காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். இந்த அரிய வகை காளைகள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் பண்ணையார்கள் அதை பராமரிக்க விரும்பாமல் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர். அதனால் இக்காளைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது..
இதே வகையான காளைகள் தான் சிந்து சமவெளியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப் பட்டது . சிந்துவெளியில் நமக்கு கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்த காளையை பார்க்க முடிகிறது . இத்தகைய திமில் அமைப்பு வேறு எந்த காளைக்கும் உலகில் கிடையாது . தமிழர்கள் சிந்து வெளியில் வாழ்ந்ததற்கு இதை விட பெரிய சான்று வேறு கிடையாது . ஆனால் இந்தக் காளை எப்படி தமிழக நிலப்பரப்பிற்கு வந்தது? ஒரு வேளை அங்கிருந்து தமிழர்கள் கால் நடையாகவே காளைகளை ஓட்டி வந்திருக்கலாம். அல்லது தமிழர்கள் சிந்து வெளி வரை இப்படியான காளைகளை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம் . இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.
எப்படியோ தமிழர்களின் தொன்மையை இன்றளவும் இந்த அரிய வகை காங்கேயம் காளைகள் பறை சாற்றுகின்றன . இக்காளைகளை அழிய விடாமல் பராமரிப்பது தமிழர்களின் கடமையும் ஆகும் .