Home » பொது » அண்ணாவின் நினைவு நாள் இன்று!!!
அண்ணாவின் நினைவு நாள் இன்று!!!

அண்ணாவின் நினைவு நாள் இன்று!!!

அவரைப்பற்றிய நினைவுக்குறிப்பு

தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

தமிழ். ஆங்கில, இந்தி என மும்மொழியிலும் முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் முற்போக்கு சீர்திருத்த வாதியானவர்தான் காஞ்சிபுரம் தந்த தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை.

மும்மொழி வித்தகரான இவர் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதியும், இயக்கியும் அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் பெருமை சேர்த்தவர். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதியதன் மூலம் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியும் வந்தார்.

இளமைக் காலம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15, 1909 ஆம் ஆண்டு நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பமான திரு. நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாப் பிறந்தார்.

இவரின் தந்தை ஒருநெசவாளர். தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து வந்தார். மாண வப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமக்கையின் பேரக் குழந்தைகளை த்ததெடுத்து வளர்த்தனர்.

பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த அண்ணாதுரை குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகச் சில காலம் பணிபுரிந்தார்.

கல்வி: 1934 இல் இளங்கலாமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியில் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.

ஆசிரியர் பணி:

பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியர் பணியை இடைநிறுத்தி பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.

பத்திரிக்கை பணி

1937 முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த காலகட்டங்களில் க்லகத்தா காய்ச்சல், ரிப்பன் மண்பத்து மகான்கள், ஓமன் கடற்கரையிலே போன்ற சிறப்புமிக்க கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரர் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளையும் எழுதினார்.

அரசியலில் நுழைவு: அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார்.(திராவிட நாடு தனி கோரிக்கையை வலியுறுத்தி துவங்கப்பட்டது) 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.

பெரியாருடன் கருத்து வேறுபாடும் திமுக உருவாக்கமும்:

பெரியாரின் தனித்திராவிட நாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளைவரான மணியம்மையாரை பெரியார் மணம் பிரிந்துகொண்டதால் கருத்து வேறுபாடு கொண்டு, அண்ணாதுரை மற்றும் பெரியாரின் அண்ணன் மகனும் பெரியாரின் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக் கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி (17.10.1949) அன்று அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்க தொடங்கினார். இருதியில் 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களின் ஆதரவையும் ஆவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிவிதமான செல்வாக்கை பெற்றது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

அறிஞர் அண்ணாதுரை அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும், அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகளே இவை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை தனி்ப்பட்டு ஒர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதப்படுகின்றது.

கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் அரசிலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் அளித்திடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல் எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்னை பொது வாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும் என்பது அண்ணாவின் கொள்கையாகும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

இந்தியா 1950 இல் அரசிலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பின்பு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தன் அங்கீகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1965 இல் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 27, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராசன் – தாளமுத்து இருவரின் உயிரிழப்பிற்குப் பிறகு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரண்டது. அவ்வாண்டின் இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர் 1940 இல் மதராசு ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இநதிக் கல்வியை விலக்கினார்.

இந்தியாவின் ஆட்சி மொழியக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை

இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது. அது பெரும்பாண்மை மக்களால் பேசப்படுவதால், ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பாண்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பாண்மை பறவை காகம் தானே?

தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும் வரை எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.

இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது – இந்தியை தாய் மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும், இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது என்றார்.

மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.

சட்டப்பேரவையில் அண்ணாதுரை

சட்டப்பேரவையில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

* மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர். நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.

* 1957 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டப்பேரவை தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.

* 1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரஸை அடுத்து உருவெடுத்திருந்துது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்பு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அண்ணாதுரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

* 1967 இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.

