Home » சிறுகதைகள் » பக்தனுக்குரிய தகுதி!!!
பக்தனுக்குரிய தகுதி!!!

பக்தனுக்குரிய தகுதி!!!

ஒருசமயம், லட்சுமி தாயார் திருமாலிடம், பெருமாளே! பக்தனுக்குரிய தகுதி என்ன? என்றாள்.

தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நானும், சிவபெருமானுமே செய்து காட்டியுள்ளோம், என்றார்.

அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன்,என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால்.

தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவவலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா, அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

இதையடுத்து, அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதேநேரம்,அவனைக் கொல்ல என்னாலும் முடியவில்லை. அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப, அவனும் ஒருமுறை கைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார்.

அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார்.

தாராளமாக! தேர்வைத் துவக்கலாம், என்றான். சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான்.

அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார் பெருமாள்.லட்சுமி தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது? என்றாள்.

இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம். எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக.ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி.

அன்பே! இந்த சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப்பெற்றேன், என்றார் பெருமாள். அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார்.

லட்சுமி! இந்த சக்கரம் என்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் அசுரர்களைக் கொல்வதற்கு பயன்படும் என்று உணர்ந்தேன். சிவனிடம் அதைக் கேட்டேன். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். நானும் அங்கு சென்றேன்.

தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தேன். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. நான் சற்றும் யோசிக்காமல் என் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தேன். என் பூஜையை மெச்சிய சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார், என்றார். கோயில்களில் கண்மலர் நேர்ச்சை நடக்கிறதல்லவா! அது, இந்தசம்பவத்தின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top