Home » சிறுகதைகள் » பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???
பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக், காத்திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன்பு, அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார்.

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க, பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள். அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர், “நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?” என்று கடுமையாகக் கேட்டார்.

“துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?” என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

அப்பொழுது பீஷ்மர் பேசினார். “பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.

துரியோதனன், அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான். ஆனால், அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியன் ஓர் உதாரணம்.

“ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்”.

“ஆனால் இப்போது, பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன். கேளுங்கள்” என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top