சுவாமிஜியின் புனிதமான அன்னை புவவேசுவரி தேவி:
பதினாறு வயதுடைய விசுவநாத தத்தரை மணந்தபோது புவனேசுவரி தேவியின் வயது பத்து மட்டுமே. புவனேசுவரி தேவியை மனைவியாக அடைவதற்கு விசுவநாதர் கொடுத்து வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்துப் பண்பாட்டின் சின்னமாய். கணவருக்கு உற்ற துணையாய், அவருடைய பெரிய கூட்டுக் குடும்பத்தின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொள்பவராய் புவனேசுவரி தேவி இருந்தார்.
பாதுகாக்க வேண்டிய சிறிய மாமனாரும் அவரது மனைவியும் மாற்றுப் புடவை கூடத் தராமல் அநீதி இழைத்துக் கடுமையாக நடத்திய போதிலும் வாய் திறவாது அதைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளும் மனவுறுதி கொண்டவராய் நடந்து கொண்டார் புவனேசுவரி தேவி. கணவன் வீட்டாரின் அநீதிகளை அமைதியாகத் தாங்கிக் கொண்டார் அவர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகே இதைக் கவனித்த அவருடைய கணவர் இவ்வளவு சம்பாதித்தும் எவ்வாறு என் மனைவிக்கு வயிறார உணவு கிடைக்காததை நான் காண்கிறேன். என்று ஒருமுறை தன் மனவேதனையை வெளிப்படுத்தினார். அவ்வாறு கூறியும் அருவடைய சிற்றப்பா மற்றும் சித்தியிடம் அவருடைய சொற்கள் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.
புவனேசுவரி தேவி தனக்குத் திருமணம் நடைபெற்ற பத்தாவது வயதிலிருந்து 1911-ல் இறக்கும்வரை ஏறக்குறைய தன் வாழ்நாள் முழுவதும் தத்தர் குடும்பத்திலேயே வாழ்ந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாக விசுவநாத தத்தர் விருப்பம் இல்லாதிருந்தும் வேறு இடத்திற்குக் குடிபெயர நேர்ந்தது. அந்தப் புதிய இடத்தில்தான் நரேந்திரர் தன் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டார் பூபேந்திரநாத தத்தர் எழுதுகிறார்.
பிரிவினைக்குப் பின்னர் எங்களது முன்னோர் வாழ்ந்த வீட்டிலிருந்து குடிபெயர்ந்து 7, போஸ்பாரா சந்தில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு எங்கள் குடும்பம் செல்ல நேர்ந்தது. அங்குதான் நரேந்திரர் இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு எழுவதற்குப் படித்தார்.
ஆனாலும் சிற்றப்பா பயந்ததுபோல விரைவிலேயே தத்தர் குடும்பம் தனது முன்னோர் வாழ்ந்த வீட்டிற்கே திரும்பி விட்டது. விசுவநாத தத்தரின் மறைவுக்குப் பின்னர் சுவாமிஜியின் குடும்பம் 7, ராம்தனு பாசு சந்தில் உள்ள தாய்வழிப் பாட்டியான ரகுமணி தேவி (1825-1911) வீட்டில் குடியேறியது. இந்த வீட்டைத்தான் சுவாமிஜி கேத்ரி அரசருக்கு எழுதிய கடிதத்தில் குடிசை என்று குறிப்பிட்டுள்ளார். பூபேந்திரநாதர் எழுதுகிறார்:
நாங்கள் 1903 ஆம் ஆண்டு வரை அவருடன் (பாட்டியுடன்) தங்கினோம். பாட்டி எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். எங்களுக்காகப் பல இன்னல்களை ஏற்றுக்கொண்டார். எங்கள் மீது சித்தி கொடுத்திருந்த வழக்கை எதிர் கொள்வதற்காக வாடகைக்கு விட்டிருந்த தன்னுடைய நிலத்தைக் கூட அவர் விற்க வேண்டியிருந்தது.
