வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் Joseph பெஸ்கி என்பதாகும். அவர் 8.11.1680 அன்று இத்தாலியில் காஸ்திகிலியோன் என்ற இடத்தில் பிறந்தவர். 1709ல் சேசுசபைப் பாதிரியாரானபின் 1710ல் தமிழகத்துக்கு வந்தார்.
இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
எனினும் இன்றைய கிருத்துவத் தமிழ் தனக்கென ஒரு வகை முறைமையை வகுத்துக் கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒரு வகைத் தமிழைக் கொண்டிருப்பது குறித்துக் கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து.
திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் .
தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார் .தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார் .அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர் .தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார் .இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் ‘சுவடி தேடிய
சாமியார்’ எனப்பெயர் பெற்றார் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார்.தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல்
விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் (கே, பே) வழக்கத்தை உண்டாக்கினார்.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்
1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் ‘அடியார் வரலாறு’ என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.
2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் ‘ஏ’ ‘ஓ’ போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் ‘எ’ ‘ஒ’ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.
3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. ‘தேம்பாவணி’ என்னும் பெருங்காப்பியமும், ‘திருக்காவலூர் கலம்பகம்’ முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.
4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.
5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண ‘நிகண்டு’களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த ‘சதுரகராதி’ முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.
7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.
”18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்” என்று ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப் (G.U.Pope), இவரைத் ‘தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்’ என்று போற்றியுள்ளார்.
”திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே” என்று செக் நாட்டுத் தமிழறிஞர் ‘கமல் சுவலமில்’ பாராட்டியுள்ளார்.
எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ”கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்” என்று கூறியுள்ளார்.