திருக்குறள் கதைகள்
பாஸ்கர் என்ற குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் இருந்தான்.அவன் பிறரை துன்புறுத்தி அவர்கள் படும் வேதனையைக் கண்டு மிகவும் சந்தோஷப்படுவான்.
அவனது வீட்டில் வளர்க்கும் பூனையைத் தூக்கி தூர எறிவான்…விழுந்த வலியுடன் சிறிது நேரம் எழுந்திருக்காது படுத்திருக்கும் பூனையின் வலியைக் கண்டு சிரிப்பான்.
அவனது வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.அந்தக் குளத்தில் அவன் வீட்டில் வளர்த்து வரும் ‘ டாமி ‘ என்ற நாயைத் தூக்கிப் போடுவான்.நாய் மூச்சிரைக்க நீந்தி கரைக்கு வரும்போது …மீண்டும் தூக்கிப் போட்டு …நாய் அல்லாடுவதைக் கண்டு சிரிப்பான்.
ஒரு நாள்…அப்படி செய்து கொண்டிருந்தபோது …கால் வழுக்கி குளத்தில் அவன் வீழ்ந்து விட்டான்.அவனுக்கோ நீச்சல் தெரியாது…தண்ணீர் கால்களை இழுத்தது…’ஐயோ…யாரேனும் உதவுங்கள்’ என கத்தினான்.
சுற்று வட்டாரத்தில் எந்த மனிதருமே இல்லை. ஆனால் பாஸ்கரின் குரலை எங்கேயோ இருந்த ‘டாமி’ கேட்டது…உடனே ஓடி வந்தது.அவன் இருக்கும் நிலை அறிந்து …அதுவும் குளத்தில் குதித்து…பாஸ்கரின் சட்டையை பிடித்து இழுத்தவாறு…அவனையும் கரைக்கு இழுத்து வந்து அவனது உயிரைக் காப்பாற்றியது.
தான் நாயை துன்புறுத்தியிருந்தாலும் …அது தன் உயிரைக் காத்தது நினைத்து …பாஸ்கர் நாயை அன்புடன் அணைத்துக்கொண்டான். அது முதல் அவன் யாரையும், எதையும் துன்புறுத்துவதில்லை.
நாமும் பிறரை துன்புறுத்தக்கூடாது.அப்படி செய்தால் நமக்கே கேடு விளையும்.
இதையே திருவள்ளுவர்
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
என்றார்.