கூட்டுக் குடும்பத்தின் தலைவரான மனசாட்சியற்ற சிற்றப்பா பிறருடன் சேர்ந்து கொண்டு நியாயமாக அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை ஒவ்வொரு முறையும் மறுத்து வந்தார். அத்தகைய சூழலில் புவனேசுவரி தேவி அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அனுபவித்த வேதனைகள் எவ்வளவு இருக்கும் என்பதைக் கற்பனை செய்து விடலாம்.
ஆண் குழந்தைக்காகப் புவனேசுவரி தேவியின் பிரார்த்தனையும் விரதங்களும்:
விசுவநாதருக்கும், புவனேசுவரிக்கும் நான்கு மகன்களும், ஆறு மகள்களும் பிறந்தனர். அவர்களது முதல் குழந்தையான மகனும், இரண்டாவது குழந்தையான மகளும் மழலைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். அவர்களுக்குப் பிறந்த அடுத்த மூன்று குழந்தைகளும் பெண்கள் ஆவர். ஓர் இந்துக்குடும்பத்தில் ஆண் குழந்தை பெரிதும் வரவேற்கப்பட்டது.
எனவே இயல்பாகவே, புவனேசுவரி தேவி ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பினார். இந்துப் பெண்மணிகள் காலங்காலமாகவே வாழ்க்கையின் துனபங்களைப் கடப்பதற்கு இறைவனின் அருள் வேண்டிப் பிரார்த்தனை செய்வது வழக்கம். தங்கள் தேவைகளையும் துன்பங்களையும் இறைவனிடம் அவர்கள் பிரார்த்தனைகள் மூலம் தெரிவிப்பார்கள்.
பல் வேறு விரதங்களைக் கடைப்பிடித்தும், புனித நூல்களைப் படித்தும் அவருடைய அருளை நாடுவார்கள். சிவபெருமானைக் குறித்து தங்கட்கிழமைகளில் உபவாசம் மேற்கொள்வது மற்றும் பிரார்த்தனைகள் செய்வது ஆகிய சோமவார விரதத்தைப் புவனேசுவரி கடைப்பிடித்தார். புவனேசுவரி தேவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்க வேண்டி வாராணசி வீசேசுவர சிவனிடம் பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் செய்யுமாறு வாரணிசியில் வசித்த குடும்பத்தின் மூத்த அத்தை ஒருவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
புவனேசுவரி தேவி எல்லா விரதங்களையும், நெறிமுறைகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்தார். சிவபெருமானிடம் அவர் காட்டிய மனமார்ந்த பக்தி பலனளித்தது. ஒருநாள் இரவு அவருக்குத் தெளிவான கனவொன்று ஏற்பட்டது.
சிவபெருமான் தியானத்திலிருந்து எழுந்து ஓர் ஆண் குழந்தையாக வடிவெடுத்து அவருக்குப் பிறக்க இருப்பதை அந்தக் கனவில் கண்டார். 12 ஜனவரி 1863 திங்கட்கிழமையன்று ஒரு மங்கலமான வேளையில் பாட்டனார் துர்க்கா பிரசாதரின் சாயலில் அவர்களது மகன் நரேந்திரர் பிறந்தார் அன்னையின் இனிய குரலும், சங்கீதத்தில் விருப்பமும், அளப்பரிய நினைவாற்றலும் நரேந்திரர் இயல்பாகவே பெற்றிருந்தார்.
புவனேசுவரி தேவியைப் பற்றி பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, புவனேசுவரி பக்தியில் சிறந்தவராக விளங்கினார் நாள்தோறும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் அதிகமாகப் பேசுவது கிடையாது. ஆற்றல், அடக்கம் மற்றும் எல்லாச் சூழ்நிலைகளையும் இறைவனின் திருவுள்ளமாக ஏற்றுக் கொள்வது ஆகியவை இந்தப் புனிதமான இந்துப் பெண்மணியின் இயல்பாக இருந்தது. ஏழைகளிடமும், ஆதரவற்றவர்களிடமும் அவர் மிகுந்த பரிவு கொண்டிருந்தார்.
