Home » விவேகானந்தர் » விவேகானந்தரும் அவரது அன்னையும் – 4
விவேகானந்தரும் அவரது அன்னையும் – 4

விவேகானந்தரும் அவரது அன்னையும் – 4

அன்னையின் மீது சுவாமிஜி கொண்டிருந்த பக்தியையும் மதிப்பையும் பற்றிய ஒரு கண்ணோட்டம்:

சுவாமிஜி துறவியான பின்னரும் தன் அன்னையின் வறுமை நிலையை ஒரு போதும் மறந்தது இல்லை. தனது வருத்தத்தையும், வேதனையையும் பிரமததாச மித்ராவிடம் அவர் வெளிப்படுத்திய போது அவர் சுவாமிஜியின் அன்னைக்கு 20/- ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை அனுப்பி வைத்தார்.

14 ஜூலை 1889 அன்று சுவாமிஜி கல்கத்தாவிலுள்ள சிமூலியாவிலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் குடும்பப் பெருமையை மனத்தில் கொண்டு அவரது அன்னை அந்தப் பணத்தை ஏற்க மறுத்தது பற்றி நமக்குத் தெரிய வருகிறது. தனது அன்னை மற்றும் இரண்டு சகோதரர்கள் பூபேந்திரநாதர், மகேந்திரநாதர் ஆகியோரின் கவலைக்குரிய சூழ்நிலை பற்றி சுவாமிஜி நினைக்கத் தவறியதே இல்லை.

சுவாமிஜியின் கேத்ரி பயணத்தின் போது கேத்ரி அரசர் அவருடைய குடும்பச் சூழ்நிலை பற்றி கேட்டார், சுவாமிஜியும் பொருளாதார நிலை பற்றிய மனவேதனையை அவரிடம் சொல்லியிருக்கக் கூடும். கேத்ரி அரசர் சுவாமிஜியின் பயணத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் காலந்தவறாமல் 100 ரூபாயைப் புவனேசுவரி தேவிக்குக் கனிவுடன் அனுப்பி வைத்தது தெரிய வருகிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தி குடும்பச் சூழ்நிலைப் பற்றிய கவலை நீங்கி மக்கள் பணியில் மனம் செலுத்த சுவாமிஜிக்குப் பெரிதும் உதவியது. 1901-ல் கேத்ரி அரசரின் மறைவு வரை மாதாமாதம் இந்த உதவித் தொகை சுவாமிஜியின் அன்னைக்குத் தவறாது அனுப்பப்பட்டது. அரசரின் மறைவிற்குப் பின் அவரது அன்னை தொடர்ந்து அந்த நதி உதவியைப் பெற்றுக் கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சுவாமிஜி மேலை நாடுகளுக்குச் செல்ல நினைத்த போது அவரது அன்னையைப் பற்றிய ஒரு கனவு அவரது மனத்தைப் பெரிதும் பாதித்தது. அதை அவர் இவ்வாறு விவரிக்கிறார்.

ஒரு சமயம் நான் மன்மத பாபுவின் வீட்டில் தங்கியிருந்தபோது ஒருநாள் இரவு என் அன்னை இறந்துவிட்டதாகக் கனவு கண்டேன். எனது மனம் மிகவும் நிலைகுலைந்து குழம்பியது. வீட்டுடன் மட்டுமல்லாது. அந்த நாட்களில், நான் மடத்துடனும்கூட கடிதத் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.

இந்தக் கனவை மன்மதரிடம் வெளிப்படுத்திய போது அவர் நிலைமையைப் பற்றித் தகவல் அறிய கல்கத்தாவிற்கு ஒரு தந்தி அனுப்பினார். இந்தக் கனவு ஒரு வகையில் என் மனத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இது ஒருபுறமிருக்க, எனது சென்னை நண்பர்களோ நான் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து என்னை உடனேயே பயணம் செல்லத் தூண்டினர்.

ஆனால், நானோ எனது அன்னையைப் பற்றி எதுவும் அறியாமல் புறப்பட விரும்பவில்லை. எனது இந்த நிலையைப் பார்த்த மன்மதர் ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் வசித்து வந்த, ஆவிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தவரும், மனிதரின் எதிர்காலம், கடந்தகாலம் பற்றி தெரிவிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற வருமான கோவிந்த செட்டியிடம் போய் கேட்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

நானும் எனது மனத்தின் சுமையை அகற்ற விரும்பி அதற்கு ஒப்புக்கொண்டேன். நாங்கல் நால்வர்-மன்மதர், அளசிங்கர், நான் மற்றும் ஒருவர்-பகாதி தூரம் புகை வண்டியிலும் மீதி தூரம் நடந்தும் அவர் இருக்குமிடத்திற்குப் போய் சேர்ந்தோம்.

