ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலுக்குப் பின்னால் அமைந்துள்ளது ஆரம்பகால மடம். பேலூர் மடத்து நிலம் (ஆரம்பத்தில் சுமார் 7.3 ஏக்கர் நிலம் மட்டுமே மடத்திற்குச் சொந்தமாக இருந்தது; மீதி பகுதிகள் பின்னர் வாங்கப்பட்டவை) பிப்ரவரி 1898-இல் ராமகிருஷ்ண மடத்தின் கீழ் வந்தது.
அப்போது, நிலத்தின் வடக்கு மூலையில் ஒரு மாடிக் கட்டிடம் மட்டுமே இருந்தது. சுவாமிஜிக்குப் பழக்கமானவரான ஓலி புல் அளித்த நன்கொடையுடன், விஞ்ஞானானந்தரின் மேற்பார்வையில் தொடங்கிய சீரமைப்பு பணி ஓராண்டு நடைபெற்றது.
சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது நவம்பர் 12-ஆம் நாள் அன்னை இங்கு வருகை புரிந்தார். தாம் தினமும் பூஜிக்கின்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை அவர் கொண்டு வந்திருந்தார். ஓரிடத்தைச் சுத்தம் செய்து, அந்தப் படத்தை அங்கே வைத்துப் பூஜிக்கவும் செய்தார்.
அந்த ஆரம்பகால மடத்தின் முற்றத்தில் நாம் இப்போது நிற்கிறோம். வலது புறக் கட்டிடங்கள் சுவாமிஜியின் காலத்தில் உள்ளவை. தற்போது மடத்து அலுவலகம் என்று அறியப்படுகின்ற இடது புறக் கட்டிடங்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை.
நாம் நிற்கின்ற இந்த முற்றம் புனிதமானது ஸ்ரீராமகிருஷ்ணர் இங்கே நடப்பதை மஹாபுருஷ்ஜி ஒரு காட்சியில் கண்டார். அதன்பிறகு, இந்த முற்றத்தைப் துப்புரவாக வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். முற்றத்தைப் பெருக்கிய பிரம்மச்சாரி ஒருவரிடம், நீ கவனக்குறைவாகப் பெருக்கியுள்ளாய்; எரிந்த தீக்குச்சிகள் அங்கங்கே விழுந்து கிடக்கின்றன. தூசியும் சரியாகப் போகவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் நடக்கும் முற்றம் இது. அதை மனத்தில் வைத்து வேலை செய். அவர் நடக்கும்போது அவரது திருப்பாதங்களில் எதுவும் குத்தாதபடி சுத்தம் செய் என்று ஒருமுறை கூறினார்.
அன்னையின் வாழ்க்கையிலும் இடம் பெற்றது இந்த முற்றம். 1916-ஆம் ஆண்டு துர்க்கா பூஜையின் போது அன்னை பேலூர் மடத்திற்கு வந்திருந்தார். அஷ்டமி நாளன்று காலையில் அவர் இந்த முற்றம் வழியாகச் சென்றார். எதிர்க் கட்டிடத்தின் (பழைய கோயிலின் கீழ்ப்பகுதி; தற்போது மடத்து அலுவலகத்தின் சில பகுதிகள் இங்கே இயங்கி வருகின்றன. அந்த நாட்களில் இது சமையலறை, ஸ்டோர் ரூம் மற்றும் உணவுக்கூடமாக இருந்தது) கீழ்ப்பகுதியில் துறவியரும் பக்தர்களும் விழாவிற்காகக் காய்கறிகள் நறுக்கிக்கொண்டிருந்தனர்.
அதைக் கண்ட அன்னை, ஆகா! என் பிள்ளைகள் என்னமாய் காய்கறி நறுக்கிறார்கள்! என்று உவகையுடன் கூறினார். அங்கிருந்த ரமணி (பின்னாளில் சுவாமி ஜகதானந்தர்) அதற்கு, தேவியின் அருளைப் பெறுவது எங்கள் நோக்கம்; அது, தியானத்தினமூலமாக இருந்தாலும் சரி, காய்கறி நறுக்குவதன்மூலம் இருந்தாலும் சரி என்றார்.
சுவாமிஜியின் வாழ்க்கையிலும் அழியா இடம் பெற்றது இந்த முற்றம். அவர் தமது உடலை உகுத்த நாளன்று மிக முக்கியமான கருத்து ஒன்றை இந்த முற்றத்தில் நின்றே கூறினார். அன்று காலையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பள்ளியறையில் சுமார் மூன்று மணி நேரம் தியானித்த பிறகு, கீழே வந்து இந்த முற்றத்தில் முன்னும் பின்னுமாக நடந்தார். அவரது மனம் இந்த உலகத்தைக் கடந்து வேறு ஏதோ ஓர் உலகில் சஞ்சரிப்பது போலிருந்தது.
இந்த உலக உணர்வே இல்லாதவர் போல் அவர் கூறினார்: இந்த விவேகானந்தன் என்ன செய்தான் என்பது யாருக்குத் தெரியும்! ஒருவேளை இன்னொரு விவேகானந்தன் இருந்தான் அவன் புரிந்துகொண்டிருப்பான். அதனால் என்ன! காலப்போக்கில் இன்னும் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தானே போகிறார்கள்!