விசுவநாதரைப் போலவே இனிய குரல் பெற்றிருந்த அவர் புராண நாடகங்களில் கேட்ட ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய பாடல்களை இனிமையாகப் பாடக் கூடியவர். பக்திப் பாடல்களைப் பாடியவாறு அவரது வீட்டிற்குப் பிச்சை ஏற்க வரும் ஆண்டிகளின் பாடல்களை ஒருமுறை கேட்டவுடனேயே திரும்பப் பாடும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவரது சிறப்பான நினைவாற்றலை அனைவரும் அறிந்திருந்தன.
இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் நீண்ட பகுதிகள் அவருக்கு மனப்பாடமாகத் தெரியும். அது மட்டுமல்லாமல். இந்த அழிவற்ற இதிகாசங்களின் உட்கருத்தை உள்வாங்கி அது உணர்த்தும் உயர்வான இந்துப் பண்பாட்டுடன் ஒன்று சேர்த்துத் தம் குழந்தைகளுக்குப் பரம்பரை சொத்தாக அளித்திருந்தார்.
வரும் நாட்களில் தன் எழுச்சிமிகும் கருத்துகளின் தாக்கத்தினால் உலகின் ஆணிவேரையே அசைக்கப் போகும், புதியதோர் உலகம் எழுவதற்கு அடிக்கற்கள் அமைக்கப் போகும், அக்காலத்தலைமுறையில் பிறந்தவர்களுள் தலைசிறந்த மனிதராக விளங்கப் போகும் அந்த நரேந்திரன் என்னும் குழந்தை இவ்வாறுதான் விவசுநாதருக்கும், புவனேசுவரி தேவிக்கும் மகனாகப் பிறந்தது.
சுவாமி விவேகானந்தர் தனது பெற்றோருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். அவர்களுடைய ஏழாவது மற்றும் எட்டாவது குழந்தைகள் ஆகிய இருவரும் மகள்கள் ஆவர். கடைசி இரு குழந்தைகளான மகாந்திரநாதரும், பூபேந்திரநாதரும் மகன்கள் ஆவர். இவ்விருவரும் நீண்ட காலம் வாழ்ந்தனர்.
தாய்மையின் தலைசிறந்த பண்பு தியாகம் ஆகும், அது அன்னையரின் இரத்தத்திலேயே ஊறியுள்ளது. இறைவனின் வரமாகக் கிடைத்த மகனை புவனேசுவரி தேவி மிகுந்த அக்கறை, எல்லையற்ற பொறுமை, தொடர்ந்த பிரார்த்தனைகள் ஆகியவற்றுடன் வளர்த்தார். அவரது உயிரே குழந்தை நரேந்திரருடைய குழந்தைப் பருவத்தை நோக்கும் போது அவருக்குரிய சிறப்பான குணநலன்கள் உருவாவதில் எந்த அளவுக்கு அவரது அன்னையின் தாக்கம் இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவருடைய அன்னையின் ஒப்பற்ற ஆளுமைத் திறனுக்குப் பின்வரும் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டாகும். ஒருசமயம் முறையான காரணம் இல்லாமலேயே நரேந்திரர் தன் பள்ளி ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார். அவர் இதைப் பற்றிக் கூறியபோது அவரது அன்னை கூறினார்.