* 1962 இல் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியனரே வியக்கும் விதமாக மிக சாதுர்யமாக பதில் அளித்தார். பேரவையில் அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு  அண்ணாதுரை அவர்கள் நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

மொழிப்புலமை

ஒருமுறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிசோதிப்பதற்காக அவரிடம், “ஏனென்றால்” என்ற வார்த்தையை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்ற கேட்டனர். அதற்கு அண்ணாதுரை அவர்கள்,

“No Sentence can begin with because, because, because is a conjunction” அதாவது எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தையை ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல் என்றார்.

இலக்கியப் பங்களிப்புகள்

அண்ணாதுரை மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக அடுக்கு மொழிகளுடன்., மிக நாகரிகமான முறையில் அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறனும், எழுத்தாற்றலும் பெற்றவர்.

திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி(1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி(1949) மற்றும் ஓர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.

இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்க பலமாக விளங்கியவர்கள் டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.

மறைவு

அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969 இல் மரணமடைந்தார். அவர் பொடி நுகரும் பழக்கம் உடையவர் இதனால் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி, இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணாவின் பொன்மொழிகள்

“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்”

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு; அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. (வேலைக்காரி நாடகத்தில்-1945)

1) வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதை போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
2)நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது – புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.
3)பல திறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.
4) விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்.
5)கெட்ட பொருள், குப்பை கூளம், காற்றுப் பொருள் – இவற்றிடம் தீண்டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். ஆனால், பல கோடி மக்களை, தாய்நாட்டவரை, மூதாதையர் காலம் முதல் நம்முடன் வாழ்ந்து வருபவரைத் தீண்டமாட்டோம் என்று கூறுவது அறிவுடமை ஆகுமா?
6)ஜாதி – இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம்.
7)அவசியமானது – ஆகவே செய்யப்பட வேண்டியது என்பதல்ல முதலாளித்துவம். லாபகரமானது – ஆகவே, செய்யப்பட வேண்டியது என்பதுதான் முதலாளித்துவம்.
8)கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவைதான். ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.
9)மொழியால்தான் நால்வர், ஆனால் கலாசாரத்தால், பண்பால், பழக்க வழக்கங்களால், உடையால், உள்ளத்தால் ஒருவரே திராவிட இனத்தவர்.
10)வெட்டிப்பேச்சைத் தட்டி நடக்கும் தீரம், வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டுமென்ற வீரம், அநீதியைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு – இவை, வயோதிகரை விட வாலிபர்களிடையேதான் மிகுந்திருக்கும்.
11)முடியுமா? காலம் சரியா? போதுமான பலமிருக்கிறதா? இந்தப் பேச்சு வாலிபர்கட்கு. இனிப்பாய் இரா. சும்மா இருக்கலாமா – சொரணையற்றவர்களா நாம் – புறப்படு – போரிடு – இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி புகும்.
12)சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
13) பொதுவுடமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா – அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்ல நிலை.
14)பணக்கார உலகம் இருக்கிறதே அது மிகவும் விசிரமானது. பணம் மட்டும் இருந்துவிட்டால் அங்கே, முட்டாள்களும் புத்திசாலியாகப் போற்றப்படுவர். கோழையும் வீரர் பட்டம் பெறுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்கத்தான் வேண்டுமா?
15)இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது.
