ஒஷோ ரஜனீஸ்
ஓஷோ. உலகமெங்கும் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று.
உலகின் அதிகமான பென்ஸ் கார்கள் வைத்திருந்த ஒரே மனிதனும், கடைசி மனிதனும் ஒஷோவே.
பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் அவர்கள் ஓஷோ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட ஓஷியானிக் என்ற சொல்லில்யிருந்து தம்முடைய பெயர் உருவானதாக குறிப்பிட்டுள்ளார்.
ஓஷியானிக் என்றால் கடலில்கரைந்து போவது என்று பொருள். ஓஷியானிக் என்ற சொல் அனுபவத்தை மட்டுமே குறிக்கிறது. ஆனால் அனுபவிப்பவரைக் குறிப்பிட வில்லை அதனால் தான் ஓஷோ என்ற சொல்லை உருவாக்கினேன் என்று சொன்னார் ஓஷோ. ஆனால் இந்த பொருளுக்கு வேறு ஒரு பொருளும் உண்டு. அது வானம் பூச்சொரிந்து ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்.
ஓஷோ பிறக்கவுமில்லை, இறக்கவுமில்லை பூமி எனும் கிரகத்தை அவர் பார்வையிட்ட காலம் 11.12.1931 – 19.01.1990.
“வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்” என்று ஓஷோ சொன்னதன் உட்பொருள், மனிதன் சோகங்களுக்குள்ளும், குற்ற உணர்வுகளுக்குள்ளும் அழுந்திவிடாமல், தன்னை உணர்ந்து, தன் இயல்பான தன்மையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான்.
காமத்தை விட்டு புறப்பட்டால் தான் ஞானம் கிடைக்கும் என்று 7 அடுக்கின் 3 வது அடுக்கான காமத்துக்கு முறையான விளக்கம் கொடுத்து கடவுளைக்காண வழிசெய்தவர் ஒஷோ.
இந்த ஞானி உயிருடன் இருந்தால் உலகம் முழுவதும் இந்துத்துவாக மாறிவிடும் என்று உலகின் அண்ணாவி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அந்த நாடு விஷத்தின் மூலம் இவரது உயிரை பறித்தது. ஞானம் பலியாக வில்லை. நாம் ஞானம் அடையும் வழி சிறிது தடைப்பட்டது.
ஒரு காலத்தில் இவரை செக்ஸ் சாமியார் என்று முத்திரை குத்திய இந்த உலகம் இன்றோ இவர் சொல்லாத விசயம் எதுமே இல்லை என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறது. இவர் எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற சிறந்த புத்தகம் ஒன்று போதும் நமக்கு.
அவர் சொல்லியதில் இருந்து சில…ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு உணவின் வாசனை தெரியும்.
“தத்துவங்கள்” என்றாலே, அவை தளர்ந்து போனவர்களுக்குத்தான் என்கிற தவறான கருத்தைத் தகர்த்து, வாழ்வியலின் வலிமையே தத்துவம் என்கிற புதிய பார்வையோடு எதையும் அணுகியவர். கண்டறியாதை காண்பதிலும், காட்டுவிக்கப்படாததைக் காட்டுவதிலும் நிகரற்று விளங்குகிறார் ஒஷோ.
ஆன்ம விடுதலை நோக்கியே அவரது வழிகாட்டுதல்கள் இருந்தாலும், நடைமுறை வாழ்வின் வெற்றிக்கும் ஓஷோவின் சிந்தனைகள் ஒளிபாய்ச்சக் கூடியவை. கடந்த நூற்றாண்டின் மிகச்சரியான மனிதராகவும், மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப் படுபவராகவும் ஓஷோ விளங்கியதுதான் ஆச்சரியம்! பாலியல் சார்ந்த கருத்துக்களில் அவரது, பார்வையை, தவறாகப் பொருள் கொண்டவர்கள் ஓஷோவை “செக்ஸ் சாமியார்” என்றார்கள்.
ஒருமுறை ஓஷோவிடம் ஒருவர் கேட்டார், “உங்கள் ஆசிரமத்தில் நீங்கள் ஒழுக்கத்தை போதிப்பதில்லையே? ஏன்?” என்று. ஒஷோ சொன்னார், “பார்வை இழந்தவர்களுக்கு நான் கண்களைத் தருகிறேன். நீங்கள், ஏன் ஊன்றுகோல் தரவில்லை என்று கேட்கிறீர்கள்” என்று. அறியாமை, ஆசை, கோபம், காமம் போன்றவை பார்வையை மறைத்திருக்கின்றன. “விழிப்புணர்வு” என்கிற வெளிச்சத்தைப் பாய்ச்சி விட்டாலே போதும், ஊன்றுகோல் எதற்கு? என்கிறார் ஓஷோ.
தன்னைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகள் தேவையில்லை. ஏனெனில், விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான். குற்ற உணர்விலிருந்து விடுபட்டால் மட்டுமே மனிதன் மிகச் சிறந்த தன்மைக்கு உயர்வான் என்பதை ஓஷோ உணர்ந்திருந்தார். அதனை வெறும் போதனையாக மட்டும் சொல்லாமல், அதற்கான கருவிகளாய் தியானம், நடனம் போன்றவற்றை வழங்கினார்.
காமம், கடந்து போக வேண்டியதே தவிர புறக்கணிக்கக் கூடியது அல்ல என்ற ஓஷோவின் கருத்து மக்களால் தவறாக உணரப்பட்டது. எனவே அவரை வேறு விதமாய் சித்தரிக்கப் பலரும் முனைந்தார்கள்.
வெற்றி பெற விரும்புகிறவர்கள், முதலில் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது காலங்காலமாய் வலியுறுத்தப்படும் கருத்துதான். அதன் காரணத்தை ஓஷோ விளக்குகிறார்.
“தன்னுடன் பொருந்தி வாழ முடியாதவனால் பிறருடன் பொருந்தி வாழ முடியாது. தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் பிறரை ஏமாற்றுவதும் பிறரிடம் ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறும். இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவை எல்லாம் முகமூடிகளே தவிர முகங்களல்ல. தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள்” என்று. ஒஷோவின் தெளிவான பார்வை நமக்கு தெளிவைத் தரும் வாழ்வை முழுமையாக வாழும் உணர்வைத் தரும்.