சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு என்னும் நூல் குறிப்பிடுகிறது:
சுவாமிஜி எங்குச் சென்றாலும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் தனது தாய்க்குப் புகழாரம் சூட்டினார். சுவாமிஜியின் நண்பர்களில் ஒருவர், இருவரும் சிலவாரங்கள் விருந்தினர்களாக ஒரு நண்பர் வீட்டில் மகிழ்ச்சியாகக் கழித்த நாட்களை நினைவுகூரும் போது.
அவர் அடிக்கடி தன் அன்னையைப் பற்றி பேசினார். சுவாமிஜி தனது அன்னைக்கு உள்ள சுய கட்டுப்பாட்டை மிகவும் பாராட்டினார். பின்னர் தனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் தன் அன்னையைப் போல் நீண்ட நாள் விரதம் இருந்து பார்த்ததில்லை என்று அவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது.
அவருடைய அன்னை ஒருமுறை எதுவும் உண்ணாமல் தொடர்ந்து 14 நாட்களுக்கு விரதம் இருந்துள்ளார் என்றும் கூறினார் அவர் என்னை இந்தப் பணியைச் செய்ய ஊக்கமளித்ததே என் தாய்தான். அவளது உயரிய குணங்கள்தான் எனது வாழ்க்கைக்கும், எனது தொண்டுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வருவது என்று அடிக்கடி அவர் தன் அன்னையைப் பற்றி கூறுவதை அவரது சீடர்கள் கேட்டிருக்கிறார்கள்.
1894-ல் சுவாமிஜி தனது முதல் மேலை நாட்டுப் பயணத்தை முடித்துத் தாயகம் திரும்பிய உடனேயே தனது தாயைப் பாக்கச் சென்றார். பின்னரும் பல்வேறு அவசரப் பணிகளுக்கிடையிலும் தனது தாயை முடிந்தவரையிலும் அடிக்கடி சென்று பார்த்து வருவார்.
அவரது அன்னையுடனான முதல் சந்திப்பின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை இப்போது காணலாம். மேலை நாடுகளில் கிடைத்த புகழுடன் அவர் தனது அன்னையைச் சந்திக்கச் சென்றார். அப்பொழுது நாம் பார்த்தது ஒரு சொற்பொழிவாளரையோ, நாட்டுப் பற்றுடையவரையோ அல்லது ஒரு துறவியையோ அல்ல, தாய்க்கு மட்டுமே உரிய குழந்தையாகத் தனது அன்னையின் மடியில் தலையைப் புதைத்துக் குழந்தை போல் அம்மா உனது கையால் எனக்கு உணவூட்டி என்னை வளர்த்துவிடு என்று சுவாமிஜி கொஞ்சினார்.
மற்றொரு நாள் சுவாமிஜி தனது அன்னையைச் சந்திக்கச் சென்றபோது அவரது தாய் அப்பொழுதுதான் தனது நண்பகல் உணவினை முடித்திருந்தார். பிரசாதமாக உட்கொள்ள ஒரு பருக்கைக் கூட இல்லையே என்று சுவாமிஜிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஒரு முருங்கைக்காய் மட்டுமே அவரது அன்னையில் தட்டில் விட்டு வைக்கப்பட்டிருந்தது. சுவாமிஜி அதை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டுவிட்டார்.
சுவாமிஜி தனது அன்னைமேல் வைத்திருந்த பரிவையும் அவரை மகிழ்விக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் பற்றி இப்போது காணலாம். ஒருமுறை சுவாமிஜியும், பிரம்மானந்தரும் பலராம் போஸின் இல்லத்தில் தங்கியிருந்தனர்.
சுவாமிஜிக்கு நீரிழவு நோய் இருந்தது. எனவே அவருக்கு இரவில் எளிதில் உறக்கம் வராது. நண்பகலில் அவர் சற்று உறங்குவது வழக்கம். ஒருநாள் அவ்வழியே சென்று கொண்டிருந்த அவரது அன்னையின் வேலைக்காரப் பெண்மணி தற்செயலாக நரேன் என்று கூப்பிட்டுக் கொண்டு அங்கு வந்தார். பிரம்மானந்தர் சுவாமிஜியின் அறைக்குள் பார்த்துவிட்டு சுவாமிஜி உறங்கிக் கொண்டிருப்பதாக அவளிடம் கூறிவிட்டார். அவளும் சென்றுவிட்டாள்.