16)தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங்காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.
17)பகுத்தறிவுக் கொள்கைகளை மறுப்போர் தொகை குறைந்துவிட்டது. நேர் மாறாக அவற்றைத் தூற்றுவோர் பிதற்றல் வளர்ந்துவிட்டது. இது குறையக் குறைய அது வளரும். அது இயற்கை.
18)மக்கள் எழுச்சியின் முன்பு எந்தக் கொடுமைதான் நிலைத்து நிற்க முடியும்? ஜார் நிற்கவில்லை. பிரெஞ்சுக் குபேரர்கள் நிற்கவில்லை. கொடுங்கோலர்கள் யாருமே நிற்கமுடியவில்லை. குப்புற விழுந்தனர். தவிடு பொடியாயினர். வர்ணாஸ்ரமும் அப்படித்தான் நிச்சயம் விழுந்து ஒழியும்.
19)‘செயலாளர்’ என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்? உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?
20)ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.
21)பேச்சு மேடையில் பெரும்புகழ் பெற விரும்புவோருக்கு அச்சம், தயை, தாட்சண்யத்துக்குக் கட்டுப்பட்டு கருத்தை அடகு வைக்கும் குணமும் இருத்தலாகாது. காட்டுக் குதிரை மீதேறிச் செல்லும் முரட்டுச் சுபாவமும் இருத்தலாகாது.
22)அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.
23)மலர்கொண்டு மாலை தொடுத்தலில் கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுவதும் காட்டி காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? பேச்சுக்கு அழகு தேவைதான். ஆனால் அழகு மட்டுமே இருந்து கருத்து இல்லையானால் என்ன பயன்?
24)ஒரு சிறு மின்சார விளக்கு தரும் அளவுக்கு ஒளிபெற நாம் எத்தனை அகல் விளக்குத் தேட வேண்டும் – கணக்குப் போட்டுப் பாருங்கள் – பிறகு கூறுங்கள் விஞ்ஞானம் அதிக உழைப்பு எனும் சிறையிலிருந்து நம்மை மீட்டு விடுதலை வீரனாக்குமா, அல்லவா என்பதை!
25)வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும் – உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்ட வேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாக வேண்டும் – நாட்டு மக்களின் உடல், உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்க வேண்டும். ஆம்! வாலிபர்கட்கு வேலை ஏராளமாக இருக்கிறது.
26)பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தைப் (தாமரைப்) பட்டத்தரசனும்கூட சட்டமிட்டுத் தடுத்துவிட முடியாது. இதுபோலத்தான் உண்மைக் காதல் என்னும் உத்தம உணர்ச்சியை ஓராயிரம் பேர் முயன்றாலும் ஒரு நாளும் அழித்துவிட முடியாது.
27)நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதிபடைத்த உள்ளங்கள் தேவை.
29)கருகிவிட இருந்த அரும்பு மலர்ந்தது போல – மங்கி விட்ட கண்கள் மீண்டும் ஒளி பெறத் தொடங்கியது போல – தேய்ந்த நிலவு திடீரென முழுமதியானது போல ஒரு நாட்டின் வரலாற்றிலே ஏற்படுகின்ற உன்னதமான சம்பவம் – சுதந்திரம்!
30)அஞ்சாநெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால் இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.
31)சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.
32)மேடைப் பேச்சு என்பது காலட்சேபமுமல்ல. வசன சங்கீதமும் அல்ல. இனிமைச் சுவையை எல்லோருக்கும் அளிக்கும் நா வாணிபமும் அல்ல. கைகட்டி கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமுமல்ல. உயிர்ப் பிரச்சினைகளைப் பற்றியக் கருத்துக்களை வெளியிடும் களம், மேடை.
33)புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்பட முடியாது.
34)ஒரு சிலரின் ஆசைக்கு மிகப் பலரை பலியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை. சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி என்பதுதான் சமதர்மத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

அண்ணாதுரையின் முதல் படைப்புகள்

முதல் கட்டுரை – தமிழில் மகளிர் கோட்டம் – 19.03.1931

முதல் கட்டுரை – ஆங்கிலத்தில் MOSCOW mobparade – 1932

முதல் சிறுகதை – கொக்கரக்கோ – 11.02.1934

முதல் கவிதை – காங்கிரஸ் ஊழல் – 09.12.1937

முதல் கடிதம் – பகிரங்க்க் கடிதம் 02.09.1938

முதல் குறும் புதினம் – கோமளத்தின் கோபம் – 07.1939

முதல் புதினம் – வீங்கிய உதடு – 23.03.1940

முதல் நாடகம் – சந்திரோதயம் – 05.06.1943

அண்ணாதுரை புனைப்பெயர்கள்

செளமியன், பரதன், நக்கீரன், வீரன், குறம்போன், துறை, வீனஸ், சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்பேோக்கன், சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர்.