அங்கே கரிய, அழகற்ற தோற்றம் கொண்ட ஒருவன் சுடுகாட்டிற்கு அருகே அமர்ந்து கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம். அவனது உதவியாளர்கள் எனக்குப் புரியாத ஒரு தென்னிந்திய மொழியில் ஆவிகளைக் கட்டுப்படுத்துவதில் அவனுக்குள்ள ஆற்றலைப் பற்றி எங்களிடம் கூறினர்.

முதலில் அவன் எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. நாங்கள் அந்த இடத்திலிருந்து திரும்பும் பொழுது அவன் எங்களைச் சிறிது நேரம் காத்திருக்கும்படி வேண்டினான். எங்களுடன் வந்த அளசிங்கர் அவன் கூறியதை எங்களுக்கு விளக்கிச் சற்றுக் காத்திருக்கும்படி கூறினார். இதையடுத்து அவன் ஒரு பென்சிலால் சில உருவங்களை வரையத் தொடங்கினான்.

அதன் பின்னர் அவன் அசையாமல், தன் மனத்தை ஆழ்ந்து ஒருமுகப்படுத்தியதை நான் கவனித்தேன். அதைத் தொடர்ந்து அவன் என்னுடைய பெயர், குலவரலாறு, முன்னோர்கள் பற்றிய விவரங்களை அவன் கூறினான், மேலும், ஸ்ரீராமகிருஷ்ணர் எப்போதும் என்னுடன் இருக்கிறார் என்றும் கூறினான். எனது அன்னையைப் பற்றி நல்ல செய்தியும் தெரிவித்தான். நான் கூடிய விரைவில் தொலைதூர நாடுகளுக்குச் சென்று இந்து மதம் பற்றி கூறவேண்டியிருக்கும் என்றும் கூறினான்.

சுவாமிஜி தனது அன்னையின் மீது காட்டிய பரிவு பற்றிய மே<லும் பல செய்திகளை இங்குக் காணலாம். புவனேசுவரி தேவியின் கண்ணின் மணியான சுவாமிஜி, 29 ஜனவரி 1894 அன்று தனது நண்பர் ஹரிதாஸ் விஹாரிதாஸ் தேசாய்க்கு எழுதுகிறார்.

உங்களது கடைசிக் கடிதம் எனக்குச் சில நாட்கள் முன்பு கிடைத்தது. நீங்கள் துயரப்படுகின்ற எனது தாயையும், சகோதரர்களையும் பார்க்கச் சென்றிருந்ததை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது இதயத்தின் மிகவும் மென்மையான பகுதியை நீங்கள் தொட்டு விட்டீர்கள். உங்களுக்கு ஒன்று தெரியவவேண்டும்.

திவான்ஜி, நான் ஒன்றும் கல்நெஞ்சம் கொண்டவன் அல்ல. இந்த உலகில் நான் யாரையேனும் ஒருவரை நேசிக்கிறேன் என்றால் அது எனது அன்னையே ஆவார். இருந்தபோதிலும் நான் இந்த உலகத்தைத் துறக்காமல் இருந்திருந்தால் எனது குருதேவரான ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த உண்மையை இந்த உலகத்திற்கு உபதேசிக்க நினைத்தாரோ, அந்த லட்சியமும் குறிக்கோளும் வெளிச்சத்திற்கு வராமலேயே போயிருக்கும் என்று நம்பினேன்.

மேலும் நான் துறவியாகாமல் இருந்திருந்தால், புரண்டெழுந்து வருகின்ற இன்றைய உலகியல் மற்றும் இன்பமயக்க அலைகளை எதிர்த்து நிற்கின்றார்களே இந்த இளைஞர்கள், இவர்கள் என்ன செய்வார்கள்? இது இந்தியாவிற்கும், குறிப்பாக வங்காளத்திற்கும் பெரிய நன்மை செய்திருக்கிறது. இது வெறும் தொடக்கம் மட்டுமே. இறைவனின் துணையுடன் இவர்கள் செய்யும் பணி இந்த உலகமே காலம் காலமாக அவர்களை வாழ்த்தும் அளவுக்கு இருக்கும்.

ஒருபுறம் இந்தியாவின் மற்றும் உலக மதங்களின் எதிர்காலம் பற்றிய எனது காட்சி, எந்த உதவியும் இல்லாமல், ஏன், அவர்களைபற்றிச் சிந்திக்கக்கூட யாருமில்லாமல் காலங்காலமாக மூழ்கிக் கொண்டே இருக்கின்ற லட்சக்கணக்கான மக்களிடம் நான் கொண்ட அன்பு; மறுபுறம், எனக்கு மிக நெருங்கியவர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களைத் துயரத்தில் ஆழ்த்துகின்ற வழி; இரண்டினுள் நான் முன்னதையே தேர்ந்தெடுத்தேன். மீதி உள்ளதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

சுவாமிஜி எழுதிய 775-க்கும் மேலான கடிதங்கள் இன்று வரை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவருடைய தாய் அவருக்கு எழுதிய கடிதமோ அல்லது இவர் அவருடைய தாய்க்கு எழுதியதோ ஒன்று கூட நம் கைக்குக் கிடைக்கவில்லை என்பது வியப்பை அளிக்கிறது.