மகனே, நீ செய்தது சரியானதே என்னும்போது அதற்காகத் தண்டிக்கப்பட்டால்தான் என்ன? உனக்கு வரும் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியற்றதாக அநீதியாக இருந்தாலும் உனக்குச் சரியென்று தோன்றுவதையே எப்போதும் செய்வாயாக! பிற்காலத்தில் சரியானது, இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று தனக்குத் தெளிவாகத் தோன்றிய முடிவை எடுத்துச் செயல்பட்டதில் மிகவும் நெருங்கியவர்களும், வேண்டியவர்களும்கூட சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமல் அதைத் தவறென்று நோக்கியபோது பலமுறை நரேந்திரர் மிகுந்த துயரத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், வாழ்வின் இறுதிவரையில் அவர் கற்றுக் கொண்டதும் உறுதியாகக் கடைப்பிடித்ததுமான பொன்மொழி வாழ்வோ சாவோ கொண்ட கொள்கையில் உறுதியாக இரு என்பதாகும்.
சுவாமிஜியின் அன்னை தன் குழந்தைகளை நேர்மை, தூய்மை, கண்ணியம் மற்றும் மனிதநேயம் கொண்டவர்களாக விளங்குமாறு எப்போதும் அறிவுறுத்தி வந்தார். உயர்ந்த வாழ்விற்கு வேண்டிய என்றும் மாறாத வாழ்க்கை நெறிகளை அவர்களுடை இளம் மனங்களில் அவர் ஆழமாக விதைத்தார்.
அவருடைய அன்னையின் பிற ஒப்பற்ற உயர்பண்புகள்
புவனேசுவரி பெரிய, சிக்கலான தன் கூட்டுக் குடும்பத்தைத் திறம்பட நிர்வகித்தார். மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டிருந்த அவர் தன்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பண்பாட்டுக் கல்வி வழங்குவதில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார்.
அவர் தன்னுடைய மூத்த இரு மகள்களை பெத்யூன் கல்லூரிக்கும், இளைய ஒரு மகள்களை ராம்பாகன் மிஷன் பள்ளிக்கும் கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்தார். பெத்யூன் கல்லூரி முதல்வரான செல்வி காமினி சீல் என்பவரிடம் மூத்த மகளான ஜோகேந்திர பாலா ஆங்கிலம் கற்றார். பேராசிரியர் மெக்டொனால்டு ஜோகேந்திர பாலாவின் வீட்டிற்குச் சென்றும் அவருக்குக் கல்வி கற்பித்தார்.
இந்திய மரபுவழி பண்பாட்டின் சிறப்பைக் குறித்துப் பெருமிதம் கொள்ள இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையில் நவகோபால் மித்ரா ஏற்பாவு செய்த ஆண்டுதோறும் நிகழும் கலைவிழாவில் 1867-ல் தத்தர் குடும்பத்தினரில் பெரும் பாலோர் பங்கெடுத்துக் கொண்டனர்.
புவனேசுவரி தேவியின் மகள்களும் தாங்கள் செய்த கைவினைப் பொருள்களின் மாதிரிகளை அங்கு வைத்து அந்தக் கலை விழாக்களில் பங்கேற்றனர், ஒருமுறை புவனேசுவரி தேவியின் மகள் ஹரமணி சிவப்பு வெல்வெட்டில் சரிகை வேலைப்பாடுகள் அமைந்த துணிக்காகவும், மகன் நரேந்திரர் உடற்பயிற்சியில் சிறந்து விளங்கியதற்கும் முதல் பரிசுகளைப் பெற்றனர். கொல்கத்தாவில் 1880 இல் நடைபெற்ற யூபெர்ட் கண்காட்சியில் அவருடைய மகள் ஜோகேந்திர பாலா மணிகளால் செய்த மாலைக்காக ஒரு பதக்கம் பெற்றாள்.
கடுமையான வீட்டு வேலைகளுக்கும் நடுவில் சுவாமிஜியின் அன்னை ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு நேரம் ஏற்படுத்திக் கொண்டார், பிற்காலத்தில் சகோதரி நிவேதிதை மற்றும் சகோதரி கிறிஸ்டைன் அவரைச் சந்தித்தபோது அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாட அவரால் முடிந்தது.
