Home » உடல் நலக் குறிப்புகள் » வெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை? தவிர்க்க வேண்டியவை?
வெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை? தவிர்க்க வேண்டியவை?

வெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை? தவிர்க்க வேண்டியவை?

அக்னி நட்சத்திரம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பமாகப் போகிறது. அந்த வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க எதை அருந்தலாம்? எதை தவிர்க்கணும் என்பது பற்றிய சிறிய குறிப்புகள்.தயிர் சூடு… ஆனால் மோர் குளிர்ச்சி, மாம்பழம் சூடு… ஆனால் மாம்பழ மில்க் சேக் குளிர்ச்சி, பப்பாளியும் பலாவும் வெயில் நேரத்தில் வேண்டவே வேண்டாம். எக்கச்சக்க சூடு….’

உணவு விசயத்தில் தமக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் சேர்த்துக் குழப்பி இப்படி சில தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் எப்போதும் உலவுவதுண்டு. யாரோ ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளாமல் போனதால் குறிப்பிட்ட அந்த உணவு, எல்லாருக்கும் பிரச்னை தருவதில்லை.

பொதுவாக வெயிலின் உக்கிரத்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வறண்டு கொண்டே இருக்கும். அதை சரிசெய்ய இழந்த நீர்ச்சத்தை உடலுக்குத் திருப்பித் தர வேண்டும். நீர்ச்சத்து என்றதும், ஜூஸ்தான் குடிக்க வேண்டும் என்பது பலரது எண்ணம். ஜூஸ் என்றில்லாமல், எல்லா திரவ உணவுகளும் சரிதான்.

நிறைய நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் முடிந்த போதெல்லாம், ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிற போது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது ! ஜூஸாக எடுக்கும்போது, அவற்றிலுள்ள நார்ச்சத்து பறிபோவதுடன், சுவைக்கு சர்க்கரை வேறு சேர்த்துக் கொள்கிறோம்.

‘இல்லவே இல்லை… ஜூஸாக தான் குடிப்பேன்’ என அடம் பிடிக்கிறவர்கள், பழத்தின் கசப்பான தோல் பகுதியையும், விதைகளையும் நீக்கிவிட்டு, சர்க்கரை சேர்க்காமல், அப்படியே மிக்சியில் அடித்து கெட்டியாகக் குடிக்கலாம்.

நீர்மோர் தாகத்துக்கு மிக நல்லது. கூடுதல் சுவைக்கு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்துக் குடிக்கலாம்.

பால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு, அதே பாலை லேசாகக் குளிர வைத்து, அதை ரோஸ் மில்க்காகவோ, பாதாம் மில்க்காகவோ மாற்றிக் கொடுக்கலாம்.

அப்படிக் குளிர்ச்சியாகக் கொடுக்கும் போது, அதை ஒரே மடக்கில், தொண்டைக்குள் விழுங்காமல், சிறிது நேரம் நாக்கிலேயே வைத்திருந்து, மெல்ல விழுங்கினால், தொண்டை மக்கர் பண்ணாது. வயதானவர்கள், வெயில் காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பலருக்கும் இந்த கோடை வெயிலால் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.

மேலும் கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.

வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top