ஆனாலும், அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் அனைவருக்கும், தன்னுடைய பல்வேறு இன்னல்களை அஞ்சாமலும், பொறுமையுடனும் எதிர்நோக்கிய காலத்திலும் சுவாமிஜிக்குத் தனது அன்னையிடமிருந்த மென்மையான அன்பும் பக்தியும் சிறிதும் குறையவில்லை என்பது தெரிய வருகிறது.

தனது அன்னையிடம் காட்டிய மதிப்பும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற கவலையும் எந்த நிலையிலும் அவரை விட்டு அகலவில்லை.

1893-ஆம் ஆண்டில் சிகாகோ சர்வமத மகாசபையில் சுவாமிஜிக்குக் கிட்டிய பெரும் வெற்றியையும் பாராட்டையும் அறிந்த பிரம்ம சமாஜ தலைவர் பிரதாப சந்திர மஜும்தார் பொறாமையினால் சுவாமிஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வங்காளத்தில் பலரையும் தூண்டி விட்டு அவரை நிந்தித்துப் பழி கூறும் செயல்களில் ஈடுபட்டார்.

அமெரிக்காவில் தனக்குக் கிடைக்கும் பாராட்டுகளைச் சுவாமிஜி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுபோலவே, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அவரது பெருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க எண்ணி நடைபெறும் செயல்களையும் அவர் பொருட்படுத்தவில்லை. நியூயார்க்கிலிருந்து 26 ஏப்ரல் 1894 அன்று இசபெல் மெக்கிண்ட்லிக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்படுகிறார்.

எனது நாட்டு மக்கள் (மஜும்தார் மற்றும் அவரைப் போன்வர்கள்) என்னைப்பற்றி பேசும் அவதூறுகள் பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் எனக்கு ஒன்றைப்பற்றித் தான் கவலை. எனக்கு வயதான ஒரு தாய் இருக்கிறார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவர் அனுபவித்து வந்திருக்கிறார்.

அந்தத் துயரங்களுக்கு இடையிலும் இறைப்பணிக்காகவும் மனித சேவைக்காகவும் நான் துறவறம் பூண்டதைப் பொறுத்திருந்தார். எந்தக் குழந்தையை மற்ற எல்லாக் குழந்தையைக் காட்டிலும் அன்பு செலுத்திப் போற்றி பாலூட்டி வளர்த்தாரோ அந்தக் குழந்தை மஜும்தார் கூறுவதுபோல ஒரு மிருகத்தனமான வாழக்கையைத் தொலைதூரத்திலுள்ள ஒரு நாட்டில் வாழ்கிறான் என்ற கடும் பழிச்சொற்களைக் கேள்விப்பட்டால் அவர் எவ்வளவு வேதனை அடைவார்.

அவர் மனம் எப்படிக் குன்றிப் போகும், அவர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார் என்பதை நினைத்துத்தான் என் மனம் வருந்துகிறது. ஆனால் கடவுள் உயர்ந்தவர் யாராலும் அவருடைய குழந்தைகளுக்குக் களங்கம் ஏற்படுத்தவோ காயம் ஏற்படுத்தவோ முடியாது.

சுவாமிஜி கேம்ப்ரிட்ஜில் தொடர் சொற்பொழிவுகள் செய்து வந்தார், 17 டிசம்பர் 1894 அன்று திருமதி ஒலி புல்லின் வேண்டுகோளுக்கு இணங்க அவருடைய இல்லத்தில் இந்தியப் பெண்களின் உயர்ந்த குறிக்கோள்கள் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.

இந்தச் சொற்பொழிவு, குறிப்பாக, சில பெண்களின் மனத்தில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சுவாமிஜிக்கே தெரியாமல் சில அமெரிக்கப் பெண்கள் இந்தியாவில் உள்ள சுவாமிஜியின் அன்னைக்குக் கடிதம் ஒன்றுடன் குழந்தை ஏசு தனது அன்னை மேரியின் மடியில் வீற்றிருக்கும் அழகானதொரு படத்தையும் அனுப்பி வைத்தனர்.

சுவாமிஜியின் உரையைப் பற்றி திருமதி புல் எழுதுகிறார்.

வேதங்களிலிருந்தும் சமஸ்கிருத இலக்கியம் மற்றும் நாடகங்களிலிருந்தும் உயர்வான கொள்கைகள், இன்றைய விதிமுறைகளில் இந்தியப் பெண்களுக்குச் சாதகமாக உள்ளவை ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட பின்னர் மிக்க மரியாதையுடன் தனது தாயின் பரிசுத்தமான, சுயநலமில்லாத அன்புதான் தன்னை இந்த வழியில் செலுத்தி முடிந்த அளவு நல்லதைச் செய்யவும், துறவறத்தை மேற்கொள்ளவும் உந்துதலாக இருந்தது என்று தன் அன்னைக்கு ஓர் அர்ப்பணமாக அவரது உரை அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top