தன்னுடைய மூன்று மகன்களுக்கும் ஆங்கில தொடக்கப் பாடங்களை அவரே கற்றுத் தந்தார் அவற்றுடன் நல்லொழுக்கங்களையும் அவர்களுக்கு அவர் கற்பித்தார். வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள். துன்பங்கள் ஆகியவற்றுக்கு நடுவிலும் ஒருவர் எக்காரணத்தைக் கொண்டும் நல்லொழுக்க விதிகளைக் கைவிடக் கூடாது என்று ஆணித்தரமாக அவர்களுக்கு அவர் கற்றுத் தந்தார்.
ஒவ்வொரு நாளும் இராமாயணம், மகாபாரதம், அந்தாளைய வங்க மொழி இலக்கியம் ஆகியவற்றைப் படிப்பதற்கும் வங்கக் கவிதைகள் இயற்றுவதற்கும் போதிய நேரத்தை அவர் ஒதுக்கிக் கொண்டார். அவர் கையால் வங்கமொழியில் எழுதும் எழுத்துக்கள் மிகவும் அழகாக இருக்கும்.
அவருடைய அற்புதமான நினைவாற்றலின் சிறப்பினால் நரேந்திரருக்கு இதிகாசம் மற்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ள பல கதைகளை அவரது மடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. சுவாமிஜி, அன்னையிடம் தாம் கற்ற பல கதைகளைச் சகோதரி நிவேதிதையிடம் பகிர்ந்து கொண்டார். சகோதரி நிவேதிதை இந்து மதத்தின் தொட்டில் கதைகள் என்னும் தம்முடைய நூலில் இக்கதைகளைத் தனக்கே உரிய சிறப்பான நடையில் எழுதி அவற்றுக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்துள்ளார்.
புவனேசுவரி தேவியும், விசுவநாதரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். விசுவநாதர் இளம் விதவைகள் மறுமணத்தைப் பெரிதும் ஆதரித்தார். சுற்றுப் பக்கத்தவரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அவர்கள் வசித்த பகுதியில் விதவைகள் மறுமணம் இரண்டு நடைபெற்றபோது அதற்கு ஆதரவு அளிப்பதில் கணவருக்குப் புவனேசுவரி தேவி உறுதுணையாக இருந்தார்.
அவருடைய கணவர் நீதிமன்றத்தால் விற்கப்படும் பெரும் சொத்துகளை விலைக்கு வாங்கி அவற்றை மீண்டும் விற்பது வழக்கம். அத்தகைய சொத்து ஒன்றை அவர் புவனேசுவரி தேவியின் பெயரில் வாங்கிங வாடகைக்கு விட்டிருந்தார்.
ஒருமுறை அதில் குடியிருந்த சில இஸ்லாமியர்களால் வாடகை தர முடியவில்லை. எனவே அதன் தொடர்பாக விசுவநாதரை அவர்கள் அணுகினர், விசுவநாதர் சொத்துக்குச் சட்டப்படி உரிமையாளரான புவனேசுவரி தேவியிடம் செல்லுமாறு அவர்களிடம் கூறிவிட்டார்.
வாடகை தர இயலாத நிலையை அவர்களிடம் கேட்டறிந்த புவனேசுவரி தேவி அதற்குச் சம்மதித்து அவர்களுடைய கவலையைப் போக்கினார். அதன் பின்னர், அங்குக் குடியிருந்தவர்கள் நாளடைவில் வாடகை தராதது மட்டுமல்லாமல் அங்கு நீண்ட நாள்கள் குடியிருந்ததால் வீட்டின் உரிமையாளர்களாகவும் ஆகிவிட்டனர்.
