Home » பொது » தி.வே.கோபாலையர்!!!
தி.வே.கோபாலையர்!!!

தி.வே.கோபாலையர்!!!

தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர்

வாழ்க்கைக் குறிப்பு

பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஒருவேளை அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை – தி.வே.கோபாலையர் இருந்தால் போதும்! அவர் நினைவிலிருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்.

தமிழறிஞர் பலரும் இப்படி ஒருமுகமாய் போற்றுமளவுக்கு “மாந்தக்கணினி”யாகத் தமிழுலகை வலம் வந்தவர் தி.வே.கோபாலையர்.

ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், புலமையாளர், ஆய்வாளர், பன்மொழிப்புலவர் எனப் பல நிலையிலும் தம்மையும் தம் புலமையின் ஆளுமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர்.

தி. வே. கோபாலையர் (ஜனவரி 22, 1926 – ) ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.

திருப்பனந்தாள் கல்லூரி (1946-1950), திருவையாறு கல்லூரி (1965-1979), பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துப் புதுவை மையம் [EFEO] (1979-2007) முதலானவற்றில் பணிபுரிந்தவர். தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். இராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

தி.வே. கோபாலையரின் பெற்றோர் வேங்கடராம ஐயர், இலக்குமி அம்மாள். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர். கோபாலையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. பள்ளியிறுதி வகுப்பினை கோபாலையர் 1940 இல் நிறைவு செய்தார். 1945 இல் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் தகுதியாக ஆயிரம் உரூபா பரிசு பெற்றார். 1951 இல் பி.ஓ.எல். பட்டம் பெற்று இலாசரசு பதக்கம் பெற்றவர். 1953 இல் பண்டிதம் தேறி முதல் தகுதியாக 100 உருபா பரிசு பெற்றவர். பி.ஓ.எல். (சிறப்பு) 1958 இல் முதல் தகுதி பெற்று அரங்கையா செட்டியார் பரிசைப் பெற்றவர். தி.வே. கோபாலையர் அவர்கள் 15 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர். சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரிடம் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர்.

கல்லூரிப் பணி

15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். (பேராசிரியர் தா.ம. வெள்ளை வாரணம், முனைவர் கு. சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர்கள்). 1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் (EFEO) தம் ஆய்வுப்பணியைத் தொடங்கி இறுதிக் காலம் வரை மிகச்சிறப்பாகச் செய்தவர்.

சொற்பொழிவாளர்

தி.வே. கோபாலையர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்ததுடன் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். பல ஊர்களில் தமிழ் நூல்களைச் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அறிமுகம் செய்தவர். பல இதழ்களில், ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தவர். பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தம் ஆழ்ந்த புலமையையும் நினைவாற்றலை யும் வெளிப்படுத்திக் கற்றவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியவர்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளை நன்கு அறிந்தவர். இவர் மிகச்சிறந்த பதிப்பாளர் என்பது போல உரைவரையும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

பதிப்பித்த சில நூல்கள்

வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் — எழுத்ததிகாரம், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1970
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் — சொல்லதிகாரம் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1971
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் — பொருளதிகாரம் — அகத்திணையியல் – 2 தொகுதி, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1972
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் — பொருளதிகாரம் — புறத்திணையியல், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1972
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் — பொருளதிகாரம் — அணியியல், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1973
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் — பொருளதிகாரம் — செய்யுளியல், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு-152, 1974
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் — பொருளதிகாரம் — பாட்டியல், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1974
இலக்கணக் கொத்து உரை 1973
சுப்பிரமணிய தீக்கிதர் இயற்றிய பிரயோக விவேகம் மூலமும் உரையும், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு-147, 1973
திருஞானசம்பந்தர் தேவாரம் சொற்பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1984
திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1985
தேவார ஆய்வுத் துணை – தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் 1991
வீரசோழிய உரை – விரிவான விளக்கங்களுடன் 2005
தமிழ் இலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐம் பகுப்புக்களிலுள்ள இலக்கண மரபுச் சொற்களுக்குத் தொல்காப்பியம் முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விருத்தப்பாவியல் இறுதியான வழக்கத்தில் உள்ள இலக்கண நூல்களையும் அவற்றின் உரைகள் பலவற்றையும் உட்கொண்டு விரிவான மேற்கோள் எடுத்துக்காட்டுக்களுடன் தொகுக்கப்பட்ட தமிழ் இலக்கண மரபுச் சொல் அகர வரிசை 2006
திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் – 2006
மாறன் அலங்காரம் – பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் 2006
மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் – புதிதாக எழுதப்பட்ட விளக்கங்களுடன் 2006
இலைமறை கனிகள் – இலக்கணக் கட்டுரைகள் – தெளி தமிழில் வெளிவந்தவை 2006

எழுதிய சில நூல்கள்

தொல்காப்பியச் சேனாவரையம் – வினா விடை விளக்கம்
கம்பராமாயணத்தில் முனிவர்கள் – 1994
கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் – 2 தொகுதி 1995, 1996
கம்பராமாயத்தில் தலைமைப் பாத்திரங்கள் – 1998
சீவக சிந்தாமணி – காப்பிய நலன் – 1999
கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
பால காண்டம் – 1999
அயோத்தியா காண்டம் – 1999
சுந்தர காண்டம் – 1999
உயுத்த காண்டம் – 2000
சீவக சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் – 2002
மொழிபெயர்ப்பு நூல்களுக்குத் துணை நின்றமை[தொகு]

எசு.ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆங்கில நூலின் சோழர் காலப் கலைப்பணி – தமிழ் ஆக்கம்
ஆலன் டேனியலுவின் “மணிமேகலை’ ஆங்கில மொழிபெயர்ப்பு
சேனாவரையத்தின் பிரெஞ்சு மொழி ஆக்கம்.
நடத்திய சித்தாந்த வகுப்புக்கள்[தொகு]

உண்மை விளக்கம்
திருவருட் பயன்.
ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள்[தொகு]

பெரிய புராணம்
கம்ப ராமாயணம்
சீவக சிந்தாமணி
திங்கள்தோறும் சதயத் திருநாளில் திருவாமூரில் திருமுறை விளக்கவுரை

பெற்ற பட்டங்களும் விருதுகளும்

தருமையாதீனத் திருமடம் “”செந்தமிழ்க் கலாநிதி – 1994
திருப்பனந்தாள் காசித் திருமடம் “”சைவ நன்மணி – 1997
திண்டிவனம் கேள்விச் செல்வர் மன்றம் “”அறிஞர் திலகம் – 1978
மயிலாடுதுறை தெய்வத் தமிழ் மன்றம் “”சிந்தாமணிக் களஞ்சியம் – 1996
புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் – “”நூற்கடல் – 1982
புதுச்சேரி அரசு – “”கலைமாமணி – 2002
சென்னை – வடமொழிச் சங்கம் “”சாகித்திய வல்லப – 2002
பொங்கு தமிழ் விருது – 2003
தமிழக அரசு – திரு.வி.க. விருது – 2005
சடையப்ப வள்ளல் விருது – 2006
கபிலர் விருது – 2006

மறைவு

தி. வே. கோபாலையர் ஏப்ரல் 1, 2007 அன்று மாலை ஐந்து மணிக்கு திருச்சி, திருவரங்கத்தில் தம் 82 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

இலக்கண ஐயம் எழும்போதெல்லாம், தி.வே.கோபாலையர் பெயரும் சேர்ந்தே எழும் சூழல், இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top