திருக்குறள் கதைகள்
என் மகளுடைய திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன. திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருந்தன. பக்கத்து ஊருக்குச் சென்று நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனப்பகுதியைக் கடக்க வேண்டும். பஸ் வசதி கிடையாது. மாலை மணி மூன்று.
இருட்டுவதற்குள் அந்த வனப்பகுதியைக் கடந்து விடவேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தேன். இருட்டிவிட்டால் கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம். எனவே விரைவாக நடந்தேன்.
காட்டின் நடுப் பகுதிக்கு வந்தபொழுது திடீரென்று இடி இடித்தது போல பெரிய ஓசைக் கேட்டது. எதிரே நான் பார்த்த காட்சி என்னைக் குலை நடுங்க வைத்தது. இரண்டு ஆண் யானைகள் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்தன.
அவைகளின் பிளிறல் சத்தம் அந்த வனாந்திரம் முழுவதும் எதிரொலித்தது. முயல், நரி போன்ற சிறு விலங்குகள் அலறி அடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் தஞ்சம் புகுந்தன. யானைகள் இரண்டும் மூர்க்கத் தனமாகப் போரிட்டுக் கொண்டிருந்தன. ஒன்றையொன்று ஆவேசமாகத் தாக்கிக் கொண்டன. இரண்டு மலைகள் மோதிக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தக் காட்சி.
யானைகள் சுழன்று சுழன்று போரிட்டன. இருபதடி தூரத்தில் நான். நம்மீது மோதிவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயத்தில், பக்கத்தில் இருந்த ஒரு உயரமான பாறையின் மீது ஏறி நின்று கொண்டேன். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன், பயம் விலகிவிட்டது. யானைகள் போரிடுகின்ற அந்தக் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது. தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. யானைகளின் மத்தகங்களில் இருந்து ரத்தப் பெருக்கு ஏற்பட்டு, ரத்தம் தும்பிக்கைகளின் வழியாக வழிந்து கொண்டிருந்தது.
மோதிக்கொண்ட வேகத்தில், ஒரு யானையின் தந்தம் முறிந்து கீழே விழுந்தது. வலிகாரணமாக அந்த யானையால், தொடர்ந்து போரிட முடியவில்லை. பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு,காட்டுக்குள் ஒடி விட்டது. மற்றொரு ஆண்யானை, அதை விரட்டிக் கொண்டே அதன் பின் சென்றது.
யானைப்போர், ஒரு வழியாக முடிந்தது.இனி ஆபத்தில்லை என்று உறுதி செய்துகொண்டு,பாறையை விட்டு இறங்கிவந்தேன். வேகமாக நடந்து ஊர் வந்து சேர்ந்தேன்.
பத்து நாட்கள் கழித்து,என்மகளின் திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனர்.
என்னுடைய நண்பர் ஒருவர் விடை பெற்றுச் செல்லும்போது,”மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்து விட்டீர்கள். சாப்பாடு பிரமாதம்; எவ்வளவு செலவாயிற்று?” என்று கேட்டார்.
“சுமாராக ஐந்து லட்சம் வரைக்கும் செலவாயிருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று பதில் சொன்னேன்.
“வங்கியில் கடன் ஏதும் வாங்கினீர்களா?” என்று நண்பர் கேட்டார்.
“இல்லையில்லை; கடன் ஏதும் வாங்கவில்லை. சென்ற ஆண்டு நான் ஒய்வு பெற்றேன். அதனால் வந்த பணப்பயன்கள் யாவையும் சேமித்து வைத்திருந்தேன். நல்ல வரன் வந்தது. பத்து பைசா கடன் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டேன்” என்று சொன்னேன்.
மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்.கையில் பணத்தை வைத்துக்கொண்டு திருமணம், வீடுகட்டுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும்பொழுது எவ்வித மன இறுக்கமும் இருக்காது. அதில் ஏற்படும் இன்பமே அலாதிதான்” என்று சொல்லி முடித்தார்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
என்பது குறள். தன கையிலே பொருளை வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்தல் என்பது மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பாகும் என்பது இக்குறளின் பொருள்.