புவனேசுவரியின் பெருந்தன்மைக்கும் தியாக உணர்வுக்கும் மற்றொரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அவருடைய மகள் ஜோகேந்திர பாலா 1891 ல் இருபத்தைந்து வயதில் சிம்லா மலையில் தற்கொலை புரிந்துகொண்டார். அதன் பின்னர், அவருடைய மருமகன் மறுமணம் செய்து கொண்டார். தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்தப் புதுமணம் கொண்ட மனைவியைத் தன் வீட்டில் வரவேற்றதுடன் அவளைத் தன் மகள் போலவே புவனேசுவரி தேவி நடத்தினார்.
1900 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருவாரங்களுக்குத் தொடர்ந்து பெரும் மழை பெய்தபோது புவனேசுவரி தேவி தன் மகன் பூபேந்திரநாதர் மூலம் உணவுப் பொருள்களை காங்குர்காச்சி யோகோத்யானுக்கு (ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம்) அனுப்பி வைத்தார். அவற்றைக் கொடுப்பதற்காக இடுப்பளவு நீரில் பூபேந்திரநாதர் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
1884 ல் கணவர் மறைந்தபோது புவனேசுவரி தேவிக்கு வயது 43 விசுவநாதரின் மறைவுக்குப் பின்னர் குடும்ப நிலைமை பெரும் வீழ்ச்சியிலிருந்து தப்புவதற்கு புவனேசுவரியின் திறமையே காரணமாகும்.
புவனேசுவரி தேவியின் அறிவுக் கூர்மையையும், துணிவுடன் பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் திறமையையும் சுவாமி சாரதானந்தர் விவரிக்கிறார்:
கணவருடைய மறைவால் துயர நிலைக்கு வீழ்ந்துவிட்ட அவரது(புவனேசுவரி தேவி) மனவுறுதி பெருமளவுக்குச் சோதிக்கப்பட்டது. அந்தச் சோதனையான நாட்களில் பொறுமை, அமைதி, சிக்கனம் அவ்வபோது மாறுகின்ற சூழ்நிலைக்குத் தக்க நடத்தை போன்ற உயர்ந்த நற்பண்புகளை அவர் வெளிப்படுத்தினார்.
மாதம் 1000 ரூபாய் செலவு செய்து குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்து வந்தவருக்கு 30 ரூபாய்க்குள் தன்னையும், தன் மகன்கள் மற்றும் மகள்களையும் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனாலும் ஒருநாள் கூட அவர் மனம் தளர்ந்ததை ஒருவரும் கண்டதில்லை.
மிகக் குறைந்த வருவாயைக் கொண்டு குடும்பத்தைத் திறம்பட நிர்வகித்த அவருடைய திறமையால் பார்ப்பவர்களுக்கு அவரது குடும்பச் செலவு உண்மையில் ஆனதைவிட கூடுதலாகவே தோன்றியது. கணவருடைய எதிர்பாராத மறைவுக்குப் பின்னர் புவனேசுவரி அடைந்த துன்ப நிலையை எண்ணிப் பார்க்கவும் நெஞ்சம் நடுங்குகிறது.
குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்கு நிரந்தர வருவாய் ஏதும் இல்லை. இந்நிலையில் அவருடைய வயது முதிர்ந்த தாய். வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்ட மகன்கள் மற்றும் மகள்களின் செலவு, அவர்களது கல்விக்கான தொகை ஆகியவற்றுக்குப் புவனேசுவரி தேவி ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவருடைய கணவரின் உதவியால் முன்னுக்கு வந்த உறவினர்களோ அவர்களது துன்பநிலையைக் கண்டும் புவனேசுவரிக்கு உதவி செய்ய முன் வரவில்லை. அதற்கு மாறாக, சட்டப்படி அவருக்குரிய உடைமைகளைக் கூட எவ்வாறு அபகரித்துக் கொள்ளலாம் என்றே திட்டமிட்டனர்.