பின்னர் சுவாமிஜி உறக்கத்திலிருந்து எழுந்ததும் பிரம்மானந்தர் அவரிடம் வேலைக்காரப் பெண்மணி வந்து சென்றதைக் கூறினார். சுவாமிஜி கோபத்துடன், ஏன் உடனேயே என்னை எழுப்பவில்லை என்று அவரைக் கடிந்து கொண்டார். மேலு<ம் அவள் எனது அன்னையிடமிருந்து ஏதாவது அவசரச் செய்தி கொண்டு வந்திருப்பாள் என்று கூறி உடனேயே ஒரு வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு தனது அன்னையின் இருப்பிடத்திற்குச் சென்றார். அங்குச் சென்ற பின்புதான் அவருக்கு அந்த வேலைக்காரப் பெண்மணியைத் தனது தாய் அனுப்பவில்லை.
அவள் தாமாகவே பார்க்க வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. சுவாமி பிரம்மானந்தரைக் கடிந்து விட்டோமே என்று மனம் வருந்திய சுவாமிஜி அவரைத் தன் அன்னையின் இருப்பிடத்திற்கு அழைத்து வரச் சொல்லி ஒரு வண்டியை அனுப்பினார். பிரம்மானந்தர் வந்தவுடன் சுவாமிஜி தனது செய்கையை மன்னித்து விடும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்.
சுவாமிஜி நெஞ்சம் நெகிழ்ந்த பக்தியுடன் தனது அன்னைக்குத் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து அவருடைய உயர்ந்த உள்ளத்திற்கு மகிழ்வூட்டினார். 1901 அக்டோபர் மாதம் தூய அன்னை சாரதா தேவியின் பெயரில் முதன்முதலாகப் பேலுர் மடத்தில் துர்க்கா பூஜையைச் சுவாமிஜி நடத்தி வைத்தார்.
சுவாமிஜியின் அழைப்பிற்கிணங்க அவரது அன்னையும் அதற்கு வருகை தந்திருந்தார். பின்னர், தன் அன்னையின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜகத்தாத்ரி பூஜையை எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று முன் நின்று நடத்தி வைத்தார். ஏராளமான துறவிகள் அந்தப் பூஜைக்கு அழைக்கப்பட்டு அங்கு வந்திருந்தனர்.
தாயின் கட்டளைக்கிணங்க சில நாட்கள் கழித்து அதே ஆண்டில் காளி பூஜைக்குப் பின்னர் காளிகாட் கோவிலுக்குச் சென்று காளியைத் தரிசித்து வந்தார். இந்தத் தரிசனம் அவரது அன்னையின் விருப்பத்தையும், கட்டளையையும் நிறைவேற்றுவதற்காகவே செய்யப்பட்டது. குழந்தைப் பருவத்தில் சுவாமிஜி நோய் வாய்ப்பட்டிருந்தபோது அவரது அன்னை அவர் குணமடைய வேண்டுமென்று அன்னை காளியிடம் வேண்டினார்.
பின்னர் தன்னுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்த்துச் சுவாமிஜியைக் குணமடையச் செய்த அன்னை காளிக்கு நன்றிக் கடனாக அவளது ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்வதாக நேர்ந்து கொண்டார். சுவாமிஜியின் தற்போதைய உடல்நலக் குறைவைப் பார்த்துத் துன்புற்ற அவரது அன்னை தனது பிரார்த்தனையை நிறைவேற்றாததை நினைவுகூர்ந்து அதை நிறைவேற்ற விரும்பினார்.
மிகுந்த பக்தியுடன் எல்லாவித சடங்குகளையும் முறையாகச் செய்து தன் அன்னை புவனேசுவரியின் வேண்டுதலைச் சுவாமிஜி நிறைவேற்றினார். ஆதிகங்கையில் புனித நீராடி, ஈரத்துணியுடன் ஆலயத்தை மூன்று முறை அங்கப் பிரதட்சிணம் செய்து அன்னை காளியை அவர் வழிபட்டார். பின்னர் அவர், ஏழு முறை ஆலயத்தை வலம் வந்தார்.
எல்லா ஹோம வழிபாடுகளையும் மண்டபத்தின் மேற்குப் புறத்தில் அவரே செய்துவிட்டு மடத்திற்குத் திரும்பினார். அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க பூஜை செய்வதற்கு ஆலயத்தின் அர்ச்சகர்கள் தனக்கு அனுமதி அளித்தது குறித்துப் புகழ்ந்து பேசினார். இதற்கு முன்னர் 1899 மே மாதம் ஒருமுறை சென்றபோது அந்த அர்ச்சர்கள் இவரை அன்புடன் நடத்தியது குறித்தும் நினைவுகூர்ந்தார்.