திரையுலகில் அண்ணாவின் பங்களிப்பு

1. 1949 – வேலைக்காரி – கதை, திரைக்கதை, வசனம்

2. 1949 – நல்லதம்பி – கதை, திரைக்கதை, வசனம்

3. 1951 – ஓர் இரவு – கதை, வசனம்

4. 1954 – சொர்க்க வாசல் – கதை, திரைக்கதை, வசனம்

5. 1956 – ரங்கோன் ராதா – கதை

6. 1959 – தாய் மகளுக்குக் கட்டிய தாலி – கதை

7. 1961 – நல்லவன் வாழ்வான் – கதை, வசனம்

8. 1978 – வண்டிக்காரன் மகன் – கதை

கின்னஸ் சாதனை படைத்துள்ள நடிகை மனோரமா, அண்ணாவைப் பற்றி பகிர்ந்த நிணைவலைகளின் சிறு துளி…

“பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில் நான் கதாநாயகி இந்துமதியாக நடித்தேன்.

இதே நாடகத்தில் ஈ.வெ.கி. சம்பத் சிவாஜியாகவும், கே.ஆர்.ராமசாமி சந்திரமோகனாகவும் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் எனது நடிப்பைப் பற்றி அண்ணா அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

முரசொலி சொர்ணம் எழுதிய ‘விடை கொடு தாயே’ நாடகத்தில் நான்தான் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தேன். இந்த நாடகத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை தலைமை வகித்து என் நடிப்பைப் பற்றி பாராட்டிப் பேசியிருக்கிறார்.

ஒருசமயம் சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் (சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே) நடந்த நாடகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டது. தொடர்ந்து எனக்கு சினிமா படப்பிடிப்பு இருந்து வந்ததால் என்னால் இனி நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

அதனால், வேறு ஒரு நடிகையை கதாநாயகியாகப் போட்டு அந்த நாடகத்தை நடத்தினார்கள். இந்த நாடகத்திற்கும் அண்ணா தலைமை வகித்துள்ளார். வழக்கம்போல் நாடகத்தைப் பாராட்டிப் பேசிய அண்ணா, வீட்டுக்குப் போகும்போது சொர்ணத்திடம் “நாளைக்கு என்னை வீட்டில் வந்துபார்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

மறுநாள் சொர்ணம் அண்ணாவை சந்தித்துள்ளார்.

‘நாடகத்தினால்தான் நடிகர் – நடிகைகளுக்குப் பெருமை என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகு நடிகர் – நடிகைகளினால் தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது! இனிமேல், மனோரமா இந்த நாடகத்தில் நடிக்காவிட்டால் நாடகத்தை நிறுத்திவிடு. தொடர்ந்து போடாதே’ என்று அண்ணா தன்னிடம் சொன்னதாக பின்பொரு சந்தர்ப்பத்தில் சொர்ணமே என்னிடம் தெரிவித்தார்.” என்ற தகவலை ஒரு பேட்டியில் மனோரமா பதிவு செய்துள்ளார்.

பார்வதி பி.ஏ., செவ்வாழை, சிலந்தியும் சிவனும், நமது நாடு, கல்வி நீரோடை, வண்டிக்காரன் மகன், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம், திராவிடர் நிலை: தமிழரின் தனிப் பன்பு, ஏ! தாழ்ந்த தமிழகமே!, தீ பரவட்டும் உள்ளிட்ட சில நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள அண்ணாவின் பல உரைகள், ‘தம்பிக்கு..’ என்ற தலைப்பில் அவர் தொடர்ந்து எழுதிய கடிதங்கள் போன்றவற்றையும் பல்வேறு பதிப்பகங்கள் புத்தகங்களாக வெளியிட்டுள்ளன.

நினைவுச் சின்னங்கள்

* தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது.

* அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* சென்னை மெரினா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

* எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச் செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

* சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன.

* வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம்  திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் “அண்ணா கலையரங்கம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

* 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top