகள் தண்ணீரில் போட்டு சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனை ஜுஸ் செய்தும் சாப்பிடலாம்.
வில்வ இலைகளிலிருந்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் நீங்கும். மேலும் வில்வ இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அதனை காய்ச்சி, வடிகட்டி தினந்தோறும் அரை டம்ளர் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இதன் பழச்சதையை எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றோட்டம், வயிற்று கடுப்பு குணமாகும். இதன் சதையுடன் பசும்பால் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தல் கண் எரிச்சல், தலைச்சூடு தணிந்துவிடும்.
இதன் இலைகளை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், தலைவலி ஆகியவை நீங்கிவிடும். வில்வப் பழம் குடலுக்கு வலிமையை கொடுக்கும். ஜீரணம் ஆகிவிடும். இவை அனைத்தும் உள்ள இந்த மரத்தை நாம் வீடுகளில் வளர்த்து பயன்பெறலாம். வீடுகளில் வேப்பமரத்தை நட்டு பயனடைவது போல வில்வமரத்தையும் நட்டு நாம் பயன்பெறலாம்.
குறிப்பு : மூலிகைச்சாற்றை இரண்டு வேளைகளுக்கு மேல் பருகக்கூடாது.
பல்வேறு நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும் மிகச்சிறந்த மூலிகை மரமாக விளங்கும் வில்வமரங்கள் சீதோஷ்ண நிலையில் வளர்வதுடன் தற்போது இம்மரங்கள் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரங்களின் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் அழிந்துவரும் நிலையில் உள்ளன. இதிலிருந்து மீட்டு வில்வமரங்களில் விதைகளை நடவு செய்து அனைத்து இடங்களிலும் வளரச் செய்ய வேண்டும்.