சுவாமிஜியுடன் புனிதப் பயணம் செல்ல வேண்டும் என்பது புவனேசுவரி தேவியின் முக்கிய விருப்பம். உடல்நிலை குன்றியிருந்தபோதிலும் தன் அன்னையின் நீண்ட நாளைய விருப்பத்தை நிறைவேற்றவும், இறுதி நாட்களை அவருடன் கழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் சுவாமிஜி அதற்கு இணங்கினார்.
தனது அன்னை மற்றும் சில உறவினர்களைக் கிழக்கு வங்காளத்தில் உள்ள டாக்கா, சந்திரநாத், அசாமில் உள்ள காமாக்யா போன்ற புனிதத் தலங்களுக்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார். தனது அன்னையை ராமேசுவரம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவரின் எண்ணம் நிறைவேறாமலேயே போயிற்று. சுவாமிஜியின் உடல் நிலை குன்றிய காரணத்தால் அந்தப் புனிதப் பயணம் தடைப்பட்டது.
தனது மறைவைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததால் சுவாமிஜி தனக்குப் பின் தன் அன்னையைக் கவனித்துக் கொள்ளும்படியும் சட்டப்படி அவருக்குக் கிடைக்க வேண்டியதைக் கிடைக்க செய்ய உதவும்படியும் சுவாமி பிரம்மானந்தரிடம் கூறினார். வட இந்தியாவிலுள்ள புனிதத் தலங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும் படியும் கேட்டுக் கொண்டார். சுவாமிஜியின் மறைவிற்குப் பின் சுவாமிஜி பிரம்மானந்தர் சுவாமிஜியின் அன்னையை அடிக்கடி பார்க்கச் சென்றார்.
அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்து ஆறுதல் கூறினார். 1900 மற்றும் 1903 ஆம் ஆண்டுகளில் பேலூர் மடத்திலுள்ள ஒரு துறவியுடனோ, பிரம்மச்சாரியுடனோ சுவாமிஜியின் அன்னை பூரி யாத்திரை சென்று வந்தார். பூரிக்குச் சென்று திரும்பிய பின் குடும்பக் கடமைகள் என்னும் அவரது துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை 25 ஜூலை 1911 அன்று நிறைவு பெற்றது.
சுவாமிஜி அவரது அன்னையிடம் காட்டிய பக்திக்கும் அவர்களது அன்பான உறவுக்கும் எடுத்துக்காட்டாக மற்றொரு நிகழ்ச்சியைக் கூறி நிறைவு செய்கிறோம். ஒரு காலைப்பொழுது சுவாமிஜியைக் காண அவரது அன்னை வந்திருந்தார். முதல் மாடியில் வராந்தா பகுதிக்குச் சென்று விலூ என்று உரக்கக் கூப்பிட்டார்.
உடனேயே தாயின் குரலைக் கேட்டு ஓடி வரும் குழந்தை போல் சுவாமிஜி அறையிலிருந்து வெளியே வந்தார். உயர்ந்த உள்ளம் கொண்ட விவேகானந்தர் தனது அன்னையைப் பொறுத்தவரை ஒரு வாலிபவ் போன்றுதான் இருந்தார். அவர் புவனேசுவரி தேவியுடன் மாடியிலிருந்து இறங்கி, தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். இருவரும் மிகவும் மென்மையாகச் சொந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு நடந்தனர்.
தன்னுடைய இறுதி ஆண்டுகளில் சுவாமிஜி கொல்கத்தாவிற்கு எப்பொழுது வருகை தந்தாலும் தன் அன்னையின் இருப்பிடத்திற்குச் செல்வார். அவர் பேலூரில் இருந்தபோது அன்னையைப் பார்க்க அடிக்கடி கொல்கத்தா சென்று வருவார்.
அவரால் செல்ல முடியாவிட்டாலும், ஒரு வாரமோ, இரு வாரங்களோ அன்னையைப் பார்க்க நேராவிட்டாலும் அவரது அன்னையே பேலூருக்கு வந்து அவரைப் பார்த்து, குடும்ப விஷயங்களில் அவருடைய கருத்தையும் ஆலோசனையையும் கேட்டுவிட்டுச் செல்வார்.
அன்னையைப் புகழ்தல்:
சுவாமிஜி தனது அன்னையைப் பற்றி மிகவும் பாராட்டி உள்ளார்:
எப்பொழுதும் துயரம், எப்பொழுதும் அன்பு………………. எனது அன்னை என்னிடம் காட்டிய அன்புதான் இன்று இந்த நிலைக்கு என்னை உயர்த்தி உள்ளது. நான் அவளுக்குக் கடன்பட்டுள்ளேன். அதை என்னால் திருப்பிக் கொடுக்கவே இயலாது.
நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எனது அன்னை விரதம் இருப்பது, பிரார்த்தனைகள் செய்வது மற்றும் அதைப் போன்று நூறு செயல்கள் செய்தார். என்னால் ஐந்து நிமிடங்கள் கூட அப்படிச் செய்ய இயலாது. ஆனால் அவர் இரண்டு ஆண்டு காலம் அதைச் செய்தார். என்னுடைய ஆன்மீகப் பண்பாட்டுக்கு அதுவே அடிப்படை என்று நான் நம்புகிறேன்.
நான் இந்த உலகில் நானாக இருக்கிறேன் என்றால் அது எனது அன்னை என்னை உணர்வுடன் மனமறிந்து அவ்வாறு வளர்த்து ஆளாக்கியதால் மட்டுமே என்று நம்புகிறேன். என்னிடம் உள்ள சிறிதளவு எழுச்சியும்கூட தெரிந்து, மனமறிந்து முழு உணர்வுடன் என் அன்னையால் எனக்குத் தரப்பட்டதே. உணர்வற்ற அல்லது நினைவற்ற நிலையில் தரப்பட்டது அல்ல என்றே கருதுகிறேன்.
சுவாமிஜி ஒருபோதும் தன் அன்னையின் உயர்ந்த நற்பண்புகளைப் போற்றிப் பேசுவதில் சலித்ததோ களைத்ததோ இல்லை. 18 ஜனவரி 1900 அன்று கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பாசடினா என்னுமிடத்தில் இந்தியப் பெண்மணிகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இவ்வாறு அவர் குறிப்பிடுகிறார்.
நான் பிறப்பதற்காக எனது அன்னையும் தந்தையும் பல ஆண்டுகளாக விரதமும், தவமும், பிரார்த்தனையும் செய்தனர். எனது அன்னை இந்த உலகத்தில் என்னைக் கொண்டு வருவதற்கு ஒரு மகானைப் போன்று வாழ்ந்தார். மனத்தையும், உடலையும், உணவையும், ஆடைகளையும், எண்ணங்களையும் அவர் மிகவும் தூய நிலையில் பல ஆண்டுகள் வைத்திருந்தார்.
இவையெல்லாம் எதற்காகவெனில் என்னை ஈன்றெடுக்கவே இதே உரையில் அவர் தனது தாய்க்கு மரியாதை செலுத்தும் வழக்கம் பற்றிய தன் அனுபவத்தையும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, குழந்தைகள் என்ற முறையில் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் ஒரு குவளைத் தண்ணீரை எடுத்து வந்து தாயின் முன் வைத்து அவர் அந்த நீரில் தன் கால் கட்டை விரலை அமிழ்த்திய பின்னர், அதைப் பருக வேண்டும்.
இந்தியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உண்மையாகப் பின்பற்றி வந்த சுவாமிஜி எப்பொழுதும் தன் அன்னையின் மேன்மையான குணங்களைப் போற்றிப் புகழ்வார். எந்தக் குழந்தையுமே தாய் தந்தையருக்கு உரிய மரியாதை அளிக்காமல், வாழ்வில் உயர்நிலைக்கு முன்னேற முடியாது என்பது சுவாமிஜியின் திட்டவட்டமான கருத்தாகும்.
சுவாமிஜி இந்தியாவின் சுருக்கமாகவே திகழ்ந்தார்
உலகம் முழுவதும் உள்ள இலக்கியங்கள் தாயன்பை புனிதம் வாய்ந்த வழிபாடு என்று புகழ்கிறது. அதனுடன் இந்தியாவின் பண்பாடான அன்னையை வழிபடுவது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் சுவாமிஜியின் உயர்ந்த தாய் பக்தி நமக்குத் தெள்ளத் தெளிய விளங்குகிறது.
உயர்ந்த ஆன்மாக்களாகிய புவனேசுவரி தேவியும் சுவாமி விவேகானந்தரும் ஒரு நாளில் பிறந்துவிடவில்லை. அழிவில்லாத இந்தியப் பண்பாட்டின் சின்னங்கள் அவர்கள். சுவாமி விவேகானந்தர், செயல்முறை வேதாந்தத்தின் மிக உயர்ந்த அரிய செல்வமாகத் தன்னுடைய தாய் பக்தியை ஓர் எடுத்துக்காட்டாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.