நற்பண்புகள் அனைத்தும் கொண்ட அவரது மூத்த மகன் நரேந்திரருக்கோ பல இடங்களில் முயற்சி செய்தும் சரியான வேலை அமையவில்லை. மேலு<ம், உலகப் பற்று அற்றவராய்த் துறவற வாழ்க்கை மேற்கொள்ள அவர் தயார் செய்து கொண்டிருந்தார்.
இத்தகைய துன்பநிலையில் இருந்த போதிலும் தன்னுடைய பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றி வந்த புவனேசுவரி தேவியைப் பார்ப்பவர்கள் மனத்தில் இயல்பாகவே அவரிடம் பக்தியும் மரியாதையும் மேலோங்கியது.
புவனேசுவரி தேவியின் சிறப்பான குணநலன்கள் அவருடைய மகனிடம் ஆழ்ந்த வியப்பை எழுப்பியது. அவருடைய துன்பநிலைக்கான காரணங்கள் பலப்பல. முன்னோரின் வீட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டது, நியாயமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துகள் பறிபோனது, நிறைய செலவு வைத்த நெடு நாளைய வழக்குகள், தீவிரமான பணப் பிரச்சினை மற்றும் ஜோகேந்திர பாலாவின் தற் கொலை என்று அவற்றைக் குறிப்பிடலாம்.
இது தவிர அவரது மூத்த மகன் உடல் இல்லாமை, சட்டம் படிக்க இங்கிலாந்து சென்ற இரண்டாவது மகன் மகேந்திரநாதரைப் பற்றி எந்தவித தகவலும் இல்லாமை ஆகியவையும் சேர்ந்து அவருக்குப் பெரும் துன்பத்தை அளித்தன. சுவாமிஜியின் மறைவிற்குப் பின்னரே மகேந்திரர் கல்கத்தா திரும்பினார்.
நிதி இழப்பு மற்றும் மனத்தை உலுக்கும் துயர சம்பவங்கள் ஆகியவற்றின் இடையே 1903-ல் புவனேசுவரி தேவியின் மகன் பூபேந்திரநாதர். 1907 ல் யுகாந்தர் என்ற இதழின் ஆசிரியராக இருந்தபோது (புரட்சி இயக்கத்தின் வங்க இலக்கிய கிளை) தேசிய விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு வருட கடுங்காவல் தண்டனைக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான அன்றே அவர் சகோதரி கிறிஸ்டைனிடம் பண உதவி பெற்று அவருடைய அறிவுரையின்படி கொல்கத்தாவை விட்டு புறப்பட்டார். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின்னர் காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் தப்பி அவர் அமெரிக்காவிற்கு மாறுவேடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். காவல் துறையோ பேலூர் மடத்தில் தேடி அங்கு அவரைக் காணாது குழம்பியது.
வங்கப் பெண்மணிகள்ல இத்தகைய வீரமகனைப் பெற்றதற்காகப் புவனேசுவரி தேவியைப் பாராட்டினார்கள். புவனேசுவரி தேவி துயரத்துடன் இவ்வாறு கூறினார். பூபேனின் பணி இப்பொழுதுதான் தொடங்குகிறது. நான் அவனை நாட்டிற்காக அர்ப்பணித்துவிட்டேன். இந்தச் சொற்கள் அவரது பெருந்தன்மையும் அஞ்சா நெஞ்சையும் நமக்குப் பெரிதும் வெளிப்படுத்துகின்றன.
பிற்காலத் தலைமுறையினருக்கு எந்த அளவுக்குப் புவனேசுவரி தேவியின் தாக்கம் அவரது பெருமை வாய்ந்த மகன் விவேகானந்தரின் வாழ்வில் இருந்திருக்கும் என்பது தெரியவில்லை. விவேகானந்தர் இலக்கியத்தில் சிறிதளவு அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாத் தவிர வேறு எந்தச் செய்தியும் நமக்குக் கிடைக்க வில்லை. சுவாமிஜியுடைய அன்னையின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே கிடைத்துள்ளது. சுவாமிஜியின் தந